Ad

சனி, 4 செப்டம்பர், 2021

பிரவுன் ரைஸ் போமகிரனேட் மூஸ் | காஷ்மீரி பிர்னி | சாக்லேட் சூஃப்ளே - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இரண்டு டேபிள்ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும் என்று எங்கேயோ, எதிலேயோ படித்துவிட்டு அந்த ரெசிப்பியைச் செய்துபார்க்க 200 ரூபாய் கொடுத்து கண்டென்ஸ்டு மில்க் வாங்கியிருப்பார்கள். அதன் பிறகு, அது சீண்ட ஆளின்றி ஃப்ரிட்ஜில் தூங்கும். மாதங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் `நான் எப்போதோ எக்ஸ்பைரி ஆயிட்டேனே' என்று பல்லிளிக்கும்.

கண்டென்ஸ்டு மில்க் வாங்கினால், அதன் கடைசி சொட்டுவரை வீணாக்காமல் விதம் விதமாக, வித்தியாசமான ரெசிப்பீஸ் செய்து இந்த வார வீக் எண்டை செலிபிரேட் செய்யுங்களேன்...

தேவையானவை:

* பழுப்பு அரிசி - அரை கப்
* மாதுளை முத்துகள் - அரை கப் (சாறு எடுக்கவும்)
* கண்டென்ஸ்டு மில்க் - அரை கப்
* பால் பவுடர் - அரை கப்
* சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* பால் - கால் கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* மாதுளை முத்துகள் (அலங்கரிக்க) - சிறிதளவு

பிரவுன் ரைஸ் போமகிரனேட் மூஸ்

செய்முறை:

பழுப்பு அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் மாதுளம்பழச்சாறு, சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்கவிட்டு சாஸ் பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். குக்கரில் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து பால், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, மிதமான தீயில் வேகவிட்டு, கலவை கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் பழுப்பு அரிசி சாதம் - கண்டென்ஸ்டு மில்க் கலவை, மாதுளம்பழ சாஸ், பால் பவுடர் சேர்த்து மிருதுவாக அரைத்தெடுக்கவும். இதைச் சிறிய பவுல்கள் அல்லது கண்ணாடி டம்ளர்களில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். மாதுளை முத்துகள் கொண்டு அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

தேவையானவை:
* பால் - ஒரு கப்
* சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* கண்டென்ஸ்டு மில்க் - ஒரு கப்
* பாஸ்மதி அரிசி - அரை கப்
* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
* நறுக்கிய பாதாம், பிஸ்தா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:
* நறுக்கிய நட்ஸ், குங்குமப்பூ - சிறிதளவு

காஷ்மீரி பிர்னி

செய்முறை:

அரிசியைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். குங்குமப்பூவை 2 டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும். அரிசியைத் தண்ணீர் வடித்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அடிகனமான கடாயில் பாலைச் சூடாக்கி, குமிழ்கள் வந்ததும் தீயைக் குறைக்கவும். அரிசி மாவு, கண்டென்ஸ்டு மில்க், குங்குமப்பூ கலவை, ஏலக்காய்த்தூள், நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து, கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்வரை அடிக்கடி கிளறிவிடவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும் (ருசி பார்த்து சர்க்கரையின் அளவை அட்ஜஸ்ட் செய்வது நல்லது). சர்க்கரை கரைந்து, அரிசி நன்கு வெந்ததும் பிர்னி தயார். சிறிது நேரம் ஆறியதும் மண் பாண்டத்தில் பிர்னியைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். நறுக்கிய நட்ஸ், குங்குமப்பூ சேர்த்து அலங்கரித்து, ஜில்லென்று பரிமாறவும்.

தேவையானவை:
* கண்டென்ஸ்டு மில்க் - ஒரு கப்
* கோகோ பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
* நறுக்கிய வால்நட் - 50 கிராம்
* ஜெலெட்டின் - 3 டேபிள்ஸ்பூன்
* பால் - 2 கப்
* ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

அலங்கரிக்க:
* விப்டு க்ரீம், துருவிய சாக்லேட் - தேவையான அளவு

சாக்லேட் சூஃப்ளே

செய்முறை:

அரை கப் வெந்நீரில் ஜெலெட்டினைக் கரைக்கவும். ஒரு கப் பாலுடன் கோகோ பவுடர் சேர்த்து 5 - 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஜெலெட்டின், வால்நட், மீதமுள்ள ஒரு கப் பால், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து இறக்கி தனியே வைக்கவும். ஒரு பவுலில் க்ரீமைப் போட்டு அடித்து பால் - கோகோ கலவையைச் சேர்க்கவும். இதைக் குளிர வைத்து அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

தேவையானவை - க்ரெப்ஸ் (Crepes) செய்ய:
* மைதா - ஒரு கப்
* ரவை - 4 டேபிள்ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
* பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
* பால் - ஒரு கப்
* நெய் - 4-5 டேபிள்ஸ்பூன்

ஸ்டஃபிங்குக்கு:
* தேங்காய்த் துருவல் - 2 கப்
* கண்டென்ஸ்டு மில்க் - முக்கால் கப்
* முந்திரி - 10
* பிஸ்தா - கால் கப்
* உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

பாட்டிஷப்டா

செய்முறை:

கடாயைச் சூடாக்கி நெய்விட்டு முந்திரி, பிஸ்தா, திராட்சையை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, 2 நிமிடங்கள் வதக்கி, கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறவும்.

வறுத்த முந்திரி, பிஸ்தா, திராட்சை சேர்த்து ஒரு பவுலுக்கு மாற்றவும். ஃபில்லிங் தயார். மைதா, ரவை, அரிசி மாவு, பேக்கிங் சோடா, பால், பொடித்த சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மாவாகக் கரைத்துக்கொள்ளவும். தவாவைச் சூடாக்கி நெய்விட்டு ஒரு கரண்டி மாவுவிட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். இந்த பான்கேக்குகளைச் சிறிது நேரம் ஆறவிட்டு, நடுவில் ஒரு முழு ஸ்பூன் அளவுக்கு ஃபில்லிங் வைத்துச் சுருட்டி, டூத்பிக் குத்திப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/brown-rice-pomegranate-mousse-kashmiri-phirni-patishapta-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக