Ad

சனி, 4 செப்டம்பர், 2021

பத்திரப்பதிவுத் துறை: பிளாட்டுகள் கோல்மால்! - சிக்கப்போகும் அதிகாரிகள்!

கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக முக்கிய அமைச்சர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் ரெய்டுகளும் நடந்தன. இவர்களைப்போலவே மேலும் 10 முன்னாள் அமைச்சர்களின் அசையா சொத்துக்களின் விவரங்கள், அவர்களின் குடும்பத்தினர், பினாமிகள் யார் யார்; அவர்களின் பெயர்களில் கடந்த காலங்களில் பதிவான சொத்துக்கள், நிறுவனங்கள் பற்றிய விவரங்களைப் பத்திரப்பதிவுத்துறை மூலமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேகரித்து வருகின்றனர். பத்திரப்பதிவுத்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக தற்போது செயல்பட்டு வருகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் கந்தசாமி ஐ.பி.எஸ், பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ்., இருவரும் களத்தில் இறங்கியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினரும், அவர்களுக்கு துணைபோன அதிகாரிகளின் தகிடுதத்தங்களைப் பற்றி பத்திரப்பதிவுத்துறையின் உயர் அதிகாரிகளும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை ரெய்டு காட்சிகள்

சென்னை கோயம்பேடு ஏரியாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்க முயன்றிருக்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் சேலத்தில் கொடிகட்டி பறந்த ஆறு எழுத்துப் பிரமுகர் இதுதொடர்பாக பத்திரம் செய்யும்படி பிரஷர் கொடுத்திருக்கிறார். ஆனாலும், அப்போது ஐ.ஜி. பதவியில் இருந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மறுத்திருக்கிறார். அவரை அங்கிருந்து மாற்றி, அடுத்த வந்த அதிகாரியை வைத்து பத்திரப்பதிவு நடந்துவிட்டதாம். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒரு அதிகாரிக்கு மாறுதல் என்கிற பனிஷ்மெண்ட் கொடுத்து விவகாரத்தை அமுக்கிவிட்டார்களாம். இதேபோல், 2017-ம் வருடத்துக்கு முன்பு, விருகம்பாக்கத்தை சேர்ந்த பில்டர் ஒருவருக்கு ஆளுங்கட்சியின் மேலிடப் புள்ளிகள் சொல்லி, நிறைய சலுகைகளை வாரி வழங்கினார்களாம். பணிமாறுதலுக்காக பத்திரப்பதிவுத்துறையின் அதிகாரிகள் அப்போதைய அமைச்சர் மூலம் வளம் கொழிக்கும் இடத்தை கேட்டு நெருக்கடி கொடுக்க.. ஐ.ஜி. எதிர்ப்பு தெரிவித்தார்.

இப்படி பலவித முறைகேடுகள் துறையில் நடந்துவந்த நிலையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணிக்கும், அப்போதைய பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. ஜோதி நிர்மலாசாமிக்கும் நேரிடையான மோதல் வெடித்தது. அதன் எதிரொலியாக, டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டார் ஐ.ஜி. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஜெயித்ததும், பத்திரப்பதிவுத்துறையின் செயலாளராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே, இதே துறையில் ஒன்றரை வருடங்கள் பதவியில் இருந்தவர். அங்கு நடக்கும் அனைத்து உள் விவரங்களை நன்றாக அறிந்தவர் என்பதால், தவறுக்குத் துணைபோன அதிகாரிகள் விஷயத்தில் சாட்டையை சுழற்ற வருகிறார். ''எனக்குக் கொடுத்த துறையை நன்றாக நடத்தவேண்டும். லஞ்ச ஊழலுக்கு இடம்கொடுக்கக்கூடாது. அதற்கான மாற்றங்களை உடனடியாக செயயுங்கள்'' என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.

பத்திரப்பதிவு

இதையடுத்து முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுக்க அரசின் அங்கீகாரம் பெறாத சுமார் 25 ஆயிரம் பிளாட்டுகளை சட்டவிரோதமான முறையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாம். அடுத்தகட்ட விசாரணையில், இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்கிறார்கள் பத்திரப்பதிவுத்துறையின் முக்கிய அதிகாரிகள். இந்த மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் பிஸினஸ் புள்ளிகள், நில புரோக்கர்கள், பத்திரப்பதிவு அதிகாரிகள் என அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி முடிவு செய்திருக்கிறாராம். அதற்கு முன்னோட்டமாகத்தான், செப்டம்பர் 2-ம் தேதியன்று தமிழக சட்டசபையில் போலி பத்திரப்பதிவுகளை பதிவாளரே ரத்து செய்யலாம் என்பதை முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்ததும், சட்டம் அமல்படுத்தப்படும். அதேபோல், போலி பத்திரப்பதிவு செய்கிறவர்கள் மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நடக்கும் பதிவுத்துறை முறைகேடுகளை உடனுக்குடன் விசாரிக்கும் வகையில், புகார் மையம் ஒன்றை சென்னை ஐ.ஜி. அலுவலகத்தில் ஆரம்பித்துள்ளார் அமைச்சர். தினமும் நூற்றுக்கணக்கான புகார்கள் போன் மூலம் வருகிறதாம். இதையெல்லாம் அதிகாரிகள் கொண்ட டீம் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பத்திரப்பதிவு அலுவலகம் (மாதிரி படம்)

தமிழக அரசுக்கு வருடத்துக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பெற்றுத்தரும் பத்திரப்பதிவுத்துறை. தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த 120 நாட்களில் 82 நாட்கள் மட்டுமே துறை இயங்கியது. நாள் ஒன்றுக்கு சுமார் 56 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பீடும் போது இந்த தொகை கொஞ்சம் கூடுதலாக கிடைத்துள்ளது.

சுமார் 3700 பணியாளர்களை கொண்டது பத்திரப்பதிவுத்துறை. இந்த பணியாளர்களில் நேர்மையானவர்கள் பலரும் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு தரப்பினர் நில மாஃபியா, ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ஆகியோர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். இதுவரை 400 அதிகாரிகள் லஞ்ச ஊழல் பிரச்னைகளில் சிக்கி நீதிமன்றத்துக்கு அலைந்துகொண்டிருக்கிறார்களாம். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது, முறைகேடான பத்திரப்பதிவு என்று லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளில் சிக்கி சஸ்பெண்டு ஆனவர்கள் 68 பேர்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 அதிகாரிகள் வெவ்வேறு புகார்களில் சிக்கி சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்களாம்.

பத்திரப்பதிவு

Also Read: சேலம்: `ரூ.3.2 லட்சம், 34 தங்கக் காசுகள்!’ - ரெய்டில் சிக்கிய பத்திரப்பதிவு டி.ஐ.ஜி ஆனந்த்

பத்திரப்பதிவு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற செப்டம்பர் 6-ம் தேதியன்று சட்டசபையில் பத்திரப்பதிவுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது ஏதோ முக்கிய அறிவிப்பு ஒன்றை துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட இருக்கிறாராம். அது என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-moorthy-starts-the-enquiry-on-registration-department

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக