Ad

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

`தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற பேச்சுக்கே இடமில்லை!’ - சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சேர்ந்தன்குடியில் சுற்றுச்சூழல் ஆர்வலர், மரங்களின் காவலர் எனப் போற்றப்படும் மரம் தங்கசாமியின் மூன்றாமாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்குள்ள கற்பகவனச் சோலையில் அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

அதன்பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு மரங்களை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. என்னுடைய 25 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒரு மரத்தைக் கூட நான் வெட்டியது இல்லை. தமிழகம் முழுவதும் அனைவரும் சேர்ந்து மரங்களை நடவும், வளர்க்கவும் முன்வர வேண்டும்.

குறைந்தது ஒவ்வொருவரும் 5 மரங்களையாவது நடவு செய்து அதனைப் போட்டோ எடுத்துப் பதிவு செய்யவேண்டும். அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும், கடலூர் மாவட்டங்களில் 5 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றத் தமிழக சுற்றுச்சூழல் துறையிடம் மத்திய அரசு அரசு அனுமதி கேட்டபோது, தர முடியாது என்று கூறி மறுத்து விட்டோம். தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் கூட ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக ஏற்கெனவே மாநில அளவிலான பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து மாவட்ட அளவிலான குழுக்கள் விரைவில் அமைக்கப்பட்டுச் செயல்படத் துவங்கும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/there-is-no-place-for-hydrocarbons-in-tamil-nadu-environment-minister-meyyanathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக