Ad

சனி, 4 செப்டம்பர், 2021

மானிய அறிவிப்புகள்: ஆட்சி மாற்றத்தால் புத்துயிர் பெறுகிறதா தமிழ் வளர்ச்சித் துறை?!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்சார் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

"இந்த நிர்வாகம் மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால் அரசு தனது பணிகளை மக்களின் மொழியிலேயே செயல்படுத்த வேண்டும்" என்று தமிழுக்கான முக்கியத்துவத்துடன்தான் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதல் காகிதம் இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது முதல் தொடர்ச்சியாக பல புதுப்பிப்புப் பணிகள், நிதி ஒதுக்கீடுகள், மானிய அறிவிப்புகள் எனத் தமிழ் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் தமிழ் ஆர்வலர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டின் மற்ற கட்சித் தலைவர்களும் கூட தி.மு.க-வின் தமிழ்சார் அறிவிப்புகளுக்கு ஒரு சின்ன வரவேற்பையாவது காண்பித்துக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் வளர்ச்சித் துறைக்காக சமீபத்தில் 20 மானிய அறிவிப்புகள் வெளியான போது கூட நாம் தமிழர் கட்சியின் சீமான், "நான் 20 ஆண்டுகளாக சொன்னதுதான். ஆனாலும் ஒருவரின் பெயரின் இனிஷியல் எழுத்தை தமிழில் எழுத வேண்டும் என இந்த அரசு சொல்லியிருப்பது பாராட்டத்தக்கதுதான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது முதல் அடுத்தடுத்து திமுக தலைமையிலான மாநில அரசு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன புதுப்பித்தல், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அறிவிக்கப்பட்ட கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது (10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு), அரசுத் துறைகளில் தமிழ் யூனிகோடு எழுத்துரு, மறைமலை அடிகளார் பேரனுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் பணி நியமனம் செய்தது வரையில் தொடர் அறிவிப்புகளை தி.மு.க அரசு செய்து வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு 20 முக்கிய மானிய அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருக்கும் என்பது ஒருபுறம். ஆனால், மறுபுறம் தமிழ்சார் கல்வி அறிவிப்புகளுள் பல தி.மு.க எதிர்த்த தேசிய கல்விக் கொள்கையின் நகல் என்கின்றனர் தமிழ்நாடு பா.ஜ.க-வினர்.

தமிழ் வளர்ச்சி மானிய அறிவிப்புகளால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயன் இருக்கிறதா?

மானிய அறிவிப்பின்படி, தீராக்காதல் திருக்குறள் என்ற தலைப்பின் கீழ் தமிழ் சார் நிகழ்ச்சிகள் (2 கோடி ரூபாய்), பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழிக் இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித் தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்குதல், தலைவர்களின் பிறந்தநாள்களில் தமிழ்க் கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிசளிக்க (81 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) என ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீட்டுடன் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. திருக்குறள் முற்றோதல் செய்து பரிசுத் தொகையை வழங்காமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு குரல் பரிசு வழங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்று உச்சவரம்பு நீக்கப்பட்டு பரிசுத் தொகையும் உயர்த்தப்பட உள்ளது.

திருவள்ளுவர் சிலை

கூடுதலாக, புகழ்பெற்ற தமிழறிஞர்களின் ஒலி/ஒளிப் பொழிவுகள் ஆவணம் செய்வது (25 லட்சம் ரூபாய்), சந்தி பிரிக்கப்பட்டு சங்க இலக்கியங்களை நூல்களாக வெளியிடுவது (10 லட்சம் ரூபாய்), செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ் புதிய கலைச் சொற்கள் உருவாக்குவது (5 லட்சம் ரூபாய்), பன்மொழி பொருள்களுடன் தமிழ் அகராதி அச்சிடுவது, ஆட்சி சொல் அகராதி திருத்திய பதிப்பு மற்றும் அரசுத் துறைகளில் புதிய கலைச்சொற்கள் தொகுத்து வெளியிடுவது என நிதி ஒதுக்கீட்டு விவரங்களுடன் அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read: "தமிழ் சங்க இலக்கியத் தொகுப்பிற்கு `திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயர் சூட்டுவதா?" - பெ.மணியரசன் கேள்வி

இந்த அறிவிப்புகளின் பயன் மற்றும் தமிழ்நாடு அரசு இன்னமும் தமிழ் வளர்ச்சி சார்ந்து செயல்பட வேண்டிய கூடுதல் பணிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பது குறித்து விளக்கியுள்ளார் கவிஞர் மகுடேசுவரன்.

அவர் கூறுகையில், "தமிழ் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் எல்லாம் பாராட்டுக்குரியதுதான். தமிழில் திருக்குறளுக்கு 150-க்கும் அதிகமான உரை நூல்கள் உள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான உரை நூல்களை ஒரே இடத்தில் அரசு தொகுத்து வழங்குவது என்பது பெரிய வரம். திருக்குறள் குறித்து மீண்டும் மீண்டும் நாம் பேசிக் கொண்டே இருக்கும்வரை தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கும். சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு முருகேச பாகவதர், திரு சங்கர வள்ளிநாயகம் மற்றும் புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கியதன் மூலம் அரசு தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் செய்துள்ளது.

கவிஞர் மகுடேசுவரன்

தமிழ்சார் போட்டிகளில் வெல்லும் 1,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்பது தமிழ் அறிந்த இளைஞர்களை எதிர்காலத்துக்காக வழங்கும் செயல். ஆனால், ஒரு மாநிலத்துக்கே 1,500 மாணவர்கள் என்ற எண்ணிக்கையை 10 ஆயிரம் மாணவர்களாக அரசு அதிகரித்தால்தான் பயன். தமிழ் வளர்ச்சித் துறை புத்துயிர் பெறத் தொடங்கினாலும் கண்களில் தெரிவதும், செவிகளில் கேட்பதும் தமிழாகவே இருக்க வேண்டியதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து வரும் ஆண்டுகளில் தொய்வடைந்து விடாமல் செயல்படுத்த வேண்டும்" எனக் கோரிக்கையையும் முன் வைத்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/literature/various-announcements-made-by-the-dmk-government-to-take-the-tamil-language-to-the-next-generation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக