Ad

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

``ஜெயக்குமாருக்கு பதில் சொல்லி, என் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை!'' - மா.சுப்பிரமணியன் `சுளீர்'

`தமிழ்நாட்டை கொரோனாவிலிருந்து முகக் கவசமும், மு.க வம்சமும்தான் பாதுகாக்கிறது' என்று தி.மு.க மேடைகளில் பஞ்ச் டயலாக்குகளை தெறிக்கவிடுகின்றனர். ஆனால், `தி.மு.க கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி, அங்கேயும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன' என்று குமுறுகின்றன எதிர்க்கட்சிகள்.

இந்தச் சூழ்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்தேன்....

கோவையில் தி.மு.க கூட்டம்

``கொரோனா காலகட்டத்திலும் தி.மு.க கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவது, எதிர்க்கட்சிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே?''

``அப்படி எந்த விசேஷ அனுமதியும் தி.மு.க-வுக்கு வழங்கப்படுவதில்லை. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, அரங்க நிகழ்ச்சிகளைத்தான் தி.மு.க-வினர் நடத்தி வருகின்றனர். அரங்கக் கூட்டங்களை எல்லாக் கட்சிகளுமே நடத்திக்கொள்ளலாம். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பினால் கடந்த 2 ஆண்டுகாலமாகவே அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான தடை நீடித்துவருகிறது.''

``அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு மூடிவிட்டால், அதில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களின் நிலை என்னவாகும்?''

``அம்மா மினி கிளினிக் திட்டத்தில் நியமனம் செய்யப்பட்டிருந்த 1,820 மருத்துவர்களும், கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் பணியை முடித்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், `பணி நீட்டிப்பு வேண்டும்' என அந்த மருத்துவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததையடுத்து, முதல்வரிடம் பேசி 2022 மார்ச் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம், இதுபோன்ற திட்டத்தில் பணியாற்றி வந்தவர்கள் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் பணியை முடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

அம்மா மினி கிளினிக்

அடுத்து, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் கீழ் செவிலியர், சுகாதார ஆய்வாளர் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பணி நியமனம் செய்து, நேரடியாக வீடுகளுக்கே சென்று மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்துதருகிறோம். இந்த சூழ்நிலையில், 'அம்மா மினி கிளினிக்' என்ற தற்காலிக கட்டடங்கள் அவசியமற்றதாக இருக்கிறது. இதுவும்கூட அரசு கட்டடங்கள்தான் என்பதால், விரைவிலேயே வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வோம்!''

``எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'கோ பேக் மோடி' என எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., ஆளுங்கட்சியானபிறகு 'வெல்கம் மோடி' என வரவேற்பது அரசியல் சர்ச்சையாகியிருக்கிறதே?''

``கடந்தகாலத்தில், 'கோ பேக் மோடி' என்ற முழக்கம் முதன்முதலில் என் வாயிலிருந்துதான் வந்தது. எங்கள் வீட்டு மாடியில்கூட, 'கோ பேக் மோடி' என்ற வாசகத்துடன் கூடிய கருப்பு நிற பலூனையும் கட்டியிருந்தேன். காரணம்... அன்றைய அரசியல் சூழலில், காவிரி பிரச்னை, சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம்... என ஒன்றிய அரசு செய்துவந்த மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக எங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டவேண்டிய அவசியம் இருந்தது.

நரேந்திர மோடி

ஆனால், இப்போது ஒன்றிய அரசு 60%, மாநில அரசு 40% என்ற விகிதத்திலான நிதிப் பங்களிப்போடு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டமைப்பு பணிகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் புதிய கல்லூரிகளைத் திறந்துவைப்பதில் ஒன்றிய அரசுக்கும் உரிமை இருக்கிறது என்ற வகையில் பிரதமர் வருகை தருகிறார். ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்துதான் மக்களுக்கான பணிகளைச் செய்துதரவேண்டும். எனவே, அந்த வகையில்தான் இந்த நிகழ்வைப் பார்க்கவேண்டும்.''

``இப்போதும்கூட, 'மேக்கேதாட்டூ அணை பிரச்னைக்காக பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டவும் தயங்கமாட்டோம்' என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சொல்லிவருகிறாரே?''

``இந்த விஷயத்தில், சட்ட ரீதியாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை எடுப்பார்கள்.''

ஜெயக்குமார்

`` 'தி.மு.க அரசு, கொத்தடிமை அரசாக இருக்கிறது' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறாரே?''

``ஜெயக்குமாருக்கெல்லாம் பதில் சொல்லி, என் தரத்தைக் குறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை!''

Also Read: விசாரணை வளையத்தில் கேரளக் குற்றவாளிகள்... சிக்குவார்களா அரசியல்புள்ளிகள்?!-பரபரக்கும் கொடநாடு வழக்கு

``ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய தனிப்படை அமைத்துத் தேடிவந்த விவகாரம், அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறதே?''

``தி.மு.க மீதும் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி, வென்றிருக்கிறோம். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீதும் இப்போது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவை என்னவிதமான குற்றச்சாட்டுகள் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ராஜேந்திர பாலாஜி

இந்தச் சூழலில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட ரீதியாகப் போராடி, 'தான் குற்றமற்றவன்' என்று நிரூபிக்கவும் அவருக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும்கூட அவர் ஓடி ஒளிந்துகொண்டே இருந்தார். மாறாக, காவல்துறையில் சரணடைந்து, வழக்குகளுக்காக பிணை வாங்குவதோ அல்லது சிறைக்கே சென்று வந்திருந்தாலும்கூட அது அன்றைய செய்தியாக மட்டுமே கடந்து போயிருக்கும். ஆனால், அவர் இப்படி ஓடி ஒளிந்ததால், 'ராஜேந்திர பாலாஜி குற்றமுள்ளவர்' என்ற செய்திதான் தொடர்ச்சியாக சமூகத்தில் பரவிக்கொண்டே வந்தது. ஆக, இதுபோன்ற விமர்சனங்களுக்கெல்லாம் இடம் கொடுத்ததே ராஜேந்திர பாலாஜிதான்.''

Also Read: வேலூர்: `எங்கள் போர்ப்படைத் தளபதியே!’ - போஸ்டர் அடித்து ரௌடி பிறந்தநாளைக் கொண்டாடிய ஆதரவாளர்கள்

``தி.மு.க-வினர் மிரட்டுவதால், 'தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்' என எஸ்.ஐ ஒருவர் பேசுகிற ஆடியோவைக் குறிப்பிட்டு, 'காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை' என ஓ.பி.எஸ் வேதனை தெரிவித்திருக்கிறாரே?''

``தி.மு.க-வில் ஒரு கோடிபேர் இருக்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறையில், ஒன்றேகால் லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், எங்கேயோ ஓரிடத்தில் நடைபெறுகிற ஒரு சின்ன விஷயத்தை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொண்டு, விவாதிப்பதென்பது பொருத்தமானதாக இருக்குமா என்பதை முன்னாள் முதல்வரான ஓ.பி.எஸ்-தான் விளக்க வேண்டும்.

இன்றைய செய்தித்தாளை எடுத்துக்கொண்டால்கூட, அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க என எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த சிலர், ஆங்காங்கே சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பார்கள்தான். கோடிக்கணக்கான மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில், இது இயல்பானதுதான். ஆனால், இதை உதாரணமாக வைத்துக்கொண்டு ஒரு கட்சியையோ அல்லது ஆட்சியையோ ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்துவதென்பது, பொருத்தமானதாக இருக்குமா என்பதை ஆட்சியில் இவ்வளவுகாலம் இருந்தவர்கள் தான் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.''

மு.க.ஸ்டாலின்

`` 'ஸ்டாலின் பிரதமர் ஆகவேண்டும்' என்கிறார் திருமாவளவன். 'பிரதமராகும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டு' என்கிறார் டி.ஆர்.பாலு. என்னதான் நடக்கிறது தி.மு.க-வில்?''

(சிரிக்கிறார்) ``இதுவிஷயமாக அதிகாரபூர்வமான அறிவிப்பை தி.மு.க அறிவித்தால் மட்டும்தான், இதுகுறித்து நான் பதில் சொல்லமுடியும். தமிழக முதல்வராக, ஸ்டாலின் திறம்பட செயல்பட்டு வருகிறார். அதனால்தான் ஆந்திரா, கேரளா என அண்டை மாநிலப் பத்திரிகைகளே நல்ல நிர்வாகி என்ற முறையில், தமிழக முதல்வர் பற்றிய செய்திகளை தினந்தோறும் வெளியிட்டுவருகின்றன. அந்தவகையில், 'இதுபோன்ற நல்ல நிர்வாகி வந்தால் நன்றாக இருக்குமே' என்று மக்கள் நினைக்கின்றனர். இதில் தவறேதும் இல்லை!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/health-minister-subramanian-shares-his-views-on-current-political-happenings-of-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக