Ad

புதன், 8 செப்டம்பர், 2021

`இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட துரோகம்!’ - சிஏஏ வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) ரத்து செய்யக்கோரி, அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

தீர்மானம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கும், நாட்டில் நிலவிவரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்றே இந்த பேரவை கருதுகிறது. மக்களாட்சி அடிப்படையில் ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது, அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது, வெளிநாட்டிலிருந்து அகதிகளாக வரும் மக்களை அவர்களின் நிலைகருதி அரவணைக்காமல், மத அடிப்படையிலும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்தி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து தீர்மானம்

எனவே இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டை நிலைநிறுத்தவும் ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்தம் 2019-ஐ ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவை வலியுறுத்துகிறது!" என தெரிவித்துள்ளார். மேலும், ``சிஏஏ சட்டம் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம்" எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: சட்டப்பேரவை சர்ச்சை: துரைமுருகன் விளக்கம்... எடப்பாடி தரப்பு சொல்லும் காரணம்! - திமுக Vs அதிமுக!

சிஏஏ சட்டத்தை ரத்துக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/chief-minister-mk-stalins-resolution-in-the-assembly-to-repeal-the-caa-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக