Ad

புதன், 12 ஜனவரி, 2022

`அதிமுக ஆட்சியில் மட்டும் போராட்டமா?!' - டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்கும் வேலுமணி

கோவை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

மனு

Also Read: `வேலுமணி கைது எப்போது?!' - திமுக-வினர் கேள்விக்கு செந்தில் பாலாஜி சஸ்பென்ஸ் பதில்

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கொறாடா எஸ்.பி. வேலுமணி , ``கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனடியாக கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் பகுதி மற்றும் பேருந்துகளில் மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கொரோனா வார்டுகள் அமைத்து ஆக்ஸிஜன் படுக்கைகளை உயர்த்த நடவடிக்கை வேண்டும்.

மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலை பணியாளர்களுக்கு ஆர்.டி‌.பி‌.சி‌.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும். மாவட்ட எல்லைகளில் வாகனங்களை சரியான முறையில் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

வேலுமணி

கோவை திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எல்லாக் கடைகளும் மூடப்பட்டு, டாஸ்மாக் மட்டும் திறந்திருந்தால் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும். அ.தி.மு.க ஆட்சியில், டாஸ்மாக்கை மூட வேண்டும் என இப்போதிருக்கும் முதல்வர் கூட போராட்டம் நடத்தினார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சி தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை எல்லோரும் வலியுறுத்துகிறோம்.

டாஸ்மாக்

கோவை மாவட்டத்தில் பல வளர்ச்சி பணிகளை எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம். அந்த அற்புதமான திட்டங்களை, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஒதுக்காமல் முறையாக பராமரிக்க வேண்டும். பணிகளை வேகமாக முடிக்க வேண்டும்.” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-whip-velumani-question-over-tasmac

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக