Ad

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

ரூட்டின் இடத்தைப் பிடித்த ஓலி போப்... இரண்டாவது இன்னிங்ஸில் விட்டதை பிடிப்பாரா கோலி?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 43 ரன்களை சேர்த்து தொடர்ந்து ஆடி வருகிறது. நேற்றைய நாளின் ஹைலைட்ஸ் இங்கே!

எரிச்சலூட்டிய ஜார்வோ!

லார்ட்ஸ், லீட்ஸ் என சுழன்றடித்த ஜார்வோ புயல் நேற்று ஓவலிலும் நுழைந்திருந்தது. இந்த முறை பௌலர் அவதாரம் எடுத்திருந்த ஜார்வோ, பேர்ஸ்ட்டோ மற்றும் போப்பின் விக்கெட்டை எடுக்க இந்தியா திணறிக்கொண்டிருந்த போது உதவுவதற்காக உள்ளே ஓடி வந்தார். வழக்கம்போல காவலர்கள் சில நொடிகளில் ஜார்வோவை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஆனாலும், கடந்த இரண்டு போட்டிகளில் வேடிக்கையாக பார்க்கப்பட்ட ஜார்வோவின் என்ட்ரி நேற்று பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு மனிதர் இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்று போட்டியில் களமிறங்கியிருந்தால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் எப்படி ரியாக்ட் செய்திருக்கும்? ஒரு சர்வதேச போட்டியில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு எப்படி நிகழ முடியும்? என முக்கியமான கேள்விகளை பலரும் எழுப்பியிருந்தனர்.

ஜார்வோ 69 (டேனியல் ஜார்விஸ்)
அதிர்ந்து பேசாத ஹர்ஷா போக்ளேவே ஜார்வோவை 'இடியட்' என கடுப்பாகி திட்டியிருக்கிறார். இந்த முறை ஜார்வோவை சிறையில் அடைத்துவிட்டதாக கூறியிருக்கின்றனர்.

ஜாமீன் எதுவும் வாங்கிவிட்டு அடுத்த போட்டிக்கும் வந்து விடுவாரோ?

மிரட்டிய உமேஷ்!

கடைசி இரண்டு ஆண்டுகளாக பெரிதாக வாய்ப்பே கிடைக்காமல் பென்ச்சிலேயே உட்கார்ந்திருந்தார் உமேஷ் யாதவ். ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மாவை தொடர்ந்து பயன்படுத்தினால் அவர்கள் காயத்தில் சிக்க வாய்ப்பிருப்பதால் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. அதனாலயே உமேஷ் யாதவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அரிதாகக் கிடைத்த அந்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் உமேஷ் யாதவ். இந்திய அணிக்கு அச்சமூட்டும் வகையில் இருந்த ஒரே பேட்ஸ்மேன் ஜோ ரூட் மட்டுமே. கடந்த போட்டியிலிருந்து டேவிட் மலானும் அவருடன் இணைந்திருந்தார்.

அந்த அணியின் முதுகெலும்பு இவர்கள் இருவரும் மட்டுமே. அந்த இரண்டு பேரின் விக்கெட்டையுமே அட்டகாசமாக சீக்கிரமே வீழ்த்தி கொடுத்தார் உமேஷ்.

முதல் நாளின் கடைசி நிமிடங்களில் ஒரு வெறித்தனமான இன்ஸ்விங்கரில் ஜோ ரூட்டின் மிடில் ஸ்டம்பை பறித்திருந்தார்.

உமேஷ் யாதவ்

இந்நிலையில் நேற்றைய நாளின் தொடக்கத்திலேயே நைட் வாட்ச்மேனாக வந்திருந்த ஓவர்டன்னை வீழ்த்தி பாசிட்டிவ்வாக தொடங்கினார். டாப் ஆர்டரை சீக்கிரம் வீழ்த்தியிருந்தாலும் மலான் க்ரீஸில் நின்றது மட்டும் இந்தியாவுக்கு உறுத்தலாகவே இருந்தது. ஆனால், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்குள்ளாகவே உமேஷ் யாதவ் அவரை காலி செய்துவிட்டார். ஓவர் தி விக்கெட், ரவுண்ட் தி விக்கெட் என மாறி மாறி வந்து லைனை மாற்றி மாற்றி வீசினார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து இன்கம்மிங் டெலிவரியாக வீசிய ஒரு பந்துக்கு அரைகுறையாக பேட்டை விட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆகி 31 ரன்னில் வெளியேறினார். இங்கிலாந்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியதற்கு ஜோ ரூட், மலான் இருவரின் விக்கெட்டையும் உமேஷ் யாதவ் சீக்கிரம் வீழ்த்தி கொடுத்ததே காரணமாக இருந்தது.

மீட்பர் போப்!

மலான் அவுட் ஆன போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 62-5 இந்திய அணியை விட பரிதாபமான நிலை. அதனால் எப்படியும் இங்கிலாந்தை ஒரு 120 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி இந்தியா முதல் இன்னிங்ஸிலேயே லீட் எடுத்துவிடும் என தோன்றியது. ஆனால், இங்கிலாந்து அணியின் மீட்பராக உருவெடுத்த ஓலி போப் ஆட்டத்தை மாற்றினார்.போப் ஒரு எண்ட்டில் பொறுமையாக அவசரப்படாமல் நின்று ஏதுவான பந்துகளை மட்டும் தொட்டு ஆட, இன்னொரு எண்ட்டில் பேர்ஸ்ட்டோவும், மொயின் அலியும் அடுத்தடுத்து வந்து கொஞ்சம் வேகமாக பவுண்டரிகளை அடித்து ரன் கணக்கை உயர்த்தினர்.

போப்
62-5 என இருந்த ஸ்கோரை இவர்கள் மூவரும் இணைந்து 222 ரன்கள் வரை கொண்டு வந்துவிட்டனர். இங்கிலாந்தை லீட் எடுக்க வைத்துவிட்டனர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போப் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடிக்காரன் வோக்ஸ்!

போப் உருவாக்கி கொடுத்த லீடை இன்னும் அதிகமாக்கி இங்கிலாந்தின் கையை ஓங்க செய்திருந்தார் கிறிஸ் வோக்ஸ். பவுண்டரிக்களால் பட்டையை கிளப்பிய அவர் அரைசதத்தை தொட்டார். 11 பவுண்டரிகளுடன் அரைசதத்தை தொட்டு அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்த வோக்ஸ் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். போப்பின் நிதான ஆட்டம், பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலியின் கணிசமான பங்களிப்பு, வோக்ஸின் அதிரடி இவையெல்லாம் சேர்ந்து இங்கிலாந்து அணியை 99 ரன்கள் லீட் எடுக்க வைத்தது.

ரோஹித் & ராகுல்

இந்தியாவின் பொறுப்பான ஓப்பனிங்!

நேற்று கடைசி ஒரு மணி நேரத்திலேயே இந்தியாவுக்கு பேட்டிங் கிடைத்தது. விக்கெட் விடாமல் நின்றால் மட்டுமே போதும் என்கிற நிலையே இருந்தது. ஆனால், ரோஹித்தும் ராகுலும் முதல் இன்னிங்ஸில் எப்படி பவுண்டரிகள் அடித்து பாசிட்டிவ்வாக ஆட முயன்றார்களோ அதையேத்தான் இங்கேயும் செய்ய முயன்றனர். ஆனால், கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் அதிக ரிஸ்க் எடுக்காமல் செய்திருந்தனர். இதனால் ஸ்கோரும் 43 ரன்களாக உயர்ந்தது. வீசப்பட்ட 16 ஓவரிலும் ரோஹித் மற்றும் ராகுலை இங்கிலாந்து பௌலர்களால் பெரிதாக சிரமப்படுத்த முடியவில்லை. பிட்ச் பச்சை பசேலென இருந்தாலும் பந்துகள் பேட்ஸ்மேனை மிரட்டும் வகையில் மூவ் ஆகவில்லை. இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்து. நான்கு பௌலர்களை பயன்படுத்தியும் இந்திய ஓப்பனிங் கூட்டணியை இங்கிலாந்தால் முறியடிக்க முடியவில்லை.

இப்போதைய நிலைமையில் ஆட்டம் சமமாகவே சென்று கொண்டிருக்கிறது. மூன்றாவது நாளில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தே ஆட்டம் யாருக்கு சாதகமாக அமையும் என்பது ஓரளவுக்கு தெரிய வரும். "45 mins of Bad cricket" எதுவும் நிகழாமல் இருக்க வேண்டும்!



source https://sports.vikatan.com/cricket/england-took-lead-in-first-innings-and-india-bouncing-back-in-second-innings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக