வெறுங்கையால் முழம் போட்டே வாழ்வில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு பங்குச் சந்தையே சான்று. பணக்காரர்களை ஏழையாக்கி, சாமான்யர்களை உச்சிக்கு உயர்த்தி பங்குச் சந்தை புரியும் மாயா ஜாலங்கள், `இதுதான் சமரசம் உலாவும் இடம்' என்று சொல்ல வைக்கிறது. இங்கு மூளைதான் மூலதனம். சிறிய அளவில் பிறந்து, நாளுக்கு நாள் வளர்ந்து, இன்று அண்ணாந்து பார்க்க வைக்கிற பங்குச் சந்தையின் கதையைப் பார்ப்போமா?
ஆரம்ப வித்து
சுமார் எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பே அரிசியை வாங்க, விற்க சீனாவில் ஒரு மூலச் சந்தை உருவாகியது. 1300-களில் வெனிஸில்தான் முதன்முறையாக இன்றைய பங்குச் சந்தையின் வடிவம் உருப்பெறத் தொடங்கியது. விலை ஏறக்கூடும் என்று எதிர்பார்த்த பொருள்களை முன்கூட்டியே வாங்க வியாபாரிகளுக்குப் பணம் தேவைப்பட்டது. அவர்கள் வட்டிக்கடைக்காரர்களை அணுகினர். வட்டிக் கடைக்காரர்கள், வியாபாரிகளிடம் எழுத்து பூர்வ உறுதி மொழியாகப் பத்திரங்கள் வாங்கிக்கொண்டு பணம் தந்தனர். பின்பு, அந்தப் பத்திரங்களை முதலீட்டாளர்களிடம் விற்றுப் பணம் பெற்றனர். உலகில் பலரின் தலையெழுத்தை மாற்றி எழுதப்போகும் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தை மாடலை அறிமுகப்படுத்துகிறோம் என்று அப்போது அவர்கள் அறியவில்லை. 1500-களில் பெல்ஜியத்தில் நடைபெற்ற சந்தைகளிலும் பத்திரங்களும், பிராமிசரி நோட்டுகளும் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டன.
நாடுகள் நடுவேயான வர்த்தகம் செழித்து வளர்ந்த தருணம் அது. திரை கடலோடி திரவியம் தேடுவதற்கு, மன்னர்களின் கஜானாவில் இருந்த பணம்கூடப் போதவில்லை. பெரிய வர்த்தகங்களுக்குத் தேவையான பெரிய அளவு பணம் தனி நபர்களிடமும் இருக்கவில்லை. ஆகவே, முதலீட்டாளர்கள் குழுக்களாகச் சேர்ந்து முதலீடு செய்தனர்.
Also Read: பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! - 20
முதன்முதல் வெளியான பங்குகள்
1600-களில் டச் ஈஸ்ட் இந்தியா கம்பெனிதான் முதன்முதலாக பேப்பர் வடிவில் பங்குகள் வழங்கி தனிநபர்களிடம் இருந்து முதலீட்டைப் பெற்றது. சந்தை ஆரம்பித்தபோதே மோசடியும், சந்தையின் சரிவும் ஆரம்பித்துவிட்டன. பல கம்பெனிகள் வர்த்தகம் ஏதும் செய்யாமலே பங்குகளை விற்றதால் சந்தை சரிந்தது. (இன்று நஷ்டம் மட்டுமே ஈட்டும் கம்பெனிகள் புதிதாக சந்தைக்குள் வருவதையும், அவற்றில் முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்கள் அலைபாய்வதையும் பார்க்கிறோமே? சரித்திரம் திரும்புகிறதோ?)
காளைகளும் கரடிகளும் உருவாகும் வால் ஸ்ட்ரீட்
1792-ம் ஆண்டு, நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட் என்னும் இடத்தில் ஒரு பெரிய மரத்தின் கீழ் நடத்தப்பட்ட நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NYSE) தான் உலகில் உள்ள பங்குச் சந்தைகளுக் கெல்லாம் முன்மாதிரி. தங்கள் கம்பெனிகளின் பங்குகளை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக உரிமையாளர்கள் இந்தச் சந்தையில் தங்கள் கம்பெனிகளை லிஸ்ட் செய்தனர். புரோக்கர்கள் கூவிக் கூவி விலை கேட்டதில், வாங்குவதும், விற்பதும் ஜரூராக நடைபெற்றது. அதிகம் விரும்பப்பட்ட பங்குகளின் விலை ஏறியது; விரும்பப்படாத பங்குகளின் விலை இறங்கியது. ஏறும் சந்தை காளை எனவும், இறங்கும் சந்தை கரடி எனவும் பெயர் பெற்றன.
Also Read: தங்கத்தில் முதலீடு செய்யப்போகிறீர்களா? அதன் இந்த வடிவங்களையும் பரிசீலிக்கலாமே! - 19
ஆசியாவின் முதல் சந்தை இந்தியாவில்
1875-ல் ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாக பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் ஜப்பானில் நிக்கி, சீனாவில் ஷங்காய் எக்ஸ்சேஞ்ச், ஹாங்காங்கில் ஹாங்செங் என்று ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை வியாபாரம் தொடங்கியது. பி.எஸ்.இ-யின் குறியீடான (Index) சென்செக்ஸ் 1986-ல் உருவாகியது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அல்லவா? அது போல் பி.எஸ்.இ-யின் ஐயாயிரத்து சொச்ச கம்பெனிகளில் முன்மாதிரிகளான முப்பதை மட்டும் பொறுக்கி எடுத்து சென்செக்ஸ் என்ற குறியீடாக்கினர். சந்தையின் ஏற்ற, இறக்கங்களை எளிதாகப் படம் பிடிக்க இது உதவுகிறது. சென்சிட்டிவ் இண்டெக்ஸ் என்ற இரு வார்த்தைகளின் கலவையாக `சென்செக்ஸ்' என்ற பெயரை உருவாக்கியவர் தீபக் மொஹோனி என்னும் பங்குச் சந்தை நிபுணர்.
தற்போது சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ், எஸ்.பி.ஐ வங்கி போன்ற டாப் கம்பெனிகள் இடம் பிடித்துள்ளன. இந்த முப்பதும் சென்செக்ஸில் நிலைப்பது உறுதியில்லை. எஸ்.&பி பி.எஸ்.இ இண்டெக்ஸ் என்னும் கமிட்டி கூடி சில வரைமுறைகளின் அடிப்படையில் அவ்வப்போது கம்பெனிகளை மாற்றுகிறது.
Also Read: நகைக்கடன் vs நகை விற்பனை; இரண்டில் எது நமக்கு நல்லது தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 18
2000-ல் சாஃப்ட்வேர் கம்பெனிகளின் வரவு, அதன் பின்னான கணினி மயமாக்கல், டீமேட் அக்கவுன்டுகளின் தோற்றம், அவ்வப்போது சில பேராசைக்காரர்களின் மோசடிகளால் வீழ்ச்சி, கொரோனா வரவால் எதிர்பாரா ஏற்றம் என்று சென்செக்ஸின் பயணம் தொடர்கிறது. கடந்த 10 வருடங்களில் இதன் வருடாந்தர ஆவரேஜ் வளர்ச்சி (CAGR) 16 சதவிகிதம். இது புரிந்ததால்தான் இன்று மக்கள் பங்குச் சந்தையில் இறங்கத் துடிக்கிறார்கள். பங்குச் சந்தை பற்றி நன்கு அறிந்துகொண்ட பின் இறங்குவது நல்லது என்பதால் அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
- மீண்டும் புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/finance/an-interesting-history-of-stock-exchanges-and-its-evolution
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக