30 தொகுதிகளைக்கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவை ஒரு ராஜ்ய சபா எம்.பி-யை தேர்வு செய்ய முடியும். அதன்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க., தி.மு.க கட்சிகளுக்கு தலா ஆறு எம்.எல்.ஏ-க்களும், ஆறு சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸுக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்களும் இருக்கின்றனர். இது தவிர மூன்று நியமன எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க வசம் இருக்கிறார்கள். நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், வெறும் ஆறு எம்.எல்.ஏ-க்களை மட்டும் வைத்திருக்கும் பா.ஜ.க., மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸிடமிருந்து ராஜ்ய சபா எம்.பி பதவியை தட்டிச் சென்றிருக்கிறது.
ரீவைண்ட்:
தன்னிச்சையாகச் செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரங்கசாமி, 2011-ல் தனிக்கட்சி தொடங்கி அதிமுக, பாஜக கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்து மூன்றே மாதங்களில் ஆட்சியைக் கைப்பற்றினார். அதே வேகத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்குமென்று நினைத்திருந்த அதிமுக-வைக் கழற்றிவிட்டு, பாஜக-வுக்கு மட்டும் ஒரு நியமன எம்.எல்.ஏ பதவியைத் தாரை வார்த்தார். உஷ்ணமான அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ``முதுகில் குத்திவிட்டார் ரங்கசாமி” என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார். எந்த காரணத்துக்காக காங்கிரஸிலிருந்து தூக்கி எறியப்பட்டாரோ, அதையே புதிதாகத் தொடங்கிய கட்சியில் செய்தார் ரங்கசாமி. அதனால் அவரது சொந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களுமே அவருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். 2015-ல் காலியான ராஜ்ய சபா பதவியை தங்களுக்குக் கொடுக்குமாறு கேட்டது கூட்டணியில் இருந்த பா.ஜ.க. ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ரங்கசாமி, ஏனாம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவை வேட்பாளராக்க முடிவெடுத்தார்.
அதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால் தனது நண்பரும், தொழிலதிபருமான கோகுலகிருஷ்ணனை இறுதி செய்தார். அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், திமுக ஆதரவுடன் சுயேச்சையாகக் களமிறங்க காத்திருந்த ஜெகத்ரட்சகனுக்கு மாற்றி வாக்களிக்க முடிவெடுத்தனர். ஒருவேளை அப்படி நடந்திருந்தால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கூறி ரங்கசாமியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பகையைத் தீர்க்கக் காத்திருந்தது அதிமுக.
விடிந்தால் என்ன நடக்குமோ என்று எதிர்க்கட்சிகளே படபடப்புடன் காத்திருந்த நிலையில், இந்திய அரசியலையே ‘அட…’ போடவைத்த அந்த வரலாற்று சிறப்புமிக்க டைவை அடித்தார் ரங்கசாமி. ஒரே இரவில் அதிமுக-வுக்கு ராஜ்ய சபா பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு, அவர் நினைத்தபடி தனது நண்பரான கோகுல கிருஷ்ணனையும் எம்.பி-யாக்கினார். தனது அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர தருணம் பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவிடமே சரணடைந்ததுடன் ஆட்சியையும் தக்கவைத்துக்கொண்டார்.
இப்போது ராஜ்ய சபா எம்.பி-யான கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய எம்.பி-க்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தப் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்குமிடையே கடுமையான இழுபறி நீடித்துவந்தது. புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஐந்து வருடங்கள் அமைச்சராக இருந்துவிட்டு, ஆட்சி முடியும் தறுவாயில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து ஆட்சியைக் கவிழ்த்தவர் ஏனாம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மல்லாடி கிருஷ்ணாராவ்.
அதன் பிறகு முதல்வர் ரங்கசாமியை ஏனாம் தொகுதிக்கு அழைத்துச் சென்று, 2021 தேர்தலில் போட்டியிடவைத்தார். அங்கு தோல்வியைத் தழுவினாலும், மல்லாடியின் விசுவாசத்தை ஈடுகட்ட நினைத்த ரங்கசாமி, அவரை ராஜ்ய சபா வேட்பாளராக்க நினைத்தார். `மாநில அந்தஸ்துக்கு எதிரான நிலைப்பாடுடைய ஒருவரை புதுச்சேரி எம்.பி-யாக்குவதா?’ என்று ஆரம்பத்தில் குரலெழுப்பிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், அதன் பிறகு அமைதியாகிவிட்டனர்.
இந்தநிலையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள், அவர்களுக்கு ஆதரவளித்துவரும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, ராஜ்ய சபா தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்படி முதல்வர் ரங்கசாமியிடம் கடிதத்தைக் கொடுத்தனர். அதேபோல பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஒரே காரணத்துக்காகப் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியடைந்த அதிமுக, `நியமன எம்.எல்.ஏ பதவிகளில் எங்களைப் புறக்கணித்துவிட்டீர்கள். ராஜ்ய சபா எம்.பி-யையாவது எங்களுக்குக் கொடுங்கள்’ என்று ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்தது.
அதையும் அமைதியாக வாங்கிக்கொண்டு வழக்கம்போல புன்னகையை மட்டும் பதிலாக அளித்தார். இதற்கிடையில் எப்படியாவது இந்தத் தேர்தலில் அறுவடையை பார்த்துவிட வேண்டுமென்று நினைத்த பாஜக-வின் ஒரு பிரிவினர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை வேட்பாளராக்க முடிவெடுத்து இறக்குமதி செய்தார்கள். தொடர்ந்து அப்பா பைத்தியம் சாமிகள் கோயிலில் வைத்து முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்தால் நல்லது நடக்கும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு அந்தத் தொழிலதிபர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அந்தத் தகவல் தெரிந்த சில நிமிடங்களில் ’கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடப்போகிறது’ என்று மல்லாடி கிருஷ்ணாராவும் பதறியடித்துக்கொண்டு கோயிலில் ஆஜரானார். பூஜை முடிந்ததும் இருவர் கைகளிலும் எலுமிச்சைப் பழத்தை வைத்த முதல்வர் ரங்கசாமி, தொழிலதிபர் தரப்பை தனியாக அழைத்து `இங்கு வழிப்பறி கும்பல் அதிகம். மூட்டையை கட்டிக்கொண்டு கிளம்பிவிடுங்கள்’ என்றரீதியில் சிக்னல் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான். அதற்கடுத்த சில நிமிடங்களில் ஈ.சி.ஆரில் சென்னையை நோக்கிப் பறந்ததாம் அந்த தொழிலதிபரின் கார்.
இந்த விவகாரம் குறித்துப் பேச துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், `இதில் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. டெல்லியைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டாராம் அவர். அதன் பிறகு டெல்லியிலிருந்து முதல்வர் ரங்கசாமியை தொடர்புகொண்ட பா.ஜ.க தலைமை, `எங்கள் வேட்பாளரை நிறுத்தறோம் ஜி. ஆதரவு கொடுங்க. புதுச்சேரிக்கு நிறைய தேவைகள் இருக்கு’ என்று கூற அரை மனதுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
Also Read: புதுச்சேரி: `நியமன எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி?!’ -பா.ஜ.க-வின் அடுத்த அதிரடி
உடனே களமிறங்கிய டெல்லி பா.ஜ.க தலைமை காரைக்காலைச் சேர்ந்த ஜி.என்.எஸ்.ரவி, ஜெயக்குமார் ரெட்டியார், செல்வகணபதி என புதுச்சேரி பா.ஜ.க அனுப்பிய மூவர் பட்டியலை ஆய்வு செய்திருக்கிறது. அவர்களில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளராகவும், ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்குத் தனது பள்ளியைக் கொடுத்துவந்த 14-வது சட்டப்பேரவையின் முன்னாள் நியமன எம்.எல்.ஏ செல்வகணபதியை டிக் அடித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் நேற்று இரவு செல்வகணபதியை ராஜ்ய சபா வேட்பாளராக அறிவித்து அறிவிப்பை வெளியிட்டாராம் பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-story-of-bowing-by-chief-minister-rangasamy-and-rajya-sabha-mp-post-to-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக