Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

`திமுக Vs இந்திய கம்யூனிஸ்ட்’ - இது திருவாரூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி கலாட்டா

திருவாரூர் மாவட்ட ஊராட்சி 11-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அக்.9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிடுவதில் திமுக-வுக்கும், இதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சுமுகமான உடன்பாடு ஏற்படாததால், இந்த இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இது இந்த இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி 11-வது வார்டில் போட்டியிட திமுக கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் வீரமணி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த மகாலிங்கம் என்பவர், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முதல்நாள் உயிரிழந்தார். இதனால், இங்கு தேர்தல் கைவிடப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்

இந்தநிலையில்தான் அக்டோபர் 9-ம் தேதி, இந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில், இந்தப் பகுதி திமுக நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி 11-வது கவுன்சிலர் பதவிக்கு திமுக-தான் போட்டியிட வேண்டும் என அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் வலியுறுத்தியிருந்தார்கள். திமுக தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதாலும், முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் மீது மக்களிடம் வரவேற்பு இருப்பதாலும், இங்கு திமுக-தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கட்சியின் தலைமைக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.கோ.பழனிசாமி, நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார்கள். 11-வது வார்டுக்கு உட்பட்ட ஊராட்சிகள் அனைத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குடன் இருப்பதாலும், 2019 உள்ளாட்சித் தேர்தலில் 11-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட திமுக கூட்டணியில் முடிவெடுக்கப்பட்டதாலும், தற்போது இதைத் தங்களது கட்சிக்கே ஒதுக்க வலியுறுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

திமுக

ஆனால் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் வீரமணி என்பவரும், திமுக சார்பில் எஸ்.ஆர்.ரமேஷ் என்பவரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ``திருவாரூரைப் பொறுத்தவரைக்கும், திமுக-காரங்க, கம்யூனிஸ்ட் கட்சியை எதிரியாகத்தான் பார்ப்பாங்க. என்னதான் நாங்க அவங்க கூட்டணியில இருந்தாலும் இதுதான் நிலைமை. இன்னைக்கு நேத்து இல்லை... காலம் காலமாக இதுதான் நடக்குது. தலைமைக்குக் கட்டுப்பட்டு வெளிப்படையாகத் தங்களோட எதிர்ப்பைத் தெரிவிக்கலைன்னாலும்கூட, தேர்தல் நேரத்துல உள்ளடி வேலை பார்த்துடுவாங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் திருவாரூர் மாவட்டத்துல அதிமுக எதிரியிலலை. எங்களைத்தான் எதிரியாக நினைக்குறாங்க’’ என ஆதங்கத்தோடு பேசினார்கள்.

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: 16 நாள் கைக்குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்த பெண்!

திமுக-வினரோ, ``ஒருகாலத்துல இந்தப் பகுதிகள்ல கம்யூனிஸ்ட்டுங்க பலமாக இருந்தாங்க, ஆனா, இப்ப நிலைமை மாறிடுச்சு. தனியா நின்னா அவங்களால ஜெயிக்க முடியாது. திமுக-தான் இங்க செல்வாக்கா இருக்கு. இப்ப நாங்க ஆளுங்கட்சியாகவும் இருக்கோம். எப்படி விட்டுத்தர முடியும்’’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கு என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தெரிந்துவிடும் என்கிறார்கள் மக்கள்!



source https://www.vikatan.com/news/politics/dmk-vs-indian-communist-contest-in-thiruvarur-local-body-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக