ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது தொடர்பாக, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க - பா.ஜ.க-வினர் இடையே மிகப்பெரிய மோதலாகவும் உருவெடுத்திருக்கிறது.
மதுரையில் கடந்த 17-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பழனிவேல் தியாகராஜனிடம், ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, ``17-ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் கூறப்பட்டது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் கருப்பொருள்கள் குறித்த தகவல்கள் மேலும் தாமதமாகத் தரப்பட்டன. முன்கூட்டியே சில பணிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, அவற்றை ரத்துசெய்ய முடியவில்லை. உதாரணத்துக்கு, இப்போது இந்தச் செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு நேரடியாக, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு செல்லவிருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்துவைத்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்'' எனப் பதிலளித்தார். பி.டி.ஆரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதமானது.
உண்மையில், மதுரை ஆரப்பாளையம் சிவபாக்கியா மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. அதில்தான் நிதியமைச்சர் கலந்துகொண்டார். ஆனால், நிதியமைச்சர் தன் உறவினர் வீட்டு வளைகாப்புக்குச் செல்வதற்காகக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார் என்றும் தனி விமானம் இல்லாததால்தான் கூட்டத்துக்குச் செல்லவில்லை என்றும் செய்திகள் பரப்பப்பட்டன. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் ``நிதியமைச்சர் சொல்லும் பதிலைப் பாருங்கள்'' எனக் கருத்துத் தெரிவிக்க, இந்த விவகாரம் மேலும் சூடானது. தொடர்ந்து, ``பொய் சொல்வதற்குக்கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும்'' என பதிலடி கொடுத்திருந்தார் நிதியமைச்சர்.
இது குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45-வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் பேசப்படவேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருந்தும், தமிழக அரசின் சாா்பில் நிதியமைச்சா் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி. கொரோனா நோய்த் தொற்றால் இணையவழியில் நடைபெற்றுவந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், சுமாா் 20 மாதங்களுக்குப் பிறகு நேருக்கு நோ் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல், நிறுவனங்கள் வரையில் அனைத்துத் தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தின் பிரச்னைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை. இது மக்களை மதிக்காத யதேச்சதிகாரம் என்பது பாஜக-வின் கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் நிலைப்பாடும் ஆகும். மேலும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் தமிழக நலனுக்காகப் பங்கு பெறாமல், அதன் மதிப்பைப் பழித்துப் பேசுவதை, அரசியல் எதிா்ப்பாக இல்லை, அரசியல் சாசன எதிா்ப்பாகத்தான் பாா்க்க வேண்டியிருக்கிறது.
தங்களது நிதியமைச்சர், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, தான் கலந்துகொள்ள இயலாத காரணத்தைச் சொன்னபோது தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால்தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டுக்கு நிதியமைச்சர்? இதிலிருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது'' என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், நிதியமைச்சர் சொல்லாத ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு, முதல்வருக்கு தேசியக் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருக்கிற ஒருவர் கடிதம் எழுதலாமா எனக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.
``இரண்டு, மூன்று விமானங்கள் மாறிச் செல்ல வேண்டும், வளைகாப்பு நிகழ்ச்சி இருக்கிறது எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர்தான் பேசினார். அமைச்சர் சொல்லாத ஒன்றை நாங்கள் பேசவில்லை. 20,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை இருக்கிறது, ஜி.எஸ்.டி மாநில உரிமையைப் பறிக்கிறது என்ற நிதியமைச்சர் வளைகாப்பு நிகழ்ச்சியைக் காரணம் சொல்லி, போகவில்லை என்று சொல்வது சரியா என்பதுதான் எங்கள் கேள்வி. மற்றபடி அவர் உறவினர் வீட்டு வளைகாப்பு என்று வாட்ஸ்அப்பில் பரப்பப்படுவது தவறான செய்தி. ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாகக் கேள்வி கேட்கக் கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம்?
ஜி.எஸ்.டி கூட்டம் நடக்கும்போது அங்கு சென்று நமக்கான நிலுவைத்தொகையைக் கேட்பதுதானே நியாயம்! ஒரு வாரத்துக்கு முன்பாகத் தகவல் தெரிவித்தால் போக முடியாதா என்ன... தமிழக மக்களின் மீதான அலட்சியத்தால்தான் அவர் போகவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. அதேபோல, இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் தனக்குக் கிடைத்த தகவலின்படி, தனி விமானம் இல்லாததால்தான் போகவில்லை என்று எழுதுகிறார். அது உண்மையில்லை என்றால் மறுத்துவிட்டுப் போகட்டும். அதற்காக அவரைத் தரக்குறைவாகப் பேசுவது எந்தவிதத்தில் நியாயம்... தான் மேலானவன் என்று அவர் பேசிக்கொள்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், மற்றவர்கள் தனக்குக் கீழானவர்கள் என்று பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகில்லை'' என்கிறார் அவர்.
Also Read: பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
தமிழக நிதியமைச்சருக்கு ஆதரவாகப் பேசும் சிலரும்கூட அவர் கடுமையாக பதிலளிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். இது குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், இராஜீவ் காந்தியிடம் பேசினோம்.
``மக்கள்மீது அக்கறை இல்லை என்பது தவறான செய்தி. ஜி.எஸ்.டி கூட்டம் முறையாகக் கூட்டப்படவில்லை. அங்கு விவாதிக்கப்படும் அஜெண்டா குறித்து ஏற்கெனவே தமிழக அரசுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கூடுதல் செஸ் குறித்து ஒரு முடிவெடுங்கள். அதற்குப் பிறகு பேசலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால், அதற்கு எந்த பதிலும் வரவில்லை. ஏற்கெனவே வரவேண்டிய தொகையும் வரவில்லை. மாநில அரசின் உரிமையைப் பறிக்கின்ற வகையில், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதுதான் கூட்டத்தில் பங்கேற்காததற்கான உண்மையான காரணம்.
மக்களின் தேவை குறித்து அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு பொறுப்புடனேயே அமைச்சர் பதிலளித்துவருகிறார். ஆனால், தேவையில்லாமல், பொறுப்பற்ற வகையில், தரக்குறைவான விமர்சனங்களை முன்வைக்கும்போதுதான், நக்கலாக பதில் சொல்லவேண்டிய தேவை எழுகிறது. இந்த விஷயத்தில், பா.ஜ.க-வினருக்கு எதிரான அவரின் பதில்களை நாம் அந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-ptr-palanivel-thiagarajan-statement-on-gst-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக