Ad

திங்கள், 10 ஜனவரி, 2022

``எங்களுக்கு `ராமன் ஹீரோ’ என்றால், உங்களுக்கு `ராவணன்தான் ஹீரோ’ ” - பாஜக கரு.நாகராஜன் காட்டம்

``திருக்குறள் ஆன்மிகக் கருத்துகள் நிறைந்தது; அதை அரசியல் காரணங்களுக்காக சுருக்கிவிடக் கூடாது'' என்று அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழக அரசியல் சூழலில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.

தமிழகத்தில், மொழி, இனம் சார்ந்த கொள்கைகளை முன்வைத்து ஆட்சி அரியணை ஏறிய திராவிடக் கட்சிகள், கொள்கைகளை செயல்படுத்தும் நோக்கில் மொழி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்துகாட்டின. இதில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை பரவலாக்கும் முயற்சியாக பள்ளிப் பாடத்திட்டத்தில் ஆரம்பித்து பேருந்து பலகை வரையிலாக பல்வேறு வழிகளிலும் கொண்டுபோய் சேர்த்தது. குறிப்பாக வள்ளுவருக்கு உருவப்படம் உருவாக்கியது முதல் வானுயர் சிலை அமைத்தது வரையிலாக தி.மு.க-வின் பங்களிப்பு அளப்பரியது.

திருவள்ளுவர்

ஆனால், அண்மைக்கால தமிழக அரசியலில், 'திராவிடக் கட்சி'களுக்கு மாற்று என்ற நோக்கில் தமிழ்த் தேசிய அரசியல், ஆன்மிக அரசியல் என பல்வேறு சித்தாந்த நிலைப்பாடுகள் பரப்புரை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆன்மிகத்தை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் கட்சிகள், தமிழ் அடையாளங்களில் ஆங்காங்கே காணப்படும் ஆன்மிகக் கருத்துகளை கண்டெடுத்து, அவற்றை தங்கள் மதம் சார்ந்த அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்வதில் அதிக அக்கறை காட்டிவருகின்றன.

இது தமிழக அரசியல் தளத்தில், பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திவரும் நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தலைவர்களும் தமிழ் அடையாளங்கள் குறித்தப் பெருமையை ஆன்மிக அடையாளத்துடன் ஒப்பிட்டுப் பேசிவருவது சர்ச்சையை அதிகப்படுத்தி வருகிறது.

கடந்த காலத்தில், வட இந்தியாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-யான தருண் விஜய், திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றிய பெருமைகள் குறித்து தொடர்ச்சியாக பேசிவந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் தனது உரையில் ஆங்காங்கு தமிழ் மொழி குறித்த சிறப்புகளைத் தொட்டுக் காட்டி வருகிறார். இந்த நிலையில், அண்மையில் கோவையில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாடு' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,

''ஆன்மிக பூமியான தமிழகத்தில், திருவள்ளுவர் தோன்றியுள்ளார். அவர் எழுதியுள்ள 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற முதல் குறளிலேயே, 'ஆதி பகவனை'க் குறிப்பிடுகிறார். அதாவது ரிக் வேதத்தில் உள்ள 'பரமாத்வா'வைத்தான் 'ஆதி பகவன்' என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். எனவே, ஆன்மிக கருத்துகளைப் பேசியிருக்கும் திருவள்ளுவரை, அரசியல் காரணங்களுக்காக குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிவிடாதீர்கள்'' என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

திருவள்ளுவர்

ஆளுநரின் இந்தப் பேச்சு, பல்வேறு விவாத அலைகளை எழுப்பிவருகிறது. இதையடுத்து பத்திரிகையாளரும் தமிழ் மொழி ஆர்வலருமான ஆழி செந்தில்நாதனிடம், 'அண்மைக்காலமாக தமிழக அரசியலில், திருவள்ளுவரை முன்வைத்து அரங்கேறிவரும் அரசியல்கள்' குறித்து கருத்து கேட்டபோது,

''திருக்குறள் என்பது பொதுச்சொத்து. அதை எந்தவொரு அரசியல் கட்சியுமே தங்களுடைய சொத்தாக பாவிப்பதோ அல்லது திருக்குறளைக் காட்டி வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று நினைப்பதோ முடியாத காரியம். திருக்குறளுக்காக யாரும் இங்கே வாக்களித்துவிடப் போவதில்லை.

அடுத்து, பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் நேர் எதிரான கருத்துகளைக் கொண்டது திருக்குறள். ஆனாலும்கூட தமிழின் தொல் இலக்கியமான திருக்குறளை தங்களுடையதாக அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலமாக தமிழ்நாட்டில் தங்களுக்கான இடத்தைப் பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க எண்ணுகிறது. அதற்காக 'திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன்; திருக்குறளை மேற்கோள் காட்டுகிறேன்' என்றெல்லாம் அரைகுறையாக பல்வேறு முயற்சிகளையும் செய்துவருகிறார்கள். இவை எதுவும் அவர்களுக்கு உரிய பலனைப் பெற்றுத்தரவில்லை.

கடவுள் என்கிற கருத்தாக்கம் உலகம் முழுவதுக்குமானது. எனவே, திருக்குறளின் 133 அதிகாரத்தில் ஒரு அதிகாரமாக கடவுள் வாழ்த்தும் மரபாக அமைந்திருக்கிறது. மீதம் உள்ள 132 அதிகாரமும் அது வாழ்வியல் கருத்துகளைத்தான் பேசுகிறது. மிகக்குறிப்பாக, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் பேசுகிற நூல் திருக்குறள். எனவே, பிறப்பின் அடிப்படையில் யாரும் வித்தியாசம் கிடையாது என்கிறது திருக்குறள். ஆனால், பிறப்பின் அடிப்படையில்தான் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் அமைகின்றன என்று பகவத் கீதையும் மனு நீதியும் சொல்கின்றன.

ஓர் அதிகாரத்தில், திருக்குறள் 'கடவுள் வாழ்த்து' பாடிவிட்டது என்பதற்காக அதனை ஆன்மிகத்துக்குள் அடக்கினாலும்கூட, அதற்கும் மத அரசியலை முன்னெடுத்துவரும் பா.ஜ.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில், ஆன்மிகம் வேறு; வகுப்புவாத அரசியல் என்பது வேறு. ஒட்டுமொத்தமாக ஆன்மிகத்துக்கே நாங்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று யாரும் உரிமை கொண்டாடிவிட முடியாது.

ஆழி செந்தில்நாதன்

வள்ளலார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் என எண்ணற்ற ஆன்மிகவாதிகள் இந்த மண்ணில் தோன்றியிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் மதவாதியாக அடையாளம் காட்டிவிட முடியுமா? ஆனால், ஆன்மிகம் அனைத்தையும் மத அரசியலாக மடை மாற்றுவதுதான், பா.ஜ.க-வின் திட்டமாகவே இருந்துவருகிறது. அந்தவகையில், திருவள்ளுவரையும் ஓர் இந்து மத துறவியாக அடையாளப்படுத்தி தங்கள் அரசியல் லாபத்துக்கான கருவியாக மாற்ற விரும்புகிறது பா.ஜ.க. எனவேதான் திருக்குறளுக்கு மதச்சாயம் பூசப் பார்க்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிகிறார்கள்.

தங்கள் மத அரசியல் லாபத்துக்காக, திருவள்ளுவரை இவர்கள் 'இந்து மத துறவி'யாக அடையாளப்படுத்தினாலும்கூட வட இந்தியர்கள் இதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 'திருவள்ளுவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சூத்திர சாமியார். அவருடைய சிலைக்கு இங்கே இடம் இல்லை' என்று உத்தரகாண்ட்டில் போராட்டமே நடத்தினார்கள்.

பிரதமர் மோடி, தருண்விஜய் எம்.பி., ஆளூநர் ஆர்.என்.ரவி என இவர்களுக்கெல்லாம் திருவள்ளுவர் மீது தனிப்பட்ட ஆர்வம் இருக்கலாம். அதை நாம் மறுப்பதற்கில்லை. மகாத்மா காந்தியின் அரசியல் தொடக்கமே திருக்குறள்தான். 'இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறள்தான் அவருடைய அஹிம்சா கொள்கையின் தொடக்கம் என்று காந்தியே எழுதியிருக்கிறார்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், திருவள்ளுவரை தமிழ்நாட்டின் மத அரசியலுக்குள் பொருத்திவிட நினைக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திராவுக்குப் போனால், அங்கே வேறு ஒருவர், கர்நாடகாவுக்குச் சென்றால் இன்னொருவர் என பா.ஜ.க-வினுடைய மத அரசியல் அடையாளங்கள் மாறிக்கொண்டே போகும். இதற்கு உதாரணம்... தமிழ் மொழிக்காக இதுவரையில் ஒன்றிய பா.ஜ.க அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கான பதிலில்தான் அடங்கியிருக்கிறது.

நரேந்திர மோடி

திருக்குறளுக்காக இவ்வளவு பேசுகிறவர்கள், அதனை 100 மொழிகளில் அச்சடித்துப் பரப்புவதற்கும் ஆணையிட்டால், இந்த மொழியின் சிறப்பை இன்னும் பலகோடி பேர் அறிந்துகொள்வார்களே... அதை ஏன் பா.ஜ.க இன்னும் செய்யவில்லை? தமிழ் மொழியின் அரசியல் அங்கீகாரத்துக்காக இதுவரையில் பா.ஜ.க என்ன செய்திருக்கிறது?

இப்படி ஆக்கபூர்வமாக எதையுமே செய்யாமல், தமிழ் பழமையான மொழி, செம்மொழி என்றெல்லாம் ட்விட்டரில் பதிவிடுவதாலும், மேற்கோள் காட்டிப் பேசுவதாலும் என்ன பயன்? இந்த உண்மைகள் எல்லாம் 10-ம் வகுப்புப் படித்துவரும் மாணவர்களுக்கே தெரியுமே. இந்த உண்மைகளைச் சொல்வதற்கு ஒரு பிரதமரோ, ஆளுநரோ தேவையே இல்லை.

Also Read: `எங்களை கட்டணக் கொள்ளையர்கள்னு சொல்லாம இதைச் செய்யுங்க!' - ஆம்னி பஸ் உரிமையாளர்களின் குரல்

திருக்குறளின் உயர்வைப் பற்றிப் பேசுகிற இவர்கள், கல்வி - பண்பாட்டுக் கொள்கைகளில், தமிழ் மொழிக்கென்று ஏதேனும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்களா... இல்லையே! அதேசமயம், அவர்கள் தூக்கிப்பிடிக்கிற சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மட்டும் எண்ணற்ற கோடிகளை நிதியாக ஒதுக்கிவருகிறார்கள். அப்படியென்றால், தமிழ் மொழியை வெறுமனே மேடைப் பேச்சுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டால் போதும், வாக்கு கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள்.

ஆக, தமிழ், திருக்குறள், பாரதியார் என பா.ஜ.க-வினர் பேசிவருவதெல்லாம், வெறும் அரசியல் நாடகம். மற்றபடி தமிழ் மொழி மீது அவர்களுக்கு எந்த ஈடுபாடும் உளமாற இருப்பதில்லை.... இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை!'' என்கிறார் விளக்கமாக.

ஆர்.என்.ரவி

இதையடுத்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம், இந்த விவகாரத்தில் பா.ஜ.க தரப்பின் விளக்கம் என்னவென்பதை அறிந்துகொள்ள பேசினேன்....

''ஓர் எழுத்தாளர், 280 பக்கங்களில் தான் எழுதவிருக்கும் துப்பறியும் கதையைக்கூட முதலில் பிள்ளையார் சுழியிட்டே எழுத ஆரம்பிக்கிறார். எழுதி முடிக்கப்பட்டபின் அந்தக் கதையின் எந்தவொரு பக்கத்திலும் அவர் கடவுளைப்பற்றிக் குறிப்பிடவில்லை என்று எண்ணிக்கொண்டால், அது உங்களுடைய மிகப்பெரிய தவறு.

தமிழ்நாட்டில், இந்தத் தவறைத்தான் நிறையபேர் செய்துவருகிறார்கள். ஆன்மிகத்துக்கு எதிராக, இந்து மதத்துக்கு எதிராக இங்கே தொடர்ச்சியாகப் பேசிப்பேசி, அதைக் கேட்டுக்கேட்டு எல்லோருக்கும் மண்டையே மரத்துப்போய்விட்டது. அதனால்தான் நாங்கள் எல்லாம் 'ராமன் ஹீரோ' என்றால், நீங்கள் 'ராவணன்தான் ஹீரோ' என்கிறீர்கள். தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி என்று நாங்கள் சொன்னால், நீங்களோ 'தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு' என்கிறீர்கள். இதெல்லாமே மக்களை ஏமாற்றுகிற செயல்.

Also Read: Tamil News Today: ஜல்லிக்கட்டு போட்டி; அதிகபட்சம் 150 பார்வையாளர்களுடன் நடத்த தமிழக அரசு அனுமதி!

இப்படி ஒட்டுமொத்தமாக இந்து மதத்துக்கு எதிராகப் பேசிவரும் இந்த சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் பேசித்தான் இந்து மதம் துளிர்க்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஏனெனில், இந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி, உலகம் முழுக்கப் பரவியுள்ளது. மற்றபடி சாப்பாடு கொடுத்து, பள்ளிகூடம் நடத்தி, என்.ஜி.ஓ மூலமாக இந்து மதத்துக்குள் யாரும் சேர்க்கப்படவில்லை.

10 ஆயிரம் குழந்தைகள் முன்பு பேசுகிறபோது, 'சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ். அந்த மொழியை எல்லோரும் படியுங்கள்' என்றுதான் பிரதமர் மோடி சொல்கிறார். இதுமட்டுமல்ல... சீன எல்லைக்குச் சென்றாலும் ஐ.நா சபைக்குச் சென்றாலும் அங்கேயெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார். இப்படியொரு புகழ்ச்சியை மன்மோகன்சிங் கடந்த காலங்களில் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா?

பட்ஜெட் தாக்கலின்போதும்கூட, தமிழ் மொழியைச் சொல்லித்தான் பட்ஜெட்டே ஒதுக்கப்படுகிறது. இதைவிட தமிழ் மொழிப் பற்றை ஓர் அரசு எப்படி வெளிக்காட்டிவிட முடியும்.... இதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டாமா!

கரு.நாகராஜன்

புதிய கல்விக் கொள்கை மூலமாக, 5-ம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி என்பதைத்தானே மத்திய பா.ஜ.க அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்னும் குறிப்பாக ஆந்திராவிலும் உத்தரப்பிரதேசத்திலும் தமிழ்ப் பாடத்திட்டமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆக, கடந்தகாலங்களில் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த காங்கிரஸ் அரசை விடவும் தற்போதைய பா.ஜ.க அரசு தமிழ் மொழி மீது அதிகமான ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ளது. இந்தி மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள அத்தனை தொன்மையான மொழிகளையுமே மத்திய பா.ஜ.க அரசு மதிக்கிறது.

இதுவரையிலும் 7 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்காக மத்திய பா.ஜ.க அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியெல்லாமே, தமிழ் மக்களுக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியாகத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு, பா.ஜ.க-வை குறை சொல்லவேண்டும் என்றே திட்டமிட்டுப் பேசுகிறவர்களுக்கு, தமிழைப் பற்றிப் பேசுவதற்கெல்லாம் அருகதையே கிடையாது. தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களாக, தமிழ் வழிக் கல்வி பள்ளி என்று எத்தனைப் பள்ளிகளை உருவாக்கியிருக்கிறீர்கள்?

இன்னும்கூட 'தமிழ் மொழி வளர்ச்சிக்காக நீங்கள் எவ்வளவு நிதி ஒதுக்கினீர்கள்' என்றே நீங்கள் கேட்டால், 'எல்லா மொழிக்கும் என்ன ஒதுக்கினார்களோ அதை தமிழ் மொழிக்கும் ஒதுக்கியிருப்பார்கள்' என்பதுதான் எங்கள் பதில்'' என்கிறார் அழுத்தமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/if-raman-is-our-hero-then-ravana-is-your-hero-says-bjp-karunagarajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக