Ad

திங்கள், 17 ஜனவரி, 2022

`சுட்டிகள் மூலம் பிரதமர் குறித்து அவதூறு?’ -எல்.முருகன், அண்ணாமலையின் கொந்தளிப்பும் பாஜக பார்வையும்!

தமிழகத்தில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகளை வைத்து ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த காட்சி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சியில் மறைமுகமாக இந்தியப் பிரதமர் குறித்துப் பேசப்பட்டிருந்த வசனங்கள் பா.ஜ.க-வினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல், பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் வரை கேலி செய்யும் விதமாக வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் நிர்மல் குமார், பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இடம்பெற்றிருந்த நிகழ்ச்சிக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த தனியார் தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதே நேரத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பைக் குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றிக் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள்" என்று பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக பா.ஜ.க மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி செல்வத்திடம் பேசினோம். ``பத்திரிகை சுதந்திரம் என்பதைத் தாண்டி, குழந்தைகளைப் பயன்படுத்தி இல்லாத ஒரு விஷயத்தை, ஒரு தவறான கருத்துகளைப் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக நமது நாட்டின் பிரதமர் குறித்து ஒரு தகவலைக் கூறும்போது, அதில் உண்மைத் தன்மை இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். பத்திரிகை சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அதிலும் குழந்தைகளைப் பயன்படுத்தி ஒரு தவறான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வது மிகவும் வேதனையை அளிக்கிறது" என்று கூறினார்.

வினோஜ் பி செல்வம்

மேலும், ``இந்த விஷயத்தை பா.ஜ.க தரப்பிலிருந்து, முன்பு தி.மு.க எப்படி பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தினார்களோ, அப்படியெல்லாம் இல்லாமல். எங்களின் எதிர்ப்பை அந்த தொலைக்காட்சிக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவித்துள்ளோம். அதே போல, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தும்போது, பொறுப்புணர்வு வேண்டும். கருத்துச் சுதந்திரம் இருப்பதற்காக எதையும் பேசிவிட முடியாது. அனைத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. அந்த வரைமுறையில் நடந்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அந்த வரைமுறை தாண்டுகிறார்கள் என்பது தான் வேதனையைத் தருகிறது" என்று பேசினார்.

Also Read: `ரிசல்ட்' தெரிந்துதான் அகிலேஷிடம் ஐக்கியம் ஆகிறார்களா உ.பி பாஜக தலைவர்கள்?!

இது தொடர்பாகத் தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் குழந்தைகளைத் தவறாக வழிநடத்தியது தவறான ஒன்று. நாட்டின் பிரதமரையும், நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் தவறான உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் குழந்தைகளின் மூலம் திணிப்பது ஒரு சில தீய சக்திகளின் வக்கிர எண்ணத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை தங்களின் அரசியல் உள்நோக்கத்துக்குப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. இதற்குக் காரணமான நபர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

நாராயணன் திருப்பதி

தொடர்ந்து பேசியவர், ``இந்த விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம் என்று பேசுபவர்கள் யார் என்று பார்த்தால், பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து எரித்தவர்கள், தலைவர் இறந்ததற்குக் கருத்து தெரிவித்த தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சி.பி.எம் கட்சிக்காரர்கள், நிருபரின் மனைவியைத் தவறாகப் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால், இந்த பிரச்னைக்கு, பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனநாயக முறையிலும், அமைதியான முறையிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-private-television-channel-reality-programme-controversy-and-bjp-reaction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக