Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

``அமைச்சசர் பதவிக்கு பதிலாக... ஐ.டி விங் பதவி”- தி.மு.க வில் அதிரடி மாற்றம்?!

``தி.மு.க ஆட்சியை பிடித்த பிறகு கட்சியிலோ, ஆட்சியிலோ பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நடக்காத நிலையில், விரைவில் கட்சியில் சில மாற்றங்கள் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும்" என்கிறார்கள் கட்சியின் உள்விவரம் அறிந்த சிலர்.

டி.ஆர்.பி. ராஜா

தி.மு.க வின் பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் உள்ள டி.ஆர்.பாலுவின் மகன், சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா. இவர் மன்னார்குடி தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். தி.மு.க இந்த முறைஆட்சியை பிடித்தபோது, டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்காமல் போனதால் அவரின் ஆதரவாளர்கள் வருத்ததில் இருக்கிறார்கள்.

அதே நேரம் தி.மு.க வின் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளராக 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன். தி.மு.க-வின் முக்கிய அணிகளில் ஒன்றாக தற்போது தகவல் தொழில்நுட்ப அணியும் உள்ளது. இந்நிலையில் தி.மு.க ஆட்சியமைத்த பிறகு, தமிழக நிதித்துறை அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். இதனால், தி.மு.கவின் கட்சி பணிகளிலும், ஐ.டி.விங் பணிகளிலும் முழுமையாக அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. மற்றொருபுறம் தனது மகனுக்கு அமைச்சர் பதவி தராவிட்டால், கட்சியிலாவது நல்ல பொறுப்பை வழங்கவேண்டும் என்று டி.ஆர் பாலு தரப்பு தலைமைக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது.

Also Read: கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா..?! - அதிரடித்தாரா பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்?

இந்நிலையில் டெல்லியில் நடந்த மாநில நிதி அமைச்சர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு சென்னை திரும்பிய பி.டி.ஆரிடம், கட்சி தலைமை ஐ.டி விங் செயலாளர் பதவியில் தொடர்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, அமைச்சர் பதவியே தனக்கு போதும், கட்சி பதவியை ராஜினாமா செய்துக்கொள்ள தயாராக இருப்பதாக சொல்லியுள்ளாராம் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

இதனைத்தொடர்ந்து அந்த பதவியில் யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடந்தபோது டி.ஆர்.பி ராஜாவின் பெயரை சொல்லியிருக்கிறார் உதயநிதி. அதற்கு கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும் ஓ.கே சொல்லிவிட்டார். இதற்கான அறிவிப்பு பொங்கலுக்கு முன்பாகவே வந்துவிடும் என்கிறார்கள் அறிவால வட்டாரத்தினர். அதே போல் மேலும் சில அணிகளுக்கான பொறுப்பாளர்களையும் மாற்றவும் ஆலோசனை நடந்துவருகிறது என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/changes-to-be-happen-in-dmk-after-tamilnadu-assembly-says-sources

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக