Ad

சனி, 8 ஜனவரி, 2022

அதிகரிக்கும் தெருநாய் தொல்லை; சாலையில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

சமீப காலங்களில் தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்த தெருநாய் குறித்து ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டியவை, அவை தாக்கும்பட்சத்தில் ஒருவர் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை போன்றவை பற்றி ராணிப்பேட்டையில் பணிபுரியும் கால்நடை மருத்துவர் R.கிஷோர் குமாரிடம் கேட்டோம்.

தெரு நாய்கள் வெறிபிடித்து கடிப்பதற்கான காரணம் என்ன ?

``ஓநாய் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சியில் மாற்றம் அடைந்தவையே நாய்கள். ஓநாய்களைப் போலவே அவை வேட்டையாடும், கூட்டமாகச் செயல்படும். அந்த நாய் கூட்டத்தில் ஆல்பா ஆண் அல்லது ஆல்பா பெண் என்று சொல்லக்கூடிய தலைவன் அல்லது தலைவி, கூட்டத்துக்குத் தலைமை தாங்கும். ஒரு நாய் ஒருவரை துரத்திக் கடிக்கும்போது கூட்டத்தில் இருக்கும் அனைத்து நாய்களும் ஓடிப்போய் காரணமின்றிக் கடிக்கும். இது இயற்கையாகவே இவற்றின் மரபணுவில் கலந்த ஒரு செயல்.

Dog

தெருநாய்களின் இந்த மாற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கமும், நகரங்களில் இடமின்மையும் முக்கிய காரணம். முன்பெல்லாம் நாய்களுக்கென்று நிறைய இடங்கள் இருந்தன. பெரும்பாலும் கிராமப்புறங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ தொலைவாகவோதான் இருக்கும். ஒரு நிகழ்வின்போது சாப்பாட்டுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். அவை கிராமங்களில் Scavengers என்று சொல்லும்படி, குப்பைகளில் தெருக்களில் கிடைக்கும் உணவுகளையே உண்ணும். ஆனால், நகர்ப்புறங்களில் இடமின்மை, மக்கள் தொகை காரணமாக குடியிருப்புகள் கட்டடங்கள் அதிகமானதால் நாய்கள் தெருவில் குவிய ஆரம்பித்தன. அவற்றுக்கென இடங்கள் இல்லாமல் போயின. இதனால் மனிதனர்களுடன் நெருங்கி இருக்கும் வகையில் நாய்கள் தெருவில் தள்ளப்பட்டன.

அடுத்ததாக, நாட்டு நாய்கள் என்று சொல்லக்கூடிய இந்தியன் நேட்டிவ் டாக் மிகவும் பழைமையான நாயினம். இது ஆசியா முழுக்க பரவி இருக்கிறது. நாம் வீடுகளில் வளர்க்கும் நாய்களான டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட்டை வீடு மாறும்போதோ, நம்மால் வளர்க்க முடியாத சூழ்நிலைகளின் போதோ தெருவில் விட்டு விடுகிறோம். அப்படி அவை தெருவில் விடப்படும்போது அந்த நாய்களுக்கும் தெருவில் வசிக்கும் நாய்களுக்கும் இடையில் இனப்பெருக்கம் நடந்து குட்டி பிறக்கிறது. இந்தக் குட்டி மிகவும் கடிக்கும் சுபாவம் கொண்டதாக இருக்கும். ஏனெனில், ஜெர்மன் ஷெப்பர்ட் கடிக்கும் சுபாவம் கொண்டவை.

மருத்துவர் R.கிஷோர் குமார்

நாய்கள் திடீரென ஒருவரை கடிக்காது. நாய்கள் கடிப்பதற்கு பொதுவான சில காரணங்கள் உள்ளன:

1. தெரு நாய்களைப் பொறுத்தவரை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் முரட்டுத்தனமாக இருக்கும். அச்சமயத்தில் நாய்களின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதால் கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் கடிக்கும் தன்மையோடு இருக்கும்.

2. தெரு நாய்கள் அறிமுகம் இல்லாதவர்களை ஒருபோதும் நம்பாது. பொதுவாக, அறிமுகமில்லாதவர்களையே (Strangers) தெரு நாய்கள் கடிக்கும்.

3. நாய் இனங்கள் அனைத்துமே ஒரு பொருள் வேகமாக ஓடும் போது (Moving objects) அதைத் துரத்திக் கடிக்கும் தன்மையுடையது. உதாரணத்துக்கு கோழியோ, ஆடோ, மாடோ அல்லது வேகமாக நாமே ஒரு பைக்கிலோ காரிலோ செல்லும் போது அதைத் துரத்தி பிடிக்கும். இதற்கு Prey drive என்று பெயர்.

4. தெருநாய்கள் பயந்த சுபாவம் கொண்டவை. தேவையில்லாமல் யாரையும் கடிக்காது. சில முக்கியமான உணர்வு தாக்குதலின் அடிப்படையிலேயே அவை கடிக்கும். உதாரணத்துக்கு வலி. காயம்பட்ட அல்லது தாக்கப்பட்ட நாய் வலியில் இருக்கும்போது அந்த நாயை நாம் தொடும்போது அல்லது சீண்டும்போது வலியின் அடிப்படையில் நம்மைக் கடிக்க வாய்ப்பு உள்ளது.

5. இனப்பெருக்கக் காலத்தின்போது நிறைய நாய்கள் ஒரு பெண் நாய்க்காக சண்டையிட்டுக்கொள்ளும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு நாயும் மிகவும் முரட்டுத் தனத்தோடுகூடிய கோபத்தில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் நாய்களை அணுகும்போது கடிக்க வாய்ப்புள்ளது.

6. பெண் நாய்களின் மகப்பேறு காலத்தில் அவற்றின் குட்டிகளை தொடும்போது தூக்கும்போது தனது குட்டிகளை ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற குட்டியின் பாதுகாப்பைக் கருதி கடிக்க வாய்ப்புள்ளது.

7. ஒரு பகுதியில் வாழும் நாய்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அதன் எல்லையாகக் கருதிக்கொள்ளும். அப்படி இருக்கும் சமயத்தில் அந்த எல்லைக்குள் யாராவது முகம் தெரியாத மூன்றாம் நபர் வந்தால் அவர்களைக் கடிக்க வாய்ப்பு உள்ளது. இது தனது எல்லையைப் பாதுகாப்பதற்காகக் கடிப்பது.

8. தெரு நாய்களுக்கு பெரும்பாலும் உணவு கிடைக்காது. அரிதாகவே அவற்றுக்கு உணவு கிடைக்கும். அப்படி அவை உணவு சாப்பிடும்போது அவற்றைத் தொடக் கூடாது. அந்தச் சாப்பாட்டை எடுத்துக்கொள்வார்கள் அல்லது திருடிவிடுவார்கள் என்ற பயத்தால் கடிக்க வாய்ப்புள்ளது. இதற்கு Food Aggression என்ற பெயரும் உள்ளது.

Dogs

9. சிறுவயதிலேயே அதிகமாக மனிதரால் பாதிக்கப்பட்ட நாய்கள். எடுத்துக்காட்டாக நாய்களை கல்லால் அடிப்பது சுடு தண்ணீர் ஊற்றுவது அதை விரட்டி துரத்துவது போன்ற பல காயங்களை சந்தித்திருக்கும். இந்தச் சமயத்தில் தெருநாய்களை நம்முடைய குழந்தைகளோ, ஒரு பெரியவரோ நெருங்கி விளையாடும்போது அதன் பழைய நினைவுகளில் பதிந்துள்ள மனித செயல்களின் அடிப்படையில் தன்னுடைய பாதுகாப்பைக் கருதி கடிக்க வாய்ப்புள்ளது.

தெரு நாய்களைப் பற்றி குழந்தைகளும் பெரியவர்களும் தெரிந்திருக்க வேண்டியவை:

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் பத்து நாள் வரைதான் உயிரோடு இருக்கும். பிறகு இறந்துவிடும். நாயால் கடிக்கப்பட்ட ஒருவர் அதை கண்காணிக்க வேண்டும். ஒருவேளை அந்த நாய் பத்து நாளுக்குள் இறந்துவிட்டால் ரேபிஸால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று அர்த்தம். அச்சமயத்தில் Anti Rabies vaccine மற்றும் Anti rabies immunoglobulin போட்டுக்கொள்வது நல்லது. இது நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

இரண்டாவதாக நாய் துரத்தும்போது ஓடக் கூடாது. திரும்பி நின்று சத்தம் போட்டு மிரட்ட வேண்டும். அப்படி மிரட்டும்போது நாய்கள் திரும்பிப் போக வாய்ப்பிருக்கிறது. இன்னும் வேகமாக ஓடினால் வேகமாக நம்மை துரத்திப் பிடிக்க வாய்ப்புள்ளது.

குட்டி போட்ட நாய்களின் பக்கத்தில் குழந்தைகளை விடக்கூடாது. குட்டிகளை எடுத்து விளையாடக் கூடாது.

இரவு நேரங்களில் தெருநாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் செல்வதைக் குறைக்க வேண்டும்.

தெரு நாய்கள் சாப்பிடும்போது அவற்றை அணுகக் கூடாது.

Dogs

Also Read: `2 வயசு குழந்தைக்கு 70-க்கும் மேல தையல் போட்டிருக்காங்க!'- நாய் கடித்த குழந்தையின் தாய் வேதனை!

தெரு நாய்களுக்கு உணவு வைக்கும்போது, அவை முதலில் எப்படி நம்மிடம் நடந்துகொள்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். வால் ஆட்டுகிறதா அல்லது கோபமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நட்பாக இருப்பது தெரிந்தால் மட்டுமே நெருங்க வேண்டும்.

தெரு நாய்கள் கடிக்காமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

முன்பெல்லாம் Animal Birth Control என்று சொல்லக்கூடிய திட்டத்தை அரசு நடத்தி வந்தது. அதில் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து ரேபிஸ் ஊசியையும் செலுத்தி சிறிது காலம் பராமரித்து பிடிக்கப்பட்ட இடத்திலேயே அதைப் பத்திரமாக விட்டுவிடுவார்கள். பிடிக்கப்பட்ட பெண் நாய்களின் அண்டம் மற்றும் கருப்பையை அகற்றிவிடுவார்கள். இதனால் நாய்களின் இனப்பெருக்கம் குறையும். ஆண் நாய்களில் டெஸ்டிகள்ஸை எடுத்துவிடுவார்கள். இதனால் டெஸ்டோஸ்டீரானின் அளவு குறைவதால் அவற்றின் முரட்டுத்தனமும் குறையும். கடிக்கும் செயலும் மட்டுப்படும். தற்போது இந்தத் திட்டத்தை அரசு மீண்டும் முன்னெடுத்து செயல்பட்டால் இது போன்ற பிரச்னைகள் குறையும்.

அரசானது ஆன்ட்டி ரேபிஸ் வாக்சினை இலவசமாக நாய்களுக்கு கொடுக்க வேண்டும்.

வன அதிகாரிகள் வனவிலங்குகளுக்கு கோடைக்காலத்தில் தண்ணீர் மற்றும் உணவு போன்றவற்றை வழங்குவதைப்போல, நாய்களுக்கும் தனியே இடம் உணவு தண்ணீர் கொடுத்தால் இந்த மாதிரி பிரச்னைகள் குறையும். வெயில் காலத்தில் தண்ணீர் தொட்டி வைப்பது போல தெரு நாய்களுக்கும் நீர்த்தொட்டி வைக்கலாம்."



source https://www.vikatan.com/news/animals/veterinary-doctor-explains-about-characteristics-of-stray-dogs-and-safety-precautions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக