தமிழக அரசியல் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத இடமாக இருக்கும் கொடநாடு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோரின் கட்டுப்பாட்டுக்கு வந்த நாள் முதல் தற்போதுவரை வெளி ஆட்கள் யாரும் எட்டிக்கூட பார்க்க முடியாத மர்ம கோட்டையாகவே இருந்து வருகிறது. கொடநாடு வழக்கு விசாரணை தற்போது மீண்டும் வேகமெடுத்து இருக்கும், பரபரப்பான இந்த சூழலில், ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் கொடநாட்டின் மீது திரும்பியுள்ளது.
பல சர்ச்சைகளை கிளப்பிவரும் கொடநாடு வழக்கை போலவே, கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் மீதும் தற்போது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. மாயாற்றுக்கு செல்லும் நீரோடை மறிப்பு, வனத்துறை மற்றும் வருவாய்துறை நில ஆக்கிரமிப்பு, அண்ணா நகர், காமராஜ் நகர் கிராம மக்கள் பயன்படுத்திவந்த சாலைக்கு தடை விதித்தது போன்ற பல அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
Also Read: `சத்தியமூர்த்தியை விசாரித்தீர்களா?' - கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் அடுத்தது என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் வரும் இந்த கொடநாடு எஸ்டேட் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இன்றளவும் வெளியாட்கள் யாரும் நெருங்க முடியாத வகையிலே உள்ளது. 24 மணி நேரமும் அதீத பாதுகாப்புடன் இருக்கும் இந்த எஸ்டேட் மீது கடந்த 3 நாள்களாக மர்மமாக ட்ரோன் கேமராக்கள் பறப்பதாக எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
ட்ரோன் விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய விவரம் அறிந்த காவலர் ஒருவர், "`எங்களோட எந்த அனுமதியும் இல்லாம யாரோ சிலர் ரகசியமா எங்க எஸ்டேட் மேலே ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு மூணு நாளா படம் பிடிச்சிட்டு இருக்காங்க. நடவடிக்கை எடுங்கனு’ எஸ்டேட் சூப்ரவைசர் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்திருக்கார். இந்த புகாரின் அடிப்படையில விசாரணை நடத்திட்டு இருக்கோம். யார், என்ன நோக்கத்துக்கு இந்த செஞ்சிருக்காங்கனு சீக்கிரம் கண்டுபிடிப்போம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/drone-camera-controversy-in-kodanad-estate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக