திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126 கிலோமீட்டர் தூரத்திற்கு 3200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 வழிப்பாதை அமைக்கத் தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக, ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பேரண்டுர், பனப்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தத் திட்டமிடபட்டுள்ளது. எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்குச் சரக்கு வாகனங்கள் எளிதாகச் சென்று வருவதற்காகச் சென்னை- பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்கத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆறுவழிச் சாலை திட்டத்திற்காக ஆந்திராவின் சித்தூரிலிருந்து, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை புதிய சாலைக்காக, ஆந்திராவில் 2,186 ஏக்கர் நிலமும் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் மும்மரமாகப் பணி நடைபெறுகிறது. அரசின் இத்திட்டத்தால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே இதற்கு மாற்றுப்பாதையில், விளை நிலங்களை அழிக்காமல் அரசின் தரிசு நிலங்கள் வழியாக 6 வழிப்பாதை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் இந்த ஆறு வழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read: ``பருவமழைக்கு முன்பாவது தடுப்பணையை சீரமைத்து கொடுங்கள்!" - கொதிக்கும் விவசாயிகள்
ஆனால், மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து கையகப்படுத்தும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், நேற்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு, மாவட்டச் செயலாளர் செந்தில்வேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய பி.ஆர்.பாண்டியன், ``விளை நிலங்களை அழித்து அமைக்கப்படவிருக்கும் இந்த ஆறு வழிச் சாலையால் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளால் பயன்பெறும் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார 18 கிராமங்களில் விவசாயம் முழுமையாக அழிந்துபோகும். எனவே, அரசு மாற்றுத் திட்டமாக, கொசஸ்தலை ஆற்றின் மற்றொரு புறத்தில் விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் இந்த சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீனவ கிராமங்களுக்கும், விவசாயத்துக்கும் அழிவை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்வோம்' என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அவர் கூறியபடி, தமிழக அரசு காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்து, அதற்குச் சாலை அமைப்பதற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/farmers-protest-in-tiruvallur-against-6-way-road-project
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக