Ad

திங்கள், 17 ஜனவரி, 2022

என்ன நடந்தாலும் வாழ்க்கையை வெறுக்கக் கூடாது! #MyVikatan

2021-ம் ஆண்டு வெளியான படம் 'வாழ்'. From the director of 'அருவி' என்ற மனநிலையுடன் பெரிய எதிர்பார்ப்புடன் அந்தப் படம் பார்த்தேன். சிறிதாக ஏமாற்றினாலும் அருவியை போல வாழ்க்கையை பற்றி மிக முக்கியமான படிப்பினையை கற்றுத் தந்தது அந்தப் படம்.

'ஊரே தொரத்தி அடிப்பது, ஊரே உன்னை பற்றி புறணி பேசுவது மாதிரியான எவ்வளவு கடினமான, இக்கட்டான சூழல் வந்தாலும் உன் மீது தவறு இல்லையெனில் நீ எந்த தவறான முடிவுக்கும் செல்லாமல் அமைதியாக இரு...' - இதுவே வாழ் சொன்ன பாடம். அருவியிலும் அதே கருத்தை, தற்கொலைகளுக்கு எதிரான கருத்தியலை அழுத்தமாக பதிவு செய்திருப்பார் அருண்பிரபு புருஷோத்தமன்.

வாழ்க்கையில் நமக்கு பெரிய வலிகளை உண்டாக்கக்கூடிய நான்கு விஷயங்கள் என்றால் தொடர் வறுமை, குடும்ப உறுப்பினர்களின் இழப்பு, கடுமையாக உழைத்த போதிலும் தோல்வி, நம்மை வைத்து வேலை வாங்கியவர்கள் நமக்கு செய்யும் துரோகம்... இந்த நான்கையும் உணர்ந்தவர்களுக்கு அருவி மாதிரியான படங்கள் நல்ல மருந்து. மேலும், அருவி படத்தில் எய்ட்ஸ் நோயே வந்தாலும் வாழ்க்கையை வெறுக்காமல் அதன் போக்கில் வாழ் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அருவி கிளைமேக்ஸில் உச்சம் தொடும் அன்பின் கொடி பாடலின் போது நம்மை அறியாமல் கண்ணீரும், எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்த போதிலும் அருவிக்கு "லவ் யூ அருவி" என்று பீட்டர் காதல் கடிதம் தந்த போது புன்னகையும் வந்தது. அந்த இரண்டு உணர்வுகளும்தாம் "வாழ்" படத்தில் மிஸ்ஸிங். அதுவே படத்தின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

வாழ் | Vaazhl

உலகின் மிகச்சிறந்த தன்னம்பிக்கை படங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதல் பத்து இடங்களில் இடம்பிடிக்கும் அருவி. அவ்வளவு அழுத்தமான படத்தை தந்த அருண் இந்த ஆண்டு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து நம்மையும் ஏமாற வைத்துவிட்டார். இருப்பினும் வாழ் படத்தில் இளைஞனுக்கும் சிறுவனுக்குமான சிநேகம் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் குறிப்பாக அம்மா அப்பாவை இழந்தபோதிலும் அந்த சிறுவன் எந்த வருத்தமும் (இறப்பின் விவரம் தெரியாத வயதுடைய சிறுவன்) இல்லாமல் எல்லாவற்றையும் மறந்து அடர்காட்டில் மின்மினிப்பூச்சிகளை எட்டிப்பிடிக்கும் காட்சிகளை அவ்வளவு ரசிக்க முடிந்தது.

ஆனாலும் அருவி படம் அளவுக்கு வாழ் படம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. "அருவி" படத்திற்கு ஆனந்த விகடனில் 55 மதிப்பெண்களும், "வாழ்" படத்திற்கு "40" மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் இயக்குனர் அருண் வாழ்க்கையில் இது மிகப்பெரிய ஏற்ற இறக்கம். எய்ட்ஸ் நோயாளிகளை பற்றி மிக உண்மையாக காட்டி, நமக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கை வர வைத்த அருண் மீண்டும் "அருவி" மாதிரியான படத்தை தர வேண்டும்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/aruvi-and-vaazhl-movies-comparison

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக