Ad

திங்கள், 17 ஜனவரி, 2022

``கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இப்படித்தான்'' - சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய விவகாரத்தில், தமிழக அரசு மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் அணிவகுக்கின்றன. இந்த நிலையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்தேன்....

``அண்மைக்காலமாக, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே...?''

``அவையெல்லாம் அரசியல் ரீதியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். கடந்த 8 மாதகால தி.மு.க ஆட்சியில், சிவில் சப்ளையில் புதிதாக 8 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இறந்துபோன பத்து லட்சம் பேர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து நீக்கம் செய்துள்ளோம். கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், 30 லட்சம் டன் நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அதில் 12 லட்சம் டன் நெல்லை மட்டுமே அரவை செய்திருந்தார்கள். மீதமிருந்த 18 லட்சம் டன் நெல்லையும் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகுதான் அரவை செய்துமுடித்தது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

1973-ம் ஆண்டிலிருந்து ஒரு லட்சத்து, ஆறாயிரத்து, இருநூற்றைம்பது ஏக்கராக இருந்த குறுவை சாகுபடியை இந்த ஆண்டு குறுவை சாகுபடியின்போது மேற்கொண்டு 60 ஆயிரம் ஏக்கராக அதிகப்படுத்தியுள்ளோம். ஆக, கடந்த 48 ஆண்டுகளில் யாருமே செய்திராத பணியை தி.மு.க அரசு சாதித்துள்ளது. மேலும் கடந்த ஆட்சியில், 375 -ஆக இருந்துவந்த நெல் அரவை முகவரின் எண்ணிக்கையையும் தி.மு.க ஆட்சியில் 535 முகவர்களாக உயர்த்திவிட்டோம்.

இதுதவிர, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திலும் மூட்டை தூக்குபவர்களுக்கு ஒரு மூட்டைக்கு 3 ரூபாய் 25 காசு என்றிருந்த கூலியை, மூட்டைக்கு 10 ரூபாய் கூலி என்ற வகையில், உயர்த்திக் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர். இந்தக் கூலி உயர்வால், இனி ஒரு நபருக்கு ஒருநாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய்வரையில் கிடைக்கும். மேலும் நெல் கொள்முதலின்போது விவசாயிகளிடமிருந்து கமிஷன் தொகை பெறப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பணியாளர்களின் ஊதியத்தையும் உயர்த்திக்கொடுத்து, தவறு நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்தியுள்ளார் தமிழக முதல்வர்.''

``பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்களை தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் கொள்முதல் செய்திருப்பதுவே ஊழலுக்கான அடிப்படைதான் என்று அ.தி.மு.க குற்றம் சாட்டியிருக்கிறதே?''

``துறை அமைச்சராகிய நானேகூட, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்களை கொள்முதலை தன்னிச்சையாக செய்துவிட முடியாது. இதற்கென்று பிரத்யேகமாக ஒரு குழு உள்ளது. இந்தக் குழுவில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ஓர் உறுப்பினராக இருக்கிறார். சிவில் சப்ளை கமிஷனர்தான் இந்தக் குழுவின் சேர்மன். நிதி விவகாரத்திலும் துணைச்செயலாளர் இருக்கிறார். இந்தக் குழுவினர்தான், டெண்டர் அடிப்படையில் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

உதாரணமாக.... கடந்த டிசம்பர் மாதம் பாமாயில் விலையானது ஒரு லிட்டர் 137 ரூபாய் என குறிப்பிட்டிருந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, 125 ரூபாய் விலையில் கொள்முதல் செய்துள்ளது இந்தக் குழு. இதன்மூலம், ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்தவகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் உணவுக் கழகத்துக்கு 48 கோடி ரூபாய் லாபமாக சேமிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், பருப்பு விலையிலும்கூட 99 ரூபாய் என்றிருந்த டெண்டரை கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே மறுபடியும் டெண்டர் கோரப்பட்டது. அதில், 89 ரூபாய்க்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு, கிலோவுக்கு 10 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்தவகையிலும் கடந்த 2 மாதங்களில் உணவுக் கழகத்துக்கு 40 கோடி ரூபாய் லாபமாகக் கிடைத்துள்ளது. ஆக, இப்படி உன்னிப்பாகக் கண்காணித்துவரும் குழுவைத் தாண்டி, இந்தத் துறையில் எப்படி தவறு நடைபெற முடியும்?''

Also Read: எம்.ஜி.ஆர். சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை: அதிமுகவை அதிரவைத்த திமுக அரசின் 'மூவ்'

``ஜனவரி 31-ம் தேதி வரையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருப்பதே, அரசின் நிர்வாக தோல்வியைத்தானே காட்டுகிறது?''

''அப்படியில்லை... 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பொங்கலுக்கு முன்பாகவே பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டது. விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் அல்லது பொங்கல் தினத்துக்குள் வாங்க முடியாதவர்கள், பொங்கல் முடிந்தபிறகும்கூட தங்களுக்கான பரிசுத்தொகுப்பை வாங்கிக்கொள்ள முடியும் என்பதற்காகத்தான் இந்தக் காலநீட்டிப்பை வழங்கியுள்ளோம்.''

பொங்கல் பரிசுத் தொகுப்பு

``பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கக்கூடிய துணிப் பைக்கும்கூட தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது ஏன்?''

''இது கொரோனா காலகட்டம். துணிப் பை தயாரிப்பு நிறுவனங்களில் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் பணியாட்கள் வருவதில்லை. பணி நடைபெறும் இடங்களிலும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். எனவே, தேவையான எண்ணிக்கையில் பைகள் தயார் செய்வதென்பது சவாலாக இருந்தது. மகளிர் சுய உதவிக்குழுக்களிடமும் பை தயார் செய்வதற்கான பணிகள் வழங்கப்பட்டன. எனவே, பை தட்டுப்பாடு பிரச்னை சீராகிவிட்டது.''

Also Read: `நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம்... வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!’ - முதல்வர் ஸ்டாலின்

``தேர்தல் சமயத்தில், பொங்கல் பரிசுத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி வாக்கு கேட்ட தி.மு.க அரசு, இப்போது பணம் வழங்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கிறார்களே?''

''அப்படி தி.மு.க-வினர் எங்கேயும் சொல்லி வாக்கு கேட்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியின்போது பொங்கல் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கியபோது, 'கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாயாக வழங்குங்கள்' என்றுதான் தி.மு.க தலைவர் கூறியிருந்தார். ஆனாலும் அ.தி.மு.க அரசில் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவேதான், தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாயை வழங்கிவிட்டோம்.''

கே.பாலகிருஷ்ணன்

``தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியேகூட, '5 ஆயிரம் பணம் வழங்கவேண்டும்' என கோரிக்கை வைத்திருக்கிறதுதானே?''

``கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கான கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சொல்வார்கள்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், 'மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கான வெள்ள நிவாரண தொகையைப் பெற்று, அதை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கவேண்டும்' என்றுதான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் என்பதையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/this-is-how-the-communist-party-will-do-in-any-alliance-says-minister-chakrabani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக