Ad

வெள்ளி, 7 ஜனவரி, 2022

`பஞ்சாப் மாநிலத்தை அவதூறு செய்யும் சதி!’ - பிரதமர் பாதுகாப்பு சர்ச்சை குறித்து முதல்வர் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, ஃபெரோஸ்பூர்-மோகா தேசிய நெடுஞ்சாலையை மறித்து, பாதுகாப்பு மீறலுக்கு வழிவகுத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது, ஃபெரோஸ்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்த போதிலும், பாரதி கிசான் யூனியன் (கிராந்திகாரி) சார்பில் புதன்கிழமை மாலை பிரதமரின் வாகனப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு பொறுப்பேற்றனர்.

100-க்கும் மேற்பட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குல்கர்கி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பீர்பால் சிங் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்தார். ``முக்கியமான வழக்கின் கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது",என்று போலீஸார் தரப்பில் தகவல்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெரியாத நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், புதன்கிழமை மாலை பாரதி கிசான் யூனியனின் (கிராந்திகாரி) ஆர்வலர்கள் பிரதமரின் வாகனத் தொடரை நிறுத்தியதற்கு பொறுப்பேற்றனர்.

மோடி, பஞ்சாப் விவசாயிகள்

மோடியின் கான்வாய் மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் மாட்டிக்கொண்டதற்கு காரணமானவர்களை அடையாளம் காண பொது தளத்தில் உள்ள வீடியோக்கள் பரிசீலிக்கப்படுகிறதா என்று எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான விளக்கம் கிட்டாத நிலையில் , ``இது மாநிலத்தை அவதூறு செய்யும் 'சதியின்' ஒரு பகுதியாகும்" என்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வெள்ளிக்கிழமை NDTV- க்கு அளித்த பேட்டியில் கூறினார். பிரதமருக்கு எதிராக `கொலை சதி’ நடந்ததாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் , தன் விளக்கத்தை முன்வைத்தார்.

மோடி

``சிலர் சாலையில் மறியல் செய்தனர். அந்த வழியாக பிரதமர் வருவது அவர்களுக்குத் தெரியாது. ஒரு கி.மீ தூரத்தில் இருந்தே பிரதமரின் பாதுகாப்புப்படைக்கு போராட்டம் தெரிந்தது. அதனால் யூ-டர்ன் எடுத்தார்கள். இதில் அச்சுறுத்தல் எங்கே புலப்படுகிறது?" என்று ஆதங்கத்துடன் விளக்கமளித்த பஞ்சாப் முதல்வர், ``பிரதமர் முன் யாரும் முழக்கங்கள் எழுப்பவில்லை, அப்படியிருக்க இங்கு உயிருக்கு எங்கே அச்சுறுத்தல் நிலவுகிறது? ஜனநாயக அமைப்பில், யாராவது மறியலில் ஈடுபட்டால், சாலையை காலி செய்யும் முறை உள்ளது. அந்த வழியாக செல்லும் வழக்கம் கிடையாது" என்று கூறினார்.

"அவர் (பிரதமர் மோடி) உ.பி.யில் இருந்து பல முறை திரும்பியுள்ளார், பல்வேறு மாநிலங்களில் தனது பாதையை மாற்றியுள்ளார். எனவே அவர் தனது பாதையை மாற்றினால் அல்லது யூ-டர்ன் எடுத்தால், உயிராபத்தாக எப்படி கருதுவது ?" என்று முதல்வர் கேட்டார்.

"பிரதமர் உயிர்கவசமாக புல்லட் எடுப்பதில் முதல் ஆளாக இருப்பேன் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன், நான் வேறு என்ன செய்ய வேண்டும்?" என்று சினத்துடன் தன் உரையாடலைத் தொடர்ந்தார்.

"இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. பஞ்சாபில் நிலைமையை சீர்குலைக்கும் முயற்சியில், பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சியை விதிக்க, நிலைமை தவறாக சித்தரிக்கப்படுகிறது" என்று முதல்வர் தன் தரப்பினைத் தெளிவுப்படுத்தினார் .



source https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-was-in-no-danger-punjab-cm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக