Ad

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

புதுச்சேரி சட்டசபை: `ஆபரேஷன் விடியல்; இரவில் தனியாக இருக்கும் பெண்களுக்கு டோல் ஃப்ரீ எண்!’

புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்கள் பேசியதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, “மக்கள் தொகைக்கு ஏற்ப தாலுகாக்கள் பிரிக்கப்பட்டு எளிதாக வருவாய்த்துறை சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இலவச மனைப்பட்டா தந்து ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பட்டா தரப்படும். எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து புதிய சட்டசபை கட்டப்படும். தேவைப்படும் அனைத்து ஏழைகளுக்கும் இலவச மனைப்பட்டா வழங்கப்படும். மாநில அந்தஸ்து குறித்தான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் வீடுகளுக்கு போடப்பட்ட குப்பை வரி ரத்து செய்யப்படும். ஆனால், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கான குப்பை வரி தொடரும். வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படும்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்

அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு ரூ.3-ல் இருந்து ரூ.9 ஆக உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.5 ஆக குறைக்கப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் மூலம் மின்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ.205/- கோடி மின் பாக்கியை அரசே செலுத்தும். அதேபோல், அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கான ரூ.220/- கோடி கொடுக்கப்படும். இனி தேவைப்படும் இடங்களில் தெருவிளக்குகளை பொருத்தி, செயல்பட மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் தெருவிளக்குகள் போட நகராட்சி, பஞ்சாயத்துகளில் தடையில்லா சான்று தேவையில்லை. நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் களையப்படும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிரமம் உள்ளது. அடாக் முறையில் பதவி உயர்வு என்றில்லாமல் `கரண்ட் டூட்டி சார்ஜ்' என்ற (சி.டி.சி) அடிப்படையில் கோப்புகள் வருகிறது.

இது பெரிய துறைகளில் பணியாற்றுவோருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, அடாக் முறையில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு கிரயம் செய்து தர முடியாது. ஆனால், அங்கு வசிப்பவர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கல்வீடு கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தப்படும். போலி பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்வது பற்றி சட்டத்துறையும், பதிவாளர் துறையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மூடப்பட்ட நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு உணவு பொருள்கள் வழங்கப்படும்.

புதுச்சேரி அரசு

பாண்லேவில் ஐந்து ஆண்டுக்கு மேல் பணிபுரிந்து வருவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவது வழக்கம். தற்போது அங்கு பணியாற்றி வரும் தினக்கூலி ஊழியர்களில் பாதி பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். பாண்ஃபேப் மற்றும் பாண்டெக்ஸ் பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் நலிவடைந்துவிட்டது. அந்நிறுவனங்களை மறுபடியும் சீர்செய்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பாப்ஸ்கோ மூலம் இந்தாண்டு முதல் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணங்களை எல்லாம் இந்த அரசு நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடும்” என்றார்.

உள்துறை:

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, “புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி ஒழிக்கவேண்டும் என்ற சீறிய நோக்கத்தோடு `ஆபரேஷன் விடியல்’ மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை தென்மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. எனவே அண்டை மாநில காவல் துறையுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த ஆண்டு சீருடை படி (அலவன்ஸ்) வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச டோல் ஃப்ரீ எண்

இந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காவல்துறைக்கான ஆயுதங்கள், தோட்டாக்கள் 1 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும். முக்கிய வி.ஐ.பிக்கள் பாதுகாப்புக்காக ரூ.2.56/- கோடி மதிப்பில் குண்டு துளைக்காத வாகனம் வாங்கப்படும். சைபர் குற்றங்களை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் சைபர் பிரிவு நவீனப்படுத்தப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. இரவு 10 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை தனியாக இருக்கும் பெண்களோ அல்லது பணிமுடித்து வீட்டுக்கு செல்லும் பெண்களோ பாதுகாப்பு இல்லையென கருதினால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 112 தொடர்பு கொள்ளலாம். உடனே பெண் காவலரோடு அந்த இடத்துக்கு சென்று அவரை வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள்.

சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியோடு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 24 அரசுப் பள்ளிகள் முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். மதிய உணவுத் திட்டத்தில் உணவு எடுத்து செல்லும் 141 ஊழியர்கள் மற்றும் பால் காய்ச்சும் பணியில் பணிபுரியும் 822 ஊழியர்களுக்கான மாத ஊதியம் ரூ.6,458 லிருந்து 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கிராமப்புறங்களில் விளையாட்டை மேம்படுத்த சிறு உள்விளையாட்டு அரங்கங்கள் 8 இடங்களில் அமைக்கப்படும். பதக்கம் பெறும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகை வழங்குவதற்காக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களை சேர்ந்த மாணவியர்களுக்கு உயர் கல்வி வழங்கும் பொருட்டு மடுகரை அரசு மேல்நிலை பள்ளி அரசு பெண்கள் கல்லூரியாக மாற்றப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 21,500 தெரு மின்விளக்குகள் சுமார் ரூ.13.50 கோடி செலவில் எல்.இ.டி மின் விளக்குகளாக மாற்றப்படும். மரப்பாலம் பகுதியில் இயங்கி வரும் பழைய துணை மின் நிலையம் சுமார் ரூ.26.25 கோடி செலவில் நவீன தொழில் நுட்பம் புகுத்தப்படும்.

Also Read: புதுச்சேரி: `மாநில அந்தஸ்து முதல் பணி நிரந்தரம் வரை!’ - முதல்வர் ரங்கசாமி உரையின் முக்கிய அம்சங்கள்

மின்கட்டண பில் விநியோகத்தில் ஏற்படும் காலதாமதத்தையும், தவறுகளையும் தவிர்க்கும் பொருட்டு புதிய பில்லிங் மென்பொருள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மாநில அந்தஸ்தை தொடர்ந்து கேட்டு வருகிறோம். அதற்கு வழியில்லை என்றாலும், மாற்று வழியில் எப்படி செய்யலாம் என்று முயற்சித்து வருகிறோம். அதேபோல், மத்திய அரசின் நிதி 16 சதவிகிமாக குறைந்துவிட்டது. 90:10 என்ற விகிதத்தில் நிதி தரப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-assembly-happenings-and-new-announcements

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக