Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

Doctor Vikatan: `பிக்பாஸ்' நிரூப் சொன்னதுபோல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புரோட்டீன் உணவுகள் அவசியமா?

`பிக் பாஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளர், நிரூப், தனக்கு புரோட்டீன் உணவுகள் கிடைக்காததால் அந்த வீட்டில் வொர்க்அவுட் செய்வதில்லை என்றார். வொர்க் அவுட் செய்வதற்கும் புரோட்டீன் உணவுகளுக்கும் என்ன தொடர்பு? எக்சர்சைஸ் செய்பவர்கள் கட்டாயம் புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஏன்?

- மாதவன் (விகடன் இணையத்திலிருந்து)

ஷீபா தேவராஜ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

``புரோட்டீன் எனப்படும் புரதச்சத்து நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். உடற்பயிற்சிகள் செய்யும்போது நம் தசைகளைப் பழுதுபார்ப்பதிலும் கட்டமைப்பதிலும் புரதச்சத்துகளே பெரும்பங்கு வகிக்கும். நம் உடலின் சீரான இயக்கத்துக்கு கார்போஹைட்ரேட்ஸ், புரதம் மற்றும் கொழுப்பு என மூன்று சத்துகளுமே அவசியம்.

நீங்கள் மிகவும் ஆக்டிவ்வான நபர், தினமும் போதுமான அளவு உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளவர் என்றால் உங்கள் உடலின் தசைகளையும் திசுக்களையும் புதுப்பிக்க உங்களுக்கு புரதச்சத்து மிகமிக அவசியம். உடற்பயிற்சிகள் செய்யும்போது நம் உடல் தசைகள் தகரும் நிலைக்குச் செல்லும்.

Also Read: Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை; ஒத்துழைக்காத உடல்; தீர்வுகள் உண்டா?

அந்தத் தசைகளின் தளர்வைச் சரிசெய்து, கட்டமைக்க புரதச்சத்துள்ள உணவுகள் முக்கியம். ஒருவருக்கு அவரது உடல் எடையைப் பொறுத்து ஒரு கிலோவுக்கு 5 கிராம் புரதச்சத்து என்ற அளவில் அது தேவைப்படும்.

தினமும் உடற்பயிற்சிகள் செய்யும் நபருக்கு இதைவிட கூடுதலாகவே புரதம் தேவைப்படும். அப்போதுதான் அவரின் தசைகள் வலுப்பெறும். அதிக அளவில் புரோட்டீன் எடுத்துக்கொள்ளும்போது பசி உணர்வு கட்டுப்படும். அதன் மூலம் கொழுப்பு குறையும். அதனால்தான் விளையாட்டு வீரர்கள், தங்களின் எடையில் ஒவ்வொரு கிலோவுக்கும் 2.5 கிராம் அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வார்கள்.

Food (Representational Image)

Also Read: Doctor Vikatan: கொரோனா காலத்தில் வலியுறுத்தப்படும் புரத உணவு; வெஜிடேரியன்களுக்கு எதில் கிடைக்கும்?

இவை எல்லாவற்றையும்விட நம் நோய் எதிர்ப்பாற்றல் இயக்கத்தைப் பலமாக வைத்துக்கொள்ளவும் புரதச்சத்து மிக அவசியம். தேவை ஏற்படும்போது அது ஆற்றலுக்கும் உதவும். கோவிட் காலத்தில் மருத்துவர்கள் புரதச்சத்தின் அவசியத்தை வலியுறுத்துவதன் காரணமும் இதுதான்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/is-it-necessary-for-gym-goers-to-take-protein-rich-food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக