Ad

செவ்வாய், 11 ஜனவரி, 2022

மும்பையில் கடத்தல்: ரூ.4.8 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை... தமிழகத்தில் மீட்கப்பட்டது எப்படி?

மும்பையை சேர்ந்த அன்வாரி அப்துல் ஷேக் என்ற பெண்ணின் 4 மாத பெண் குழந்தை கடந்த மூன்றாம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் குழந்தை காணாமல் போன வீட்டிற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இப்ராகிம் ஷேக்(32) என்பவர் குழந்தையை தூக்கிச்சென்றது தெரிய வந்தது. இப்ராகிம் ஷேக் குழந்தையின் தாயார் அன்வாரியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள்

குழந்தையை தூக்கி சென்ற பிறகு அவரும் காணாமல் போய்விட்டார். ஆனால் அவரின் மொபைல் சிக்னலை வைத்து இப்ராகிமை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் மும்பையில் உள்ள சயான், தாராவி, மலாடு, ஜோகேஷ்வரி, கல்யாண், தானே போன்ற இடங்களில் ரெய்டு நடத்தி இரண்டு பெண்கள் உட்பட 6 பேரை குழந்தை கடத்தல் தொடர்பாக கைது செய்தனர்.

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியிடம் ரூ.4.8 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் தமிழகத்தின் கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மூன்று மாவட்டங்களில் 4 நாள்கள் கடுமையாக சோதனை செய்து செல்வன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து குழந்தையை மீட்டனர்.

கைது

அதோடு குழந்தையை விலைக்கு வாங்கியது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். குழந்தை செல்வன்பட்டியை சேர்ந்த சிவில் எஞ்சினியர் ஆனந்த் குமார் நாகராஜன் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது. இப்ராகிம் குழந்தைக்கு தான் தான் தந்தை என்று தெரிவித்துள்ளார். அது குறித்து தெரிந்து கொள்ள டி.என்.ஏ.சோதனை நடத்த முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/crime/child-abducted-in-mumbai-and-sold-for-rs-48-lakh-rescued-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக