Ad

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

திருப்பள்ளியெழுச்சி - 6: சிவத்திடமிருந்து உங்களைப் பிரிக்கும் எந்தச் செயலையும் துறந்துவிடுங்கள்!

சிவத்திடமிருந்து உங்கள் ஆன்மாவைப் பிரிக்கும் எந்த செயலையும் உறவையும் பொருளையும் முதலில் துறந்து விடுங்கள். அதுதான் துறவு. மற்றபடி புறச்சின்னங்கள் மட்டுமே உங்களை சிவத்திடம் கொண்டு போய் சேர்க்காது.

"பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!"

சிவபெருமான்

உமையாளின் துணைவனே எம் சிவபெருமானே! சிவந்த தாமரை மலர்கள் நிறைந்த குளிர் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் அருளும் தலைவனே, சகலருக்கும் முதல்வனே! எம்பெருமானே! உன்னை வணங்குகிறோம். உனது அருள் எனும் இன்ப வெள்ளத்தில் திளைத்த பெருந்தகைமை கொண்ட அடியவர்கள் பலரும் இந்த கோயிலில் வந்து குழுமி இருக்கிறார்கள். இவர்கள் தங்களது குடும்பம், சொந்தம், பந்தம் அனைத்தையும் உதறிவிட்டு நீயே கதி என்று உன்னைக் காண இங்கு வந்து இருக்கிறார்கள். கண்ணில் மை தீட்டிய மகளிரும் தாங்கள் அறிந்த வகையில் தங்கள் இயல்புக்கு ஏற்ப உன்னை தரிசிக்க இங்கு கூடி உள்ளார்கள். உன்னை உணர்ந்தவர், உணராதவர் என சகலரும் கூடி உன் திவ்ய தரிசனத்தைக் காண இங்கு கூடி உள்ளார்கள். இதில் கடையேனாகிய நானும் வந்துள்ளேன். கொஞ்சமும் தகுதி இல்லாத என்னையும் இவர்களுள் சேர்த்துக் கொண்டு, தாயை புரிந்து பொல்லாத இந்த பிறப்பை நீக்கிஆட்கொள்ள வேண்டும். இதை நீயே செய்ய முடியும் என்பதால் எம்பெருமானே எனக்கு முக்தி நிலை அருள கருணை கூர்ந்து பள்ளி எழுந்தருள வேண்டும்.

தன்னை அறிந்து கொண்டவர், உணர்ந்து கொண்டவர், எதையும் அறியாமல் உணராமல் வந்தவர் என எந்த பாகுபாட்டையும் பாராமல் அருளக் கூடியவர் ஈசன் ஒருவரே. அவரைப் பற்றிக் கொண்டால் பிறப்பறுத்து மோட்ச நிலையை அடையலாம் என்பதையே இந்த பாடலில் சொல்லி இருக்கிறார் மாணிக்கவாசகர். அறிவது என்றால் என்ன? உணர்வது என்றால் என்ன? தீயைப் பார்த்து இது தீ என்று அறிந்து கொள்ளலாம். அதன் உஷ்ணத்தை அறிய முடியாது. உணர்ந்துதான் பார்க்க வேண்டும். சூடு தாங்கினால் தான் உஷ்ணத்தை உணர முடியும். அப்படித்தான் எல்லாமே. அறிவால் அறிந்து கொள்ள முடியும். அனுபவத்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். ஜடத்தை அறிவது அறிவு. பண்பை அனுபவிப்பது உணர்வு.

சிவம்

மாணிக்கவாசகர் தனது பல பாடல்களில் உணர்ந்து... உணர்ந்து என்றே பாடுகிறார். ஏன் எனில் சிவத்தை அறிய முடியாது, உணரத்தான் முடியும் என்பதை அதன் மூலம் வெளிப்படுத்துகிறார். ஒரு லட்டைப் பற்றி பலவிதமாகச் சொல்ல முடியும். ஏன் எனில் அது ஒரு வஸ்து. அதன் இனிப்பை எப்படி வர்ணிக்க முடியும். இனிப்பை வார்த்தையால் சொல்ல முடியாது. சுவைத்தால் மட்டுமே இனிப்பை உணர முடியும். அப்படித்தான் சிவமும் எந்த எழுத்திலும் பேச்சிலும் அதை வர்ணித்து விட முடியாது. நம் இன்பத்துக்கு ஏதோ பாடுகிறோம், எழுதுகிறோம், பேசுகிறோம்.

எல்லா எல்லைகளையும் கடந்து நிற்கும் பேரொளியை; காலம், தூரம் அனைத்தையும் கடந்த பேரருளை உள்ளுக்குள் உணர மட்டுமே முடியும் என்பதால் உணர்ந்து கொள்ள முயலுங்கள். அப்படி முடியாவிட்டாலும் கவலை வேண்டாம். அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருங்கள். நிச்சயம் கருணை மிக்க அந்த தெய்வம் ஒருநாள் உங்களை ஆட்கொள்ள வந்துவிடும் என்கிறார் மாணிக்கவாசகர். பந்த பாசங்களை நீங்கள் துறந்து விட்டாலும் சரி, குடும்ப சூழலில் சிக்கிக் கிடந்தாலும் சரி, சிவம் உங்களை ஆட்கொள்ள கருணை கொண்டு விட்டால் போதும். நிச்சயம் அது உங்களுக்கு மோட்சத்தை அளித்துவிடும்.

இதை வணங்கலாமா, அதை வணங்கலாமா என்ற குழப்பத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மதியுங்கள். பரம்பொருளான சிவத்தை மட்டுமே பற்றிக் கொள்ளுங்கள். அது உங்களை நிச்சயம் காக்கும். இதையே மாணிக்கவாசகர்...
'அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ! என்று தும்பியின் வழியே நமக்குப் பாடமாகச் சொல்கிறார்.

ஈசன்

சிவத்திடமிருந்து உங்கள் ஆன்மாவைப் பிரிக்கும் எந்த செயலையும் உறவையும் பொருளையும் முதலில் துறந்து விடுங்கள். அதுதான் துறவு. மற்றபடி புறச்சின்னங்கள் மட்டுமே உங்களை சிவத்திடம் கொண்டு போய் சேர்க்காது. பிறகு சிவனைப் போற்றிக் கொண்டே இருங்கள், அந்த இனிய சூழல் உங்கள் அவனருகே கொண்டு சென்று விடும்.

"குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எம் எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி!"



source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-6-thiruppalliezhuchi-song-6-for-lord-siva-by-manickavasagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக