வீடு என்பது காலப்போக்கில் விலை ஏறக்கூடிய சொத்து மட்டுமல்ல; `உணவு, உடை, இருப்பிடம்' என்ற மூன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றும்கூட. ஆகவே, போன தலைமுறையினர் பலரின் கனவும் சொந்த வீடாகவே இருந்தது. ஆனால், சமீப காலங்களில் இளைய தலைமுறையினர் வீட்டை ஒரு பாரமாக, ஒரு வேண்டாத முதலீடாகப் பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சொந்த வீடா, வாடகை வீடா என்பது ஒரு பட்டிமன்ற விவாதமாகவே மாறி வருகிறது.
இளைய தலைமுறையினரின் வாதம்:
-
வீடு என்பது பல மடங்கு பெருகும் ஒரு நல்ல முதலீடாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அதில் கறுப்புப் பணம் விளையாட ஆரம்பித்த பின் அது மோசடியாளர்களின் முக்கியமானக் கருவியாக மாறிவிட்டது. நிலத்தின் விலை வானத்தின் உச்சிக்கே சென்றதில் பலருக்கும், வீடு என்பது எட்டாக்கனியாகிவிட்டது.
Also Read: பாதுகாப்புக்கும் வருமானத்துக்கும் உத்தரவாதம்; பத்திரங்களில் முதலீடு செய்வது ஏன் நல்லது? - 15
-
அதிலிருந்து கிடைக்கும் வருமானம் 2 - 3% மட்டுமே. அதிலும் வரி, ரிப்பேர் செலவு போன்றவற்றைக் கழித்துவிட்டுப் பாருங்கள். என்ன மிஞ்சுகிறது?
-
மேலும், இன்று கடன் வாங்காமல் மொத்தப் பணமும் கொடுத்து வீடு வாங்க முடியுமா? டவுன் பேமென்ட்டுக்காக நம் மொத்த சேமிப்பையும் காலி செய்கிறோம். அடுத்த இருபது வருடங்கள் ``வேலை நிரந்தரம்தானா, ஒவ்வொரு மாதமும் தவறாமல் இ.எம்.ஐ கட்ட முடியுமா” என்ற கவலையுடனேயே வாழ்கிறோம். ஹோட்டல், சுற்றுலா போன்ற சிறு சந்தோஷங்களைத் தியாகம் செய்ய நேர்வதோடு, குழந்தைகள் மேற்படிப்பு, நம் ஓய்வுக் காலம் போன்ற முக்கிய விஷயங்களுக்கு சேமிக்கவும் பணம் இருப்பதில்லை.
-
ரூ.60 லட்சம் கடன் வாங்கினால் 20 வருடங்களில் நாம் கட்டும் வட்டியே இன்னொரு ரூ.60 லட்சத்தைத் தாண்டிவிடும் அபாயமும் உள்ளது.
-
இன்று கட்டப்படும் பல அடுக்கு மாடிக் குடியிருப்புகள் 30 முதல் 40 வருடங்களே நிலைக்கும் என்று சில ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுவது உண்மைதானோ என்ற கவலை இருக்கிறது.
-
நம் பட்ஜெட்டுக்குள் வரும் வீடு அநேகமாக புறநகர் பகுதிகளிலேயே அமைவதால் ஆபீஸுக்குப் போய் வருவதே பெரிய காரியம் என்றாகிவிடுகிறது.
-
ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டால் வேறு ஊர்களிலோ, ஏன் வேறு ஏரியாவிலோகூட வேலை தேட மனம் வருவதில்லை. இதனால் நம் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
Also Read: காம்பௌண்ட் எஃபெக்ட்: ஐன்ஸ்டீன் இதை ஏன் 8-வது அதிசயம்னு சொன்னார்? - பணம் பண்ணலாம் வாங்க - 14
சென்ற தலைமுறையினர் கூறும் யதார்த்தம்:
வருடம்தோறும் வாடகை ஏறும் சூழ்நிலையில் எத்தனை காலம் வாடகை வீட்டில் காலம் தள்ள இயலும்? வாடகை என்பது அடுத்தவர் கைக்குச் செல்லும் பணம். ஆனால், கடன் வாங்கி வீடு கட்டினால், வாடகைக்கு பதில் நாம் கொடுக்கும் இ.எம்.ஐ நமக்கு சொத்தாகச் சேர்கிறது. மேலும், காலப்போக்கில் வீட்டு விலை ஏறும்போது நம் சேமிப்பு பல மடங்கு உயர்கிறது.
அரசும் `அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை ஊக்குவிக்க வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்து வருகிறது. நாம் வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டிக்கு பிரிவு 24-ன் கீழ் ரூ.2 லட்சம் வரையும், அசலுக்கு பிரிவு 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஒருவேளை, வேலை நிமித்தம் ஊரை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டால் இந்த வீட்டை வாடகைக்குத் தரலாம்; அல்லது விற்கலாம்.
இப்படி இரு தலைமுறையினரும் தத்தம் வாதங்களில் சரியாகவே இருக்கிறார்கள். அப்படியானால் என்ன செய்யலாம்?
வீடு என்பது என்றுமே ஒரு அடிப்படைத் தேவைதான். ஒரு மனிதனுக்கு ஒரு வீடு தேவை என்று அரசு கூறுவதில் அர்த்தம் உள்ளது. அதற்காக வேறு எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் முதலில் வாடகை வீட்டில் இருந்து தேவையானபோது வீட்டை மாற்றுவது, ஆபீஸ் அருகே குடிபோவது, வாழ்வின் சிறு, சிறு சந்தோஷங்களை அனுபவிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.
Also Read: சேமிப்புக்காக சீட்டு போட்டிருக்கிறீர்களா? அந்த முதலீடு உண்மையில் லாபகரமானதுதானா? - 13
வீட்டு வாடகைப் படிக்கு (HRA) வரிவிலக்கும் பெறலாம். நிதானமாக டவுன் பேமென்டுக்கான பணத்தை சேமித்து, பேங்க்கில் கடன் வாங்கி வீடு வாங்கலாம். கூடியவரை வீட்டின் விலையில் 50% அளவு டவுன் பேமென்ட்டாகக் கொடுக்க முடிந்தால் இ.எம்.ஐ சுமையாக இருக்காது.
வீடு வாங்க எண்ணுவோர், வங்கிகள் ஏலம் விடும் சொத்துகளையும் கவனிக்கலாம். இத்தகைய ஏல விற்பனைகள் வங்கிகளுக்கும், வாங்குவோருக்கும் லாபகரமாக அமைகின்றன. ஒரு முறை ஏலத்தில் பங்கேற்று சொத்து வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் ஏல விற்பனையைத் தேடுகிறார்களாம். எடுத்த எடுப்பில் அகலக்கால் வைக்காமல், முதல் வீட்டை சிறிய அளவில் வாங்கி, சிலகாலம் சென்றபின் சேமிப்பை அதிகரித்து உங்கள் கனவு இல்லத்தை வாங்குங்கள். ஆல் தி பெஸ்ட்!
- (வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திக்கிறேன்)
source https://www.vikatan.com/business/finance/why-some-people-dont-want-to-buy-a-new-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக