Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

இடம், பொருள், ஆவல்: மெட்ராஸில் ஆங்கிலேயர்கள் வடிவமைத்த முதல் தெரு எஸ்பிளனேடு!

சென்னையின் எஸ்பிளனேடு பகுதி. கடந்த நூற்றாண்டில் சைனா பஜார் ரோடு என்றும், இன்று என்.எஸ்.சி.போஸ் ரோடு என்றும் அழைக்கப்படும் இந்தப் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் வரலாறு நிறைந்திருக்கிறது.
எஸ்பிளனேடு

சென்னைக்கு வந்திறங்கிய ஆங்கிலேயர்கள் 1644-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி முடித்தார்கள். கோட்டையை ஒட்டி வெளியில் உருவான குடியிருப்புப் பகுதி கறுப்பர் நகரம் என்றழைக்கப்பட்டது. இடையில் ஆங்கிலேயர்களைத் தாக்கிய பிரெஞ்சுப் படையினர் கோட்டையைக் கைப்பற்றினர். மூன்று ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கையில் கோட்டை இருந்தது. அதன்பிறகு இருதரப்புக்கும் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயரிடம் கோட்டை வந்தது.

Also Read: இடம், பொருள், ஆவல்: ஏழரை லட்சம் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய கால்வாய்!

கோட்டை மீண்டும் தங்கள் கையைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆங்கிலேயர்கள் அதன் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். கோட்டையை ஒட்டி நெருக்கமாக அமைந்திருந்த 8,700 வீடுகளைக் கொண்டிருந்த கறுப்பர் நகரம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு எந்தக் கட்டுமானங்களையும் உருவாக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அந்த எல்லையைக் குறிக்கும் வகையில் 13 ஸ்தூபிகள் நிறுவப்பட்டன. அந்த ஸ்தூபிகளில் ஒன்று மட்டும் ‘1 ஜனவரி 1773’ என்ற நாட்குறிப்பைச் சுமந்துகொண்டு இன்றைய டேர் மாளிகையின் கீழ் நிற்கிறது.

கோட்டைக்கு வெளியே பரந்து விரிந்த காலியிடம் ஒரு பக்கம், நகரம் மறுபக்கம் என்று வளர்ந்த இந்தப் பகுதியில் நீண்டு சென்றது ஒரு சாலை. இந்த காலியிடத்துக்கும் சாலைக்கும் எஸ்பிளனேடு என்று பெயர்.

எஸ்பிளனேடு

கிழக்கில் இன்றைய ராஜாஜி சாலையில் தொடங்கி, மேற்கே வால்டாக்ஸ் சாலையில் முடியும் எஸ்பிளனேடு கடந்த நூற்றாண்டில் நகரின் முதன்மை வணிக மையமாக விளங்கியது. தொடக்கம் முதலே மக்கள் நெருக்கம் மிகுந்திருந்த இப்பகுதி 1860-களில் உயர் நீதிமன்றம் வந்தபிறகு முகம் மாறியது.

இந்தச் சாலையில் அமைந்திருக்கும் கட்டடங்கள் ஒவ்வொன்றுமே தனித்துவமான கட்டடக் கலையைத் தாங்கியிருக்கின்றன.

Also Read: இடம்... பொருள்... ஆவல்: தங்கச்சாலை - சென்னையில் பணம் அச்சடிக்கப்பட்ட தெரு இதுதான்!

இடப்பக்கம் உயர் நீதிமன்ற வளாகமும் வலப்பக்கம் டேர் மாளிகையுமாக எஸ்பிளனேடு சாலை தொடங்குகிறது. பிரிட்டனின் வேல்ஸ் பகுதியிலிருந்து வணிகம் செய்ய மெட்ராஸுக்கு வந்த தாமஸ் பாரி என்பவர், 1780-களின் இறுதியில் இங்கு தோட்ட இல்லம் ஒன்றை வாங்கித் தங்கினார். இங்கிருந்தபடி வணிகம் செய்தார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத சுதந்திர வணிகராகச் செயல்பட்ட பாரியின் கம்பெனி, பின்னாளில் மெட்ராஸின் வணிக முகமாக வளர்ந்தது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவர் இந்த நிறுவனத்தின் பங்குதாரராக இணைய, ‘பாரி & டேர்' என இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் தலைமையகம் டேர் மாளிகை என்று அழைக்கப்பட்டது. புழக்கத்தில் பாரியின் பெயர் நிலைத்துவிட்டதால், இப்பகுதி 'பாரிமுனை' என்றே இன்றுவரை அழைக்கப்படுகிறது.

தாமஸ் பாரி

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தக உறவு, 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. 1794-ல் மெட்ராஸ் மாகாணத்துக்கான முதல் அமெரிக்கத் தூதர் நியமிக்கப்பட்டார். 1908-ல் அமெரிக்கத் தூதரகம் இந்த டேர் மாளிகையில்தான் அமைக்கப்பட்டது. 1952 வரை டேர் மாளிகையில் இருந்த தூதரகம், 1969-ல் கதீட்ரல் சாலையில் தற்போது இருக்கும் இடத்துக்கு வந்தது.

Also Read: இடம், பொருள், ஆவல்: மூர் மார்க்கெட் உருவான கதையும் எரிந்த சோகமும்... அன்று நடந்தது என்ன?!

டேர் மாளிகையின் வரிசையில் சற்றுத் தள்ளி அமைந்திருக்கிறது, ஆண்டர்சன் தேவாலயம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பாதிரியாரான ஆண்டர்சன், சென்னை எழும்பூரில் தொடங்கிய ‘ஜெனரல் அஸம்ப்ளி பள்ளி’, 1838-ல் எஸ்பிளனேடுக்கு இடமாறியது. இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இன்று விளங்கும், சென்னைக் கிறித்தவக் கல்லூரி ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில்தான் தொடங்கப்பட்டது. 1937-ல் இந்தக் கல்லூரி தாம்பரத்துக்கு இடமாறும்வரை காலேஜ் சேப்பல் என்று அழைக்கப்பட்ட இந்த தேவாலயம், பிறகு ஆண்டர்சன் தேவாலயம் ஆனது.

இதற்கு சற்று தள்ளி அமைந்திருக்கிறது அரண்மனைக்காரன் தெரு எனப்படும் ஆர்மீனியன் தெரு. மெட்ராஸின் ஆரம்பகால வணிகர்களான ஆர்மீனியர்களின் வழிபாட்டுக்காக இங்கு 1712-ல் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இங்கு வாரம் ஒருமுறை ஒலிக்கும் தேவாலய மணி வரலாற்றை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஆர்மீனியன் தேவாலயம்

கறுப்பர் நகரத்தை இடித்து உருவாக்கிய காலியிடம் அடுத்த நூறு ஆண்டுகள் காலியாகவே கிடந்தது. எஸ்பிளனேடு பூங்கா என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில், உயர் நீதிமன்றத்துக்கு தனி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பு உயர் நீதிமன்றம் கடற்கரைக்கு எதிரிலிருந்த சுங்கக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது. இந்தோ-சராசனிக் பாணியில் அமைந்த, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அந்தக் கால மதிப்பீட்டில் ரூ. 13 லட்சம் செலவில், 1892-ல் கட்டி முடிக்கப்பட்டது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் முதல் உலகப் போரில் குண்டு வீச்சுக்கு உள்ளான வரலாற்றைப் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். 1914, செப்டம்பர் 22ம் தேதி ஜெர்மன் போர்க் கப்பல் எஸ்.எம்.எஸ்.எம்டன் வீசிய குண்டு, உயர் நீதிமன்ற வளாகத்தைச் சேதப்படுத்தியதை அறிவிக்கும் தகவல் பலகை, இப்போதும் உயர்நீதிமன்ற வளாகச் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: இடம்... பொருள்... ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன?

உயர் நீதிமன்றத்துக்கு மேற்கே அமைந்திருக்கும் சட்டக் கல்லூரியும் இந்தோ-சராசனிக் பாணியிலேயே கட்டப்பட்டிருக்கிறது. ஹென்றி இர்வின் என்பவர் வடிவமைத்த இந்தக் கட்டிடம், நம்பெருமாள் செட்டி என்ற பொறியாளரால் கட்டப்பட்டு 1899-ல் திறக்கப்பட்டது. 1855-ல் மாநிலக் கல்லூரியில் நடைபெற்றுவந்த சட்ட வகுப்புகள், சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்ட பிறகு இங்கு தொடர்ந்தன.

சட்டக் கல்லூரி

சட்டக் கல்லூரிக்கு எதிரே அழகிய வேலைப்பாடுகள் மிளிர பிரமாண்டமாக நிற்கிறது ஒய்.எம்.சி.ஏ கட்டடம்; ஜைன-ஜெய்பூரி கட்டிடக் கலை அமைப்பில் அமைந்த இந்தக் கட்டடம், முழுக்க கற்களால் அமைந்த மெட்ராஸின் முதல் பொதுக் கட்டடமாகக் கருதப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையால் தள்ளிப் போய்க்கெண்டே இருந்த இதன் கட்டுமானப் பணிகள், அமெரிக்காவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்த ஜான் வானமேக்கரின் 40 ஆயிரம் டாலர் நிதியுதவியோடு நிறைவுபெற்றது. அரசாங்க கட்டிடக் கலைஞர் ஜிஎஸ்டி ஹார்டிங் இதை வடிவமைத்தார். நம்பெருமாள் செட்டி கட்டிய இந்த ஒய்.எம்.சி.ஏ., 1900-ல் திறக்கப்பட்டது.

Also Read: இடம், பொருள், ஆவல்: ஒரு நூற்றாண்டு சென்னை வரலாற்றைத் தாங்கி நிற்கும் மணிக்கூண்டுகள்!

இதையொட்டி அமைந்திருக்கிறது, நேஷனல் இன்ஷ்யூரன்ஸ் கட்டடம். ஆர்ட் டெகோ என்ற கட்டடக் கலை வடிவம் மெட்ராஸில் உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் கட்டப்பட்ட முதல் கட்டடம் இது. ஓர் இந்தியரால் வடிவமைக்கப்பட்ட முதல் ஆர்ட் டெகோ கட்டடமாகவும் திகழும் இது, 1938-ல் நிர்மாணிக்கப்பட்டது.

இந்தக் கட்டடங்களைக் கடந்தால் மேற்கே பிராட்வே-எஸ்பிளனேடு சந்திப்பு. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையில், கந்தசாமிப் பிள்ளைக்கு கடவுள் பிரசன்னமாவது இந்த சந்தியில்தான். எஸ்பிளனேடிலிருந்து பிரிந்து வடக்கு நோக்கி நீள்கிறது பிராட்வே சாலை.

பிராட்வே

பிராட்வே-எஸ்பிளனேடு சந்திப்பைத் தாண்டிச் சென்றால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மிகப் பெரிய முனையமான பிராட்வே பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டில் சென்னையில் பிரபலமாக விளங்கிய டிராம் போக்குவரத்தின் முதன்மை முனையமாகவும் பிராட்வே விளங்கியிருக்கிறது. டிராம் ஓடிய வீதிகளின் கீழே இன்று மெட்ரோ ரெயில் ஓடுகிறது.

Also Read: இடம், பொருள், ஆவல்: குறுகலான சாலையின் பெயர் பிராட்வே... இதை உருவாக்கிய ஆங்கிலேயர் யார் தெரியுமா?!

பிராட்வே பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள ஜார்ஜ் டவுன் தெருக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வணிகத்துக்குப் பேர் போனவை. பெரும் தூண்களோடு பண்டைய ஏதென்ஸ் நகரின் பிரமாண்ட கோவில்களைப் போன்ற ஒரு கட்டடம், எஸ்பிளனேடில் கவனத்தை ஈர்க்கிறது. பச்சை வண்ணத்தில் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கும் ‘பச்சையப்பன்’ என்ற பெயர் காலம் கடந்து இளம் வள்ளல் ஒருவரின் பெயரைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 1794-ல் தன்னுடைய 40 வயதில் மறைந்த வள்ளல் பச்சையப்பரின் உயிலின்படி, அவருடைய நன்கொடையிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது இந்தப் பச்சையப்பன் மாணவர் தயாரிப்புப் பள்ளி. இந்து சமூக மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை வழங்கும் நோக்கில் இந்தப் பள்ளி கட்டப்பட்டது. அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்டன் என்பவரால் இக்கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1850-ல் ஆளுநர் சர் ஹென்றி போட்டிங்கரால் திறந்துவைக்கப்பட்டது. பிரிட்டிஷ் நிதியுதவி இல்லாமல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் கல்வி நிறுவனமான இது, 1889-ல் கல்லூரியாகத் தரம் உயர்ந்தப்பட்டது.

பச்சையப்பன்

பச்சையப்பன் கட்டடத்துக்கு சற்று எதிரே தனிமையில் சிலையாக நிற்கும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், கடற்கரை நோக்கி நீளும் எஸ்பிளனேடை நூற்றாண்டுக்கும் மேலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். 1905-ல் வேல்ஸ் இளவரசராக மெட்ராஸுக்கு வந்தவர், 1911-ல் பிரிட்டன் பேரரசராக முடிசூட்டப்பட்டார். அதன் நினைவாக 1914-ல் இந்த 10 அடி சிலை நிறுவப்பட்டது. குஜராத்தி வணிகர் திவான் பகதூர் குஷல்தாஸ் சதுர்புஜதாஸ் 45 ஆயிரம் ரூபாய் வழங்க, சர் பெர்டிரம் மெக்கெனால் இச்சிலையை வடிவமைத்தார்.

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் சிலை

Also Read: இடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை!

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் சிலைக்குப் பின்னே ரத்தன் பஜார் சாலை-எஸ்பிளனேடு சந்திப்பில் இருக்கிறது பூக்கடை காவல் நிலையம். அதைத் தாண்டிச் செல்லும் சாலை சௌகார்பேட்டையில் நுழைகிறது. மெட்ராஸின் பழமையான இரட்டைக் கோவில்களான சென்ன மல்லிகேஸ்வரர் கோவிலும் சென்ன கேசவ பெருமாள் கோவிலும் இங்குதான் இருக்கின்றன. மெட்ராஸில் நகை வியாபாரம் தொடங்கி செழித்த பகுதியும் இதுவே. அதற்கு அடையாளமாக, 1938-ல் தொடங்கப்பட்ட ‘தி மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் & டைமண்டு மெர்சண்ட்ஸ் அசோசியேஷன்’ கட்டடம் பழமையேறி நிற்கிறது.

நகை வியாபாரம்
20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நகரின் வணிக மையமாக விளங்கிய ஜார்ஜ் டவுன், நகரம் தெற்கு நோக்கி வளரத் தொடங்கியபோது, அதன் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது; ஆனால், பல முக்கிய வணிக மையங்களின் தலைமையகங்கள் இப்போதும் ஜார்ஜ் டவுனில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மெட்ராஸ் என்ற பெருங்கதையின் முதன்மைக் கதாபாத்திரமான ஜார்ஜ் டவுன் அதன் வணிக முக்கியத்துவத்தை இன்று இழந்திருக்கலாம்; ஆனால், அதன் வரலாற்று முக்கியத்துவத்தின் கனம் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டேதான் இருக்கிறது!


source https://www.vikatan.com/government-and-politics/literature/the-history-of-the-evolution-of-esplanade-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக