Ad

வெள்ளி, 7 ஜனவரி, 2022

Doctor Vikatan: அதிகரிக்கும் கொரோனா தொற்று; சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இதுதான் காரணமா?

கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்நிலையில் இப்போது அவர்களுக்கு அவசரமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுவது ஏன்? ஒமிக்ரான், குழந்தைகளை பாதிக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?

- முகிலன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.

``கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைவுதான். மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற கணிப்பும் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தீவிரமாக இருந்த வைரஸ், குழந்தைகளிடம் பெரிய அளவில் வீரியத்தைக் காட்டவில்லை. கொரோனா வைரஸின் நுழைவுவாயிலான ACE2 receptor புரதம், நம் உடலில் இருக்கும். இவை கீழ் சுவாசக்குழாய்களிலும் நுரையீரலிலும் அதிகமிருக்கும். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படாததால் அவர்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

பொதுவாகவே எந்த ஒரு பெருந்தொற்றாக இருந்தாலும், அதற்கு வயதுவாரியாக அல்லாமல் அனைவருக்குமான பாதுகாப்பு தேடப்பட வேண்டும். அதுதான் தடுப்பூசி. அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும்.

Also Read: Doctor Vikatan: S gene-க்கும் ஒமிக்ரான் தொற்றுக்கும் என்ன தொடர்பு?

குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகாவிட்டாலும் அவர்கள் நோயை அதிக அளவில் பரப்புகிறவர்களாக, அதாவது சூப்பர் ஸ்பிரெடர்களாக இருக்கலாம். ஒமிக்ரான் விஷயத்திலும் அப்படித்தான்.

டைப் 1 நீரிழிவு உள்ள குழந்தைகள், புற்றுநோய் பாதித்த குழந்தைகள், எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள குழந்தைகள், சிறுநீரக பாதிப்புள்ள குழந்தைகள், ரத்தம் தொடர்பான நோய் பாதித்த குழந்தைகள் என ஒரு பிரிவினருக்கு, ஒமிக்ரானாக இருந்தாலும் அது தொற்றினால் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று சர்வதேச அளவில் தொடர்ந்து சொல்லப்படுகிறது. அந்நிலையில் குழந்தைகளுக்கும் தடுப்பூசியின் மூலம் ஏற்படும் பாதுகாப்பு தேவை.

Covid -19 Vaccine

Also Read: Doctor Vikatan: ஒமிக்ரானைத் தொடர்ந்து இப்போது ஃப்ளோரோனா; இது என்ன புதிதாக?

ஒருவேளை இனி வரும் நாள்களில், இந்த வைரஸானது உலகின் சில நாடுகளில் மட்டும் அல்லது இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலங்களில் அல்லது தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் மிகத் தீவிரம் அடைய நேர்ந்தால், அந்தப் பகுதிகளில் வாழும் குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கலாம். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அவசரமாக அந்தப் பகுதி குழந்தைகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த முடியாது. அந்தப் பகுதிகளிலிருந்து வேறிடங்களுக்கு சில குழந்தைகள் இடம்பெயரவும் வாய்ப்பு உண்டு. Mop up vaccination என்று சொல்வோம். எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படித் தடுப்பூசி போடுவதுதான் அறிவியல்பூர்வமான விஷயம். அந்த வகையில் குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி மிக அவசியமானது. போலியோ, பெரியம்மை, கக்குவான் இருமல், ரணஜன்னி உள்ளிட்ட பல நோய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு, அவை விரட்டியடிக்கப்பட்டதுபோல கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியும் பார்க்கப்பட வேண்டும். இந்தத் தடுப்பூசியால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பெற்றோர்கள் தயங்காமல் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/is-increase-in-covid-cases-the-reason-for-vaccinating-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக