Ad

சனி, 4 செப்டம்பர், 2021

Money Heist Part 5 Vol 1: ஓயாம துப்பாக்கில சுடுறது எல்லாம் இருக்கட்டும்... வாத்தி எப்ப கேம் ஆடுவார்?

'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் நான்காவது பார்ட் (சீசன்) ஒரு பரபரப்பான கட்டத்தில் முடிந்தது. புரொபசர் இருக்கும் இடத்தை இன்ஸ்பெக்டர் அலிசியா கண்டறிந்து துப்பாக்கி முனையில் அவரைப் பிடித்துவிட, இந்தப் பக்கம் அவரின் மனைவி லிஸ்பன் வெற்றிகரமாகக் கொள்ளைக் கும்பலுடன் பேங்க் ஆப் ஸ்பெயினில் இறங்கிவிடுகிறார். வெளியில் டென்ட் அடித்திருக்கும் கர்னல் டொமாயோ இவர்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்க அலர்ட்டாக இருக்க, இறந்துவிட்ட நைரோபிக்காக போராட எத்தனிக்கிறது நம் வாத்தியின் படை. இப்படி நிறையப் பரபரப்புகள், கேள்விகளுடன் தொடங்கும் பார்ட் 5, அதே ஜெட் வேகத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகளை அடுக்குகிறது.
Money Heist Part 5 Vol 1

கர்ப்பிணியாக இருக்கும் இன்ஸ்பெக்டர் அலிசியாவை புரொபசர் சமாளிக்க, கர்னல் டொமாயோவை வீழ்த்த லிஸ்பன் பக்கா ஸ்கெட்ச் ஒன்றுபோட, சீஃப் செக்யூரிட்டி காண்டியா, டோக்கியோவை வீழ்த்த நேரம் எதிர்பார்த்துக் காத்திருக்க, அர்துரோ ஒருபுறம் கலகம் செய்ய, கேப்பே கிடைக்காத வண்ணம் பல கூத்துகள் அரங்கேறுகின்றன. அவ்வப்போது வரும் பிளாஷ்பேக் காட்சிகளுடன், மற்றொரு டிராக்கில் பெர்லின் தன் கேர்ள் பிரெண்ட் மற்றும் மகனுடன் செய்யும் ஹெய்ஸ்ட் ஒன்றும் காட்சிகளாக விரிகிறது.

யார் யாரை வீழ்த்தினார்கள், எப்போதும் பல அடிகள் முன்னால் யோசித்து, பல பிளான்களையும் ஆப்ஷன்களையும் கையில் வைத்திருக்கும் புரொபசர் இந்த முறை என்ன செய்தார், பேங்க் ஆப் ஸ்பெய்னில் என்னவெல்லாம் கலவரங்கள் அரங்கேறின... விடை சொல்கிறது இந்த பார்ட் 5, வால்யூம் 1.

பலரையும் வெப் சீரிஸ் பக்கம் இழுத்துவந்த பெருமை நிச்சயம் இந்த 'மணி ஹெய்ஸ்ட்' தொடருக்கு உண்டு. ஒரேயொரு ஹெய்ஸ்ட், லிமிடட் சீரிஸ் என்று இருந்த தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் இரண்டு சீசன்களாக மாற்றி ஹிட்டடிக்க வைக்க, தற்போது இரண்டாவது ஹெய்ஸ்டையே மூன்று சீசன்கள் வரை இழுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். பழைய சீசன்களில் இருந்த பரபரப்புகளும், ட்விஸ்ட்களும் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும், அந்த வேகம் மட்டும் குறையவில்லை. நிறையக் காட்சிகளை அடுக்கினாலும், நிகழ்காலக் கதையில் தொய்வு என்பதற்கு இடமே இல்லை. பிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்து அந்த மாஸ் மீட்டரையும், அதிரடியையும் எவ்வித குறையுமின்றி சரியாகக் கையாண்டு இருக்கிறார்கள். அதுதான் இத்தொடரின் ஆகப்பெரும் பலமே!

Money Heist Part 5 Vol 1 | Tokyo

புரொபசர், பெர்லின், லிஸ்பன், அலிசியா என நிறையப் பாத்திரங்கள் இருந்தாலும், இந்த முறை எல்லோரையும் லெஃப்டில் ஒதுக்கிவிட்டு நம் மனதில் இடம்பிடிக்கிறார் டோக்கியோ. அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், கோபம், திமிர் எனப் பலவகை உணர்ச்சிகளை யதார்த்தமாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். மொத்தக் கதையும் அவரின் பார்வையில் நகர்வதாக அவ்வப்போது கௌதம் மேனன் வகை வாய்ஸ்ஓவர்கள் வந்துகொண்டிருந்தது இதிலும் தொடர்கிறது. ஆனால் இந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' ஐடியா, இனி எப்படி அரங்கேறும் என்பது புரியவில்லை. வால்யூம் 2-வில் இதற்கான விடை இருக்கலாம்.

அதிரடி சண்டைக் காட்சிகள், அறிவைப் பயன்படுத்தும் செக்மேட்கள் தொடரின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விஷயங்கள் என்றாலும், ஒரு கட்டத்துக்கு மேல் வெறும் தோட்டாக்கள் மட்டுமே வெடித்துக் கொண்டிருப்பது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிளாஷ்பேக் காட்சிகள் தவிரப் பிற காட்சிகளில் எல்லாம் பெரும்பாலும் தோட்டாக்கள் சீறிப்பாய்கின்றன, இல்லையென்றால் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. இதனாலேயே ஹெட்செட்டை கழற்றி வைத்துவிட்டு அவ்வப்போது பிரேக் எடுக்கத் தோன்றுகிறது.

அதேபோல, அரசப் பயங்கரவாதத்தையும், அதிகார வர்க்கத்தையும் கேள்வி கேட்கும் அரசியலும் இந்த முறை பெரும்பாலும் ஆப்சென்ட்டே வாங்கியிருக்கிறது. பார்த்து பண்ணுங்க நண்பா!
Money Heist Part 5 Vol 1

கர்னல் டொமாயோவை லாக் செய்யும் காட்சி, பக்கா பிளான் என்றாலும் இதே தொடரில் பார்த்துப் பழகிய டெம்ப்ளேட் உணர்வையே அது தருகிறது. மற்றொரு புறம், இன்ஸ்பெக்டர் அலிசியா கர்ப்பிணி என்பதால் நாம் எதிர்பார்த்த பிரசவக் காட்சியும் வந்தே தீருகிறது. யூகிக்க முடியாத காட்சியமைப்புகளும், புரொபசரின் மாஸ்டர் பிளானிங்கும்தான் இத்தொடரின் பலம் என்னும்போது அது இங்கே சுத்தமாக மிஸ்ஸிங். பிளான் ஏ, பி, சி... டு இஸட் வரை யோசித்து வைத்திருக்கும் புரொபசரின் மூளை இந்தப் பாகத்தில் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறதோ என்று நமக்கு உருவாகும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

மறுபுறம் பெர்லின் மற்றும் அவர் மகனின் கதை எதற்காகச் சொல்லப்படுகிறது என்பதற்கான தெளிவான விளக்கமும் இல்லை. 'விண்ணைத் தாண்டி வருவாயா' சிம்பு போல, அடுத்தப் படத்துல பதில் சொல்றேன் என்பதுபோல, எல்லாவற்றுக்கும் அடுத்த வால்யூமில் பதில் சொல்றோம் என நழுவியிருக்கிறார்கள்.

Also Read: Fast & Furious - 9 | வானத்தில் பறக்கும் கார்களும், வின் டீசல் vs ஜான் சீனா சாகசங்களும்!

Money Heist Part 5 Vol 1

சண்டைக் காட்சிகளிலும் இதுவரை இருந்த ரியலிசம் சுத்தமாக மிஸ்ஸிங். அதுவும் 'மனிதன்' பட கிளைமாக்ஸ் ரஜினிபோல, டோக்கியோ தன்னை நோக்கிவரும் வெடிகுண்டைப் பிடித்துத் திருப்பி வீசுவதெல்லாம்... ஃபைவ் மச்ச்ணா! ஹெய்ஸ்ட் கும்பல் ஆங்காங்கே சுவரிலும் தரையிலும் துளையிடும் அளவுக்கு இந்த முறை திரைக்கதையிலும் பெரிய சைஸ் ஓட்டைகள் எட்டிப் பார்க்கின்றன. ஐந்து எபிசோடுகள் முடிந்தும் நான்காவது சீசனின் கிளைமாக்ஸுக்குப் பிறகு கதை நகரவே இல்லையோ என்ற உணர்வும் எட்டிப் பார்க்கவே செய்கிறது.

பார்த்துப் பழகிய டெம்ப்ளேட்டை ஒதுக்கிவிட்டு, புரொபசர் ஆடும் மாஸ்டர்மைண்ட் கேம்களை மீண்டும் கொண்டுவந்தால்தான் இந்த 'மணி ஹெய்ஸ்ட்'க்கு நிறைவானதொரு Bella ciao-வை (Goodbye beautiful) பாட முடியும். மற்றபடி என் தேவை என்டெர்டெயின்மென்ட் மட்டுமே என்பவர்கள் தாராளமாக இதற்கு ஃபயர் எமோஜி விடலாம்!


source https://cinema.vikatan.com/web-series/netflix-money-heist-series-part-5-volume-1-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக