Ad

சனி, 4 செப்டம்பர், 2021

ஊருக்குச் சென்றபோது திருடு போன பொருட்கள்! - பக்கத்து வீட்டுக்காரரை காட்டிக் கொடுத்த சிசிடிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவர், விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அன்பழகன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். மீண்டும் ஊருக்கு வந்ததும், வீட்டைத் திறந்து பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார். சமையலறையில் உள்ள சிலிண்டர், குடம், பாத்திரங்கள் ஆகியவை காணமால் போய் இருந்தது.

அன்பழகனின் மாடி வழியே உள்ளே நுழையும் நபர்

அலமாரியை பார்த்தபோது அதில் இருந்த 4 பவுன் தங்கநகை, ரூ.40 ஆயிரம் பணம், வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பேட்டரி, வாட்ச் ஆகியவையும் திருடு போனது தெரிய வந்ததது. வெளியில் இருந்த மின்மோட்டாரை திருடுவதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதனைத் திருட முடியவில்லை என்பதால் அதில் இருந்த வயர்களை கட் செய்து விட்டு, டேங்கில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அருகில் இருந்த வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அன்பழகன் பார்த்தபோது, அவரின் வீட்டு அருகே கோயில் விழாவுக்காக போடப்பட்டு இருந்த பந்தல்கம்பு வழியாக, சட்டை அணியாத ஒரு நபர் தனது வீட்டிற்குள் ஏறி குதிப்பது தெரியவந்தது. அந்த நபர், தனது வீட்டின் அருகில் இருக்கும் ராமமூர்த்தி என்பது தெரிய வந்தது.

வீட்டிற்குள் நுழைந்த ஏணிப்படி வழி

வீட்டின் உள்புறத்தில் இருந்து மாடிக்கு செல்வதற்காக போடப்பட்டு இருந்த ஏணிப் படிவழியாக இறங்கி, திருடிய பின்னர், வீட்டிற்கு உள் பகுதிக்குச் செல்வதற்காகப் போடப்பட்டிருந்த கதவினைத் திறந்து பொருட்களைக் கொண்டு சென்று விட்டு, பின்னர் கதவினை அடைத்து விட்டு, மீண்டும் மாடி வழியாக அந்த நபர் சென்று இருக்கலாம் என்கிறார் அன்பழகன். இதையடுத்து அன்பழகன், கயத்தார் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிப்பதிவுகளுடன் புகார் கொடுத்துள்ளார்.

Also Read: `கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்

இதையடுத்து, போலீஸார் திருடு போன அன்பழகனின் வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நடந்த பிறகு ராமமூர்த்தில் ஊரில் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்த மறுநாள் ராமமூர்த்தியின் மனைவி பத்திரகாளி, அன்பழகன் வீட்டின் அருகில் இருக்கும் செல்வி ஆகிய 2 பேரும், அன்பழகனின் தாய் அன்னக்கிளியை தாக்கியுள்ளனர். தன் தாய் தாக்கப்பட்டது குறித்தும் அன்பழகன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அன்பழகனின் வீடு

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் அன்பழகன். இது குறித்து கயத்தார் காவல் நிலைய போலீஸார், ”அன்பழகன் முதலில் தன் வீட்டில் சிலிண்டர் மட்டும்தான் திருடு போயுள்ளது என்றார். தற்போது பணம், நகைகளைக் காணவில்லை என்கிறார். சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். பக்கத்து வீட்டு நபரே ஏறிக் குதித்து பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/cctv-footage-showed-a-neighbor-entering-a-house-in-thoothukudi-and-stealing-goods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக