2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளிலுள்ள நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வோம்' என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அளித்தபடி தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், ஐந்து பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமென கடந்த செப்டம்பரில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், தகுதியான நபர்களைக் கண்டறிந்த பிறகுதான், இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமென தமிழக அரசு சொன்னது. இதற்காக 51 கேள்விகள் முன்வைக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த ஆய்வில்தான், பல நூறு பேருக்கு மோசடியாக நகைக்கடன் அளிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்திருக்கிறது.
நம்மிடம் பேசிய தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் சிலர், "தமிழகத்தில் 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும், தலைநகரான சென்னையில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியும் செயல்படுகின்றன. இவற்றில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வேளாண் மற்றும் வேளாண் சாராத வகைகளுக்கு கடன் அளிக்கப்படுகிறது. இதில் நகைக்கடனும் அடக்கம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதே, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமென தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அபார வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து, பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிலர் முறைகேடாக நகைக்கடன் பெற்றுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் எப்படியும் நகைக்கடன்கள் தள்ளுபடியாகும் என்கிற நம்பிக்கையில், இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
Also Read: தங்கமணி, செல்லூர் ராஜூ... ஸ்டாலினின் அடுத்த ஸ்கெட்ச்?! | Elangovan Explains
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நபர் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கடன் பெற்றுள்ளார். அவர் அடகு வைத்திருக்கும் சில நகைகள் போலியானவை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி, தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சிலர் மட்டுமே தலா 600-க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஒரே நபர் தன்னிடமுள்ள தங்க நகைகளை ஐந்தைந்து பவுன்களாகப் பிரித்து அடகு வைத்து 340-க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றிருக்கிறார். தகுதியான நபர்களுக்கு மட்டுமே அரசு வழங்கக்கூடிய கடன் தள்ளுபடி சென்று சேர வேண்டும் என்று தி.மு.க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், போலியான நகைகளை அடமானம் வைத்தும், சில இடங்களில் நகைகளே இல்லாமல் கடன் அளித்தும் மோசடி நடைபெற்றிருக்கிறது. இந்த சங்கங்களில் பொறுப்பில் இருந்தவர்கள், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எல்லோரும் இந்த மோசடி நடைபெற்றதற்கு பதில் சொல்லியாக வேண்டும்" என்றனர்.
கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "எங்களது பூர்வாங்க விசாரணையில் நகைக்கடன் அளித்ததில் மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சமாகி இருக்கிறது. ஒரே நபருக்கு பல்வேறு சங்கங்களில் கடன் அளித்தது, போலியான நகைகள், நகைகளே இல்லாமல் கடன் அளித்தது என பல்வேறு வகைகளில் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. எங்களது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளோம். அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிடலாம்" என்றனர்.
'கூட்டுறவு கடன் சங்கங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் தள்ளுபடியாகும்' என்று நினைத்துதான் சிலர் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். தி.மு.க அரசு இந்த கடன் விவகாரத்தை ஆய்வு செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லையாம். 'அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க சீனியர்களின் ஆதரவு இல்லாமல் இந்தளவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருக்காது' என்று நினைக்கிறாராம் ஆட்சி மேலிடம். ஆக, இந்த மோசடி குற்றச்சாட்டை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்தி, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு சிக்கல் உண்டாக்க 'ஸ்கெட்ச்' போடுகிறதாம் தி.மு.க.
source https://www.vikatan.com/news/politics/former-co-operative-minister-sellur-raju-is-in-trouble
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக