Ad

சனி, 8 ஜனவரி, 2022

``முதல்ல கொங்கு தளபதி, அப்பறம்.." - செந்தில் பாலாஜி அரசியலால் புலம்பும் உடன்பிறப்புகள்

கோட்டையை பிடித்தாலும், தி.மு.க-வினரால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கூட பிடிக்க முடியவில்லை. மறுபக்கம், வளமான கோவையை கைப்பற்ற வேண்டும் என்கிற அமைச்சர்கள் ரேஸில், செந்தில் பாலாஜி தான் வெற்றி பெற்றிருக்கிறார்.

கோவை

Also Read: கடுகடுத்த உதயநிதி... கலக்கத்தில் உடன்பிறப்புகள்! - கோவை திமுக கூட்டம் ரிப்போர்ட்

``கோவை மாவட்டத்துக்கு ஆளுமையான தலைவர்கள் இல்லையே...” என்ற வேதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அங்கு பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. ஆனால், அவரின் செயல்பாடுகளால் உடன்பிறப்புகள் தற்போது நொந்து போயிருக்கிறார்களாம்.

``சட்டசபைத் தேர்தலில் இங்கு 10 தொகுதிகளையும் நம்மால் கைப்பற்ற முடியவில்லை. அது ஏன் என்று நாம் யோசிக்க வேண்டும். முதல்வர் வருகையின் போது, நிர்வாகிகள் யாரும் விமானநிலையத்துக்கோ, ஹோட்டலுக்கோ வரக்கூடாது. நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து ஏற்பாட்டை கவனித்துக் கொள்ளுங்கள்.” நவம்பர் மாதம் முதல்வர் மு.க ஸ்டாலின் விசிட்டுக்கு முன்பு நடந்த கோவை தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய வார்த்தைகள் இவை.

செந்தில் பாலாஜி

டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் விசிட்டின்போதும், நிர்வாகிகள் யாரையும் விமான நிலையத்துக்கு வரக்கூடாது என்றுகூறிவிட்டார். ``கோவை கூட்டத்தில், இது கோவையா.. இல்லை கரூரா என்று குழம்பிவிட்டதாக உதயநிதி கூறினார். எங்களுக்கும் அதே குழப்பம்தான். அந்தளவுக்கு கரூர்காரர்களின் ஆதிக்கமே எங்கும் பரவிக்கிடக்கிறது.” என்று குமுறுகின்றனர் கோவை உடன்பிறப்புகள்.

இதுகுறித்து கோவை தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வினருக்கு ஆளுமையான தலைவர்கள் இல்லை. அதை நோக்கிதான் செந்தில் பாலாஜி காய் நகர்த்தி வருகிறார். மற்றபடி, இங்கு கட்சியை வளர்க்க ஆக்கபூர்வமான மாற்றங்கள் நடைபெறவில்லை.

வேலுமணி

கோவையில் பிரதான பிரச்னையே அதிகாரிகள் அ.தி.மு.க மற்றும் வேலுமணிக்கு விசுவாசமாக இருப்பதுதான். அந்தப் பிரச்னை இப்போதுவரை சரியாகவில்லை. இதைக் கேட்டால், `உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று அனைத்துப் பதவிகளையும் பிடிக்க வேண்டும். அப்படி பிடித்தால் மாறிவிடும்’ என்று கூறுகிறார்.

செந்தில் பாலாஜி தி.மு.க வந்தபிறகு கரூரில் நடந்த, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்விதான் கிடைத்தது. அதற்காக, இவர்களை முழுமையாக குற்றம்சாட்டினால் ஏற்றுக் கொள்வார்களா?

செந்தில் பாலாஜி

கோவை நிர்வாகிகளிடம் எதுவுமே அவர் பேசுவதில்லை. நாங்கள் கொடுக்கும் நியாயமான கோரிக்கைகளை கூட அவர் கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் கன்ட்ரோல் எல்லாம், செந்தில் பாலாஜியின் கரூர் டீமுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கரூர்காரர்களுக்கும், அ.தி.மு.க-வினருக்கும்தான் டெண்டர் கிடைத்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சி நடந்தால், மைக் செட் முதல் பணம் கொடுப்பது வரை எல்லாமே கரூர்காரர்கள்தான்.

உதயநிதி செந்தில் பாலாஜி

Also Read: “ரெய்டுகளில் என் தலையீடு இருப்பதாகச் சொல்வது ஆதாரமற்ற புகார்!” - மறுக்கும் செந்தில் பாலாஜி

இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறார். பூத் கமிட்டிதான் கட்சியின் ஆணிவேர். கோவையில் பூத் கமிட்டி அமைத்து, உதயநிதி தலைமையில் கூட்டம் நடத்திய பிறகு, கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 3,000 பூத் கமிட்டிகளுக்கு தலா ரூ.10,000 சென்றிருக்கிறது. அதனால், அவர்கள் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் ஆகிவிடுவார்கள்.

செந்தில் பாலாஜி

அவரைத் தாண்டி, இன்னொரு தலைவர் உருவாகி விடக்கூடாது என்பதுதான் திட்டம். கொடிசியா மைதானம் அருகே ஒரு பெரிய வீட்டை செந்தில் பாலாஜி வாடகைக்கு எடுத்துவிட்டார். புதிய காரும் வாங்கிவிட்டார்.

இப்போதே கொங்கு தளபதி என்ற அடைமொழியை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் முன்னெடுத்துவிட்டனர். அடுத்ததாக அவர் திருப்பூரையும் டார்கெட் செய்துவிட்டார். திருப்பூரில் உள்ள அமைச்சர்கள் வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி ஆகியோரின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

திருப்பூர்

அதனால், செந்தில் பாலாஜி திருப்பூர் பக்கமும் ஆதிக்கத்தை தொடங்குகிறார். டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தரப்புக்கும், திருப்பூரில் உள்ள ஒரு மூத்த நிர்வாகி தரப்புக்கும் மோதலே ஆகிவிட்டது.

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளான எடப்பாடி பழனிசாமி, தங்கமணி ஆகியோர் செந்தில் பாலாஜியை வெளிப்படையாக விமர்சித்துவிட்டனர். அடுத்ததாக வேலுமணியை எதிர்ப்பது போல காண்பித்து தன்னை கொங்கு மண்டலத்தின் பெரிய தலைவர் போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார். அதன் மூலம் தி.மு.கவில் அசைக்க முடியாத பவர் சென்டர் என்ற இடத்துக்கு செல்ல முயற்சி செய்வார்.

கொங்கு தளபதி அடைமொழி

Also Read: மோதலுக்குத் தயாராகும் வேலுமணி - செந்தில் பாலாஜி; அனல் பறக்கும் கோவை உள்ளாட்சி வியூகங்கள்!

உண்மையில், வேலுமணியுடன் இருந்தவர்களுக்குதான் இப்போதும் தி.மு.க-விலும் மரியாதை. வேலுமணியின் பெயரைக் கூட செந்தில் பாலாஜி உச்சரிக்கவில்லை. வேலுமணியையும், அவர் சகோதரர் அன்பரசனையும் கொங்கு தளபதி என்று புகழ்ந்து அ.தி.மு.க பிரமுகராகவே வலம் வந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், உதயநிதிக்கு மேடையில் ஏறி வாள் கொடுக்கிறார்.

வேலுமணியை புகழ்ந்தவர், இப்போது உதயநிதியை சின்னவர் என்று புகழ்ந்து போஸ்டர் ஒட்டுகிறார். கட்சி நிர்வாகிகளை விமானநிலையம் வராதீர்கள் என்று சொல்லிவிட்டு, வேலுமணிக்கு விசுவாசமாக இருந்தவர்களை மேடை ஏற்றுவதுதான் கட்சியை வளர்க்கும் லட்சணமா?

உதயநிதி - செந்தில் பாலாஜி

காலம் காலமாக கழகத்துக்காக உழைத்தவர்களை கண்டு கொள்ளாமல், அ.தி.மு-கவில் டம்மி செய்யப்பட்டவர்களை எல்லாம் அழைத்து வந்து செந்தில் பாலாஜி முதல் வரிசையில் அமரவைக்கிறார்” என்று குமுறினார்கள்.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``செந்தில் பாலாஜி எப்போதுமே அதிகம் பேசமாட்டார். வியூகங்களை ரகசியமாக வைத்திருக்கக் கூடியவர். ஒரு கட்சிக்கு அஸ்திவாரமே பூத் கமிட்டிதான். கோவையில் தி.மு.க பூத் கமிட்டி மிகவும் பலவீனமாக இருந்தது. அதனால், வெற்றி வாய்ப்பு இருந்த சில தொகுதிகளில் கூட தோல்வியடைந்தோம்.

செந்தில் பாலாஜி

`கரூரில் இருந்து வந்துள்ளவர்கள் தேர்தல் பணிக்காகதான் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று செந்தில் பாலாஜி ஓப்பானகவே கூறிவிட்டார். இங்கிருப்பவர்கள் நன்கு வேலை செய்திருந்தால், செந்தில் பாலாஜி வந்திருக்கவே மாட்டார்.

தமிழகத்திலேயே கோவை, கரூர் மாவட்டங்களில்தான் தி.மு.க பூத் கமிட்டி அமைத்து, மினிட் புத்தகமும் போடப்பட்டிருக்கிறது. வார்டு வாரியாக ஒரு பொறுப்பாளர், மேயர், சேர்மன் பதவிகளுக்கும் பொறுப்பாளர்கள் போடப்பட்டிருக்கிறார்கள். அடுத்ததாக கரூரில் இருந்து ஏராளமானோர் தேர்தல் பணிக்காக கோவையில் வீடு எடுத்துத் தங்க உள்ளோம். இங்கு ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன.

கோவை தி.மு.க

ஸ்டாலின் விசிட்டின்போது, ஒரு நிர்வாகி 60 பேரை அழைத்து வந்ததாக, அவரே அனைத்து கையெழுத்தும் போட்டு போலியாக கணக்கு காண்பித்தார். ஆனால், அவர் 5 பேரைதான் அழைத்து வந்தார். இதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். அந்த 5 பேர் தான் கவனிக்கப்பட்டார்கள். இத்தனை நாள்கள் இதுதான் நடந்து கொண்டிந்தது.

அதையெல்லாம் தடுப்பதால் சிலர் வேண்டுமென்றே எங்கள் மீது புகார் சொல்கின்றனர். வேலுமணி விவகாரத்தை பொறுத்தவரை, ‘சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நமக்கு பின்னால் ஓடுபவர்களை, திரும்பிப் பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கோவை திமுக கூட்டம்

நம்மை பார்த்துதான் அவர்கள் பயப்பட வேண்டும்.’ என்று சொல்லிவிட்டார். செந்தில் பாலாஜியின் பணிகளை, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்தும். பொறுத்திருந்து பாருங்கள்” என்றனர்.

செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், தி.மு.க உட்கட்சித் தேர்தல் வருவதால் உடன்பிறப்புகள் மனதுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருக்கின்றனர். எல்லாம் முடிந்ததும் மேலிடத்துக்கு புகார்களை அனுப்ப கோவை உடன்பிறப்புகள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Also Read: ``ஓ.பி.எஸ் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு அப்புறம் பேசணும்!'' - செந்தில் பாலாஜி



source https://www.vikatan.com/government-and-politics/politics/kongu-dmk-upset-over-senthil-balaji-actions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக