Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

நீலகிரி: 4 மாதத்துக்குப் பின் ஊட்டிக்கு வந்த மலை ரயில்! - பாட்டுப்பாடி வரவேற்ற ஊழியர்கள்

பல் சக்கர தண்டவாள அமைப்பை கொண்டுள்ள, யுனெஸ்கோவின் பரபம்பர்ய அந்தஸ்த்தைப் பெற்று நூற்றாண்டுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் பயணிப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டு முழுக்க ஏராளாமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். பல இடர்களுக்கு மத்தியிலும் சளைக்காமல் ஓடிக்கொண்டிருந்த இந்த மலை ரயிலை கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டாவது ஆண்டாக முறையாக இயங்க விடாமல் முடக்கியது.

நீலகிரி மலை ரயில்

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் நீலகிரியில் தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. இதனால் ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் மலை ரயில் சேவை துவக்கப்படாதது பயணிகளிடம் ஏமாற்றத்தை அளித்து வந்தது. இதனிடையே தான் மீண்டும் மலை ரயில் சேவை துவக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு முன்பதிவையும் துவக்கியது.

Also Read: `இனி ஊட்டி மலை ரயில் பாதியில் நிற்காது!'- புதுப்பொலிவுடன் தயாரானது நீராவி இன்ஜின்!

இந்த நிலையில் 4 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக நேற்று காலை 100 -க்கும் அதிகமான பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. மலை ரயிலை ரயில்வே பணியாளர்கள் பாட்டுபாடி உற்சாகமாக வரவேற்றனர்.

நீலகிரி மலை ரயில்

இந்த உற்சாகம் குறித்து நம்மிடம் பேசிய ஓடும் ரயிலின் படும் குயில் என அழைக்கப்படும் டி.டி.ஆர் வள்ளி , ``நீலகிரிக்கே அடையாளம் இந்த மலை ரயில்தான், 4 மாசமா இல்லாம கலகலப்பே இல்லாத மாதிரி ரொம்ப கஷ்டமா இருந்தது. முடங்கிக்கிடந்த ரயிலுக்கு 4 மாசத்துக்கு அப்புறம் பச்சைக்கொடி காட்டிருக்காங்க. பயணிக்க எல்லாருமே மாஸ்க் சரியா போட்டு, இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்திட்டு இருக்கோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/nilgiri-mountain-train-started-again-after-second-lock-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக