Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

கோலியைப் பார்த்தாலே பதறுகிறதா இங்கிலாந்து... பேட்டிங் பிட்ச், உள்ளூர் மைதானம் - ஆனாலும் தோல்வி ஏன்?

157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றிருக்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் பெற்ற வெற்றி என வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு எப்படியான பதிலடியை அந்த அணிக்கு கொடுத்ததோ, அதேபோன்றதொரு பதிலடியை லீட்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு ஓவலில் இங்கிலாந்துக்குக் கொடுத்திருக்கிறது. 2-1 என தொடரில் முன்னிலையும் பெற்றிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தத் தொடரை த்ரில்லிங்கான கட்டத்துக்கொண்டுபோய் இருக்கிறது இந்தியா.

77 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் நான்காவது நாளை முடித்திருந்த இங்கிலாந்து ஏன் தோற்றது?!

ENG Vs IND
பிட்ச்சில் பெரிதாக பௌலர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஒரு விஷயமும் இல்லை என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிச்சயமாக சவாலளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் மிரட்டலான பௌலிங்கால் அடங்கி ஒடுங்கி போனது இங்கிலாந்து.

இந்த போட்டியை வெல்லலாம் என்கிற தன்னம்பிக்கையே இங்கிலாந்துக்கு இருந்தது போல் தெரியவில்லை. பத்து விக்கெட்டுகளை கையில் வைத்திருந்தாலும் ஒரு வித பதற்றத்துடனேயே களமிறங்கியிருந்தனர். அரைசதம் அடித்திருந்த பர்ன்ஸை ஷர்துல் தாகூர் பிட்ச்சில் கிடைத்த சிறிய மூவ்மென்ட் மூலமே சிறப்பாக எட்ஜ் ஆக்கியவுடன் இந்த பதற்றம் இன்னும் அதிகரித்தது. ஹசீப் ஹமீதும் டேவிட் மலானும் ரன் ஓடுவதற்கு பதில் கபடி ஆடிக்கொண்டிருந்தனர். ஜோ ரூட்டுக்கு பிறகு இங்கிலாந்தின் முதுகெலும்பாக கருதப்படும் டேவிட் மலான் நின்று நிதானமாக ஆடியிருக்க வேண்டும். ஆனால், அவர் ரன் அவுட் ஆகி 5 ரன்களிலேயே நடையை கட்டினர்.

பர்ன்ஸின் விக்கெட் விழுந்தவுடனேயே டிராவுக்கு ஆடுவது என்கிற மனநிலைக்கு சென்றுவிட்ட இங்கிலாந்து மலானின் விக்கெட்டுக்குப் பிறகு மொத்தமாகவே போட்டியை இந்தியாவின் கையில் ஒப்படைத்துவிட்டது.

ENG Vs IND
உள்ளூர் மைதானம், ஃப்ளாட் ட்ராக், போதுமான அளவுக்கு விக்கெட்... இது அத்தனையும் இருந்தும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஏன் அவ்வளவு பதற்றமாக இருந்தார்கள் என தெரியவில்லை.

கோலியின் அக்ரஸிவ் அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டப்பும் இதற்கு ஒரு காரணம். முதல் விக்கெட்டாக பர்ன்ஸின் விக்கெட் விழுந்தவுடனேயே, மலானுக்கு ஜடேஜா வீசிய போது ஷார்ட் லெக், சில்லி பாயின்ட், ஸ்லிப், லெக் ஸ்லிப் என கட்டம் கட்டி பதற்றமடைய வைத்தார். இப்படியான ஃபீல்ட் செட்டப் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கொடுத்த பதற்றம், சுமாரான ஜடேஜாவின் பௌலிங்கை கூட பெரும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் மாற்றியது.

ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் ஃபுட் மார்க்கை குறிவைத்து தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தார் ஜடேஜா. இதற்கு பலனும் கிடைத்தது. ஹசீப் ஹமீது 63 ரன்களில் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேறினார். இன்னொரு பக்கம் பும்ரா, ஃப்ளாட் ட்ராக்குகளில் பந்தை மூவ் செய்ய முயன்று சொதப்புவதை விட துல்லியமான யார்க்கர்களையும், ஷார்ட் பால்களையும் வீசி விக்கெட்டுக்கு முயற்சிக்கலாம் என்பதை தெளிவாக உணர்ந்து வீசினார். பும்ராவின் யார்க்கருக்கு, வெறித்தனமான யார்க்கருக்கு பேர்ஸ்ட்டோ ஸ்டம்பை பறிகொடுக்க, ஃபுல் லென்த்தில் வந்த ஒரு மேஜிக்கல் டெலிவரிக்கு போப் ஸ்டம்பை இழந்தார்.

ENG Vs IND
போப்பின் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் 100 வது விக்கெட்டாகவும் பதிவானது. இந்தியா சார்பில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பும்ரா பெற்றிருக்கிறார்.
ENG Vs IND

ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் மேட்ச்சை சீக்கிரம் முடித்துவிடலாம் என்ற நிலையில், நியுபாலை கையில் எடுத்தது இந்தியா. உமேஷ் அல்லது பும்ரா வீசுவார்கள் என எதிர்பார்க்க, Kohli had other ideas! ஷர்துல் தாகூரின் கையில் பந்து சென்றது. தொட்டதெல்லாம் ஹிட் என்ற நிலையில் இருக்கும் ஷர்துல் முதல் பந்திலேயே ரூட்டை போல்டாக்கினார். பெருத்த ஏமாற்றத்துடன் ரூட் பெவிலியனுக்கு திரும்ப இந்தியாவின் வெற்றி உறுதி ஆனது. டெய்ல் எண்டர்களுக்கு எதிராகவும் இந்திய பௌலர்களின் ஆக்ரோஷம் குறையவில்லை. பவுன்சர்களை வீசி பதறடித்தனர். இதனால் சீக்கிரம் அவுட் ஆனால் போதும் என்ற மனநிலையோடு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆடியதால் வெற்றிக்கு அதிக நேரம் காத்திருக்க வைக்கவில்லை. இங்கிலாந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட். இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

ENG Vs IND

என போட்டிக்கு பிறகான பரிசளிப்பு விழாவில் கோலி கர்ஜித்துள்ளார். உண்மைதான், அணிக்குள் கோலி கொண்டு வந்திருக்கும் மனப்பான்மைதான் இந்தியாவை எவ்வளவு பெரிய வீழ்ச்சியில் இருந்தும் உடனே மீள செய்கிறது. அடிலெய்டு 36 மற்றும் லீட்ஸ் 78 ஆல் அவுட் இந்த இரண்டு போட்டிகளுக்கும் பிறகான இந்திய அணியின் மீட்சியே வரலாற்றில் தனி இடம்பிடிக்கும். இதற்கு முன்னர் இங்கிலாந்தில் வடேகர், கபில்தேவ், டிராவிட் தலைமையிலான இந்திய அணிகளே தொடரை வென்றுள்ளது. அந்த லெஜண்டுகள் வரிசையில் தனது பெயரையும் இணைத்துக் கொள்ள கோலிக்கு ஒரு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. சாதிப்பாரா 'கேப்டன்' கோலி?



source https://sports.vikatan.com/cricket/kohlis-indian-team-wins-oval-test-and-creates-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக