Ad

புதன், 12 ஜனவரி, 2022

காங்கிரஸ் Vs சி.பி.எம்: தொடரும் 'அரசியல்' படுகொலைகளால் பற்றி எரியும் கேரளா! - என்ன நடக்கிறது அங்கு?

அடுத்தடுத்து தொடரும் அரசியல் படுகொலைகளால், கொலைக்களமாக மாறிவருகிறது கேரளா. கடந்த மாதம்தான் ஆலப்புழா மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ - பா.ஜ.க இடையே நிலவிவந்த பிரச்னையின் காரணமாக இருதரப்பிலும் அரசியல் படுகொலைகள் நடந்து கேரளாவையே பதறவைத்தன. இந்த சூடு தணிவதற்குள், தற்போது காங்கிரஸ் - சி.பி.எம் கட்சிகளுக்கு இடையேயான மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட எஸ்.எஃப்.ஐ மாணவர் செயற்பாட்டாளர் தீரஜ்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று முன் தினம் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவான கே.எஸ்.யூ-வுக்கும் (Kerala Students Union -KSU), சி.பி.எம் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ-க்கும் (Students' Federation of India-SFI) இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில், எஸ்.எஃப்.ஐ மாணவர் செயற்பாட்டாளரும், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவருமான தீரஜ் என்ற மாணவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். படுகாயமடைந்த மேலும் மூன்று எஸ்.எஃப்.ஐ மாணவர்களில் ஒருவர் உயிருக்குப் போராடிவரும் நிலையில், சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

படுகொலை எதிரொலி:

இருப்பினும் இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் - சி.பி.எம் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, படுகொலையான மாணவன் தீரஜின் சொந்த மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மகாராஜா கல்லூரியிலும் எஸ்.எஃப்.ஐ - கே.எஸ்.யூ மாணவர் அமைப்பினருக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, 8 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். தொடர்ந்து கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் பதற்றம் நிலவுவதால், காவல்துறை கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டிருக்கிறது.

தீரஜ்

முதல்வர் கண்டனம்:

இந்தச் சம்பவம் குறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``இடுக்கியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி மாணவரும், எஸ்.எஃப்.ஐ செயல்பாட்டாளருமான தீரஜ் ராஜேந்திரன் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் தருகிறது. இந்தக் கொலைச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. கல்லூரிகளில் கலவரத்தை உருவாக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. தீரஜ் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

பினராயி விஜயன்

சி.பி.எம் குற்றச்சாட்டு:

இந்தச் சம்பவம் குறித்து சி.பி.எம் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், ``இது திட்டமிட்ட கொலை. மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் 21-வது இடதுசாரி கட்சி நிா்வாகி கொலை இது. இந்த வன்முறை அரசியலை பா.ஜ.க, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையை சீா்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது" என குற்றம் சாட்டியிருக்கிறார்.

Also Read: கேரளா: மாணவரின் இதயத்தில் பாய்ந்த கத்தி... கொலையில் முடிந்த எஸ்.எஃப்.ஐ - கே.எஸ்.யூ மாணவர் சங்க மோதல்

மேலும், சி.பி.எம் கட்சியின் கல்வித்துறை அமைச்சர் பிந்து பேசியபோது, ``இளைஞா் காங்கிரஸ் தலைவா் தலைமையிலான கும்பல் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவா்கள் மீதான இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றிருக்கிறார்.

கேரளா

காங்கிரஸ் மறுப்பு:

ஆனால் கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன், ``இதுபோன்ற வன்முறைகளை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. கேரளாவில் எந்தக் கட்சி அதிகமான வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்பதை மக்களே தீா்மானிக்கட்டும். மாநிலத்தில் நடைபெறும் அனைத்து தாக்குதல்களுக்கும் பின்னணியில் யாா் இருக்கின்றனர் என்பதை மக்கள் அறிவார்கள். எனவே, எங்கள் மீது குற்றம்சாட்ட சி.பி.எம் கட்சிக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த கொலைக்கான பின்னணி குறித்து சி.பி.எம் கட்சியினர் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!" என காட்டாமாக பதிலளித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கே.எஸ்.யூ மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிகில் பைலியை கேரள காவல்துறை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், தப்பியோடிய பிற மாணவர்களையும் காவல்துறையினர் மிகத்தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-sfi-student-activist-political-murdered-in-college

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக