Ad

திங்கள், 10 ஜனவரி, 2022

அன்பறிவு விமர்சனம்: மதுரைக்காரர்களுக்கே அந்நியமாய் இருக்கிறதே இந்த மதுரைக்கார சினிமா!

இரட்டைப் பிறவி ஹீரோ. ஒருவர் இன்னொருவர் இடத்திற்கு மாறினால் என்ன நடக்கும்? - எம்.ஜி ஆர் தொடங்கி எல்லா ஹீரோக்களும் நடித்துச் சலித்து, நமக்கும் பார்த்துச் சலித்துவிட்ட கதையில் இப்போது ஹிப்ஹாப் ஆதி!

ஆண்டியாபுரம் - அரசபுரம் என இரு கிராமங்கள். ஒன்றில் ஆதிக்கச் சாதியினரும் இன்னொன்றில் ஒடுக்கப்பட்டவர்களும் வாழ்கிறார்கள். அநியாயத்திற்கு 'சாதிக்கொள்கை' கடைபிடிக்கும் (சாதிவெறியெல்லாம் இல்லை. கொள்கைதான் என சொல்ல முயல்கிறார்கள்) அரசபுரத்து முனியாண்டி (நெப்போலியன்) வைத்ததுதான் இரண்டு ஊரிலும் சட்டம். கை காட்டுபவர்தான் எம்.எல்.ஏ. அவரின் மகள் ஆண்டியாபுரத்தின் சாய்குமாரோடு காதலில் விழுகிறார். அதை 'பெருந்தன்மையோடு' ஏற்றுக்கொண்டு சாய்குமாரை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக்கொள்கிறார் நெப்போலியன். தன் அரசியல் வாரிசு மாப்பிள்ளைதான் என நெப்போலியன் அறிவிக்க, அது நெப்போலியனின் வலதுகரமும் சாய்குமாரின் நண்பருமான ஆண்டியாபுரம் விதார்த்துக்கு வினையாகிறது. பதவியை குறிவைத்து விதார்த் காய்நகர்த்தி குடும்பத்தில் பகையை உருவாக்க, சாய்குமாரும் மனைவி ஆஷா சரத்தும் பிரிகிறார்கள். இரட்டைக் குழந்தைகளில் ஆளுக்கொருவராய் எடுத்துக்கொண்டு வேறு வேறு திசைகளில் பயணிக்கிறார்கள். நிற்க. இத்தனை நிகழ்வுகளும் முதல் 20 நிமிடக் கதைதான். அந்தக் குழந்தைகள் வளர்ந்து குடும்பத்தைச் சேர்ப்பதுதான் மீதி இரண்டரை மணிநேரம்.

அன்பறிவு

அன்பு, அறிவு என இரட்டை வேடத்தில் ஆதி. கொஞ்ச நாள்களாக தமிழ்சினிமா திருந்தி விட்டுவைத்திருந்த, 'ஏய் மதுரக்காரய்ங்க பாசத்தோட பாயாசத்துல பாய்சன் வச்சாக்கூட சாப்பிடுவாய்ங்க, ஆனா கோவத்தோட குடல்கொழம்பு பறிமாறுனா கொன்டேபுடுவாய்ங்க' ரக காலாவதி டெம்ப்ளேட்டை கையிலெடுத்திருக்கிறார். மதுரைக்காரர்களின் உடல்மொழி, உச்சரிப்பு என அவர் முயற்சிப்பது மதுரைக்காரர்களுக்கே அந்நியமாய் இருப்பதுதான் பிரச்னை. கனடாவாசியாக வரும் இன்னொரு ஆதி வெர்ஷனும் வலிந்து திணிக்கப்பட்ட உச்சரிப்போடே உலவுகிறார். இந்த செயற்கைத்தனம் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது.

90களின் தொடக்கத்தில் அதிகம் வெளியான கதை என்பதால் அப்போது நடித்த அதே எனர்ஜியில் இருக்கிறார் நெப்போலியன். தெலுங்கு சினிமா வில்லனின் கார வாசனை விதார்த் தோன்றுமிடமெல்லாம் பரவுகிறது. சாய்குமார், ஆஷா சரத், தீனா எல்லாரும் ஓகே ரகம். டபுள் ஆக்‌ஷன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாகவேண்டுமே என இருக்கிறார்கள் ஷிவானி ராஜசேகரும் காஷ்மீராவும்.

மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா பண்டிகைக் கால திருவிழாக் கோலம். துண்டு துண்டாய் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை ஆங்காங்கே ஈர்த்தாலும் பெரும்பாலான இடங்களில் ஏமாற்றமே.

அன்பறிவு

சாதி வன்கொடுமை பற்றி இயக்குநர் பேச நினைத்திருப்பது சரி. ஆனால் அது ஒடுக்கப்படுபவரின் பார்வையாக கொஞ்சமும் இல்லை என்பதுதான் சிக்கல். பெரும்பகுதி நெப்போலியனின் பிரதாபங்களாகவே விரிகிறது. இறுதியாக அவர் உண்மையை உணருமிடத்தில் கூட 'பெரியய்யா' என மாபெரும் பிம்பமாகவே கட்டமைக்கப்படுகிறார். 'சக மனிதனை சமமாக அணுகுவது அடிப்படை மனிதமேயன்றி போற்றுதலுக்குரிய விஷயமில்லை' என்பது புரியாத இயக்குநரின் அரசியல் போதாமையின் வெளிப்பாடுதான் இது. மறுமுனையில் ஒடுக்கப்பட்டவர்களாக காட்டப்படும் விதார்த், அர்ஜய் போன்றவர்களின் கதாபாத்திரங்களும் ஆதிக்க மனநிலைக்கு வலு சேர்க்கும் விதமாகவே அமைந்திருக்கின்றன.

'கிராமம்னாலே அன்புதான்... அதுக்கு எதுவும் ஈடாகாது' என க்ளைமேக்ஸிற்கு முன்பாக பேசுகிறார் ஹீரோ. அதே கிராமம்தானே ஆதிக்க வெறியில் ஆதிக்க மனநிலையில் பக்கத்து கிராமத்திடம் அத்துமீறிக்கொண்டே இருக்கிறது. அப்போது இயக்குநர் சொல்லும் 'அன்பு' எது?

இரண்டே கிராமங்களை உள்ளடக்கி எப்படி ஒரு சட்டமன்ற தொகுதி வரும்? தேவையே இல்லாமல் விதார்த் ஏன் வாக்குமூலம் கொடுக்கவேண்டும் போன்ற வழக்கமான லாஜிக் குறைகளும் நிறையவே இருக்கின்றன.

அன்பறிவு
சமூகக் கருத்துகளை படைப்பாளிகள் வெகுஜன கதைவழியே பேச நினைப்பது நல்ல மாற்றம்தான். ஆனால் அதை சரியாக பேசாதபட்சத்தில் ஏற்கனவே நிலவும் ஆதிக்க மனநிலைக்கு சாதகமாகிவிடும் என்பதை உணர்ந்துகொள்ளுதலும் நலம்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/hip-hop-tamizha-aadhis-anbarivu-a-underwhelming-tale-of-two-villages

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக