ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 100 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், பல்வேறு தரப்பிலும் பாராட்டுதலைப் பெற்றுவருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.முக அரசு! அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை, கொடநாடு விவகாரத்தில் மேல் விசாரணை என தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க-விலிருந்து போராட்டம், பொருமல்கள் என எதிர்ப்பு கிளம்பினாலும், சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர்களே முதல்வரையும், அரசின் செயல்பாடுகளையும் மனதாரப் புகழ்ந்து பேசிவருவது யாரும் எதிர்பாராத திருப்பம்! இந்தச் சூழலில் தி.மு.க ஆதரவாளரும் திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்தை நேரில் சந்தித்தேன்...
''வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின்போது, பாடல் வரிகளை மேற்கோள்காட்டி தன் நிலையை விவரித்திருக்கிறாரே ஓ.பன்னீர்செல்வம்?''
''மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதை ஆதரிக்காமல், பா.ஜ.க-வைப் பின்தொடர்ந்து வெளிநடப்பு செய்திருக்கிறது அ.தி.மு.க. ஆக, இவர்களுக்குக் கொஞ்சம்கூட அரசியல் தெரியவில்லை. அரசியலில், தற்கொலை செய்வதற்கென்றே தயார் செய்யப்பட்டவர்கள்போலத்தான் இவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்த வெளிநடப்பின்போதுதான் ஓ.பி.எஸ் இந்தப் பாடல் வரிகளைப் பாடியிருக்கிறார். அவரது உள்ளக்கிடக்கையை இந்தப் பாடல் வரிகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்!''
''இரட்டைத் தலைமையில் செயல்பட்டுவரும் அ.தி.மு.க-வில், ஓ.பி.எஸ்-ஸின் நிலைதான் என்ன?''
''அரசியலில், மூன்று தடவை தற்கொலை செய்துகொண்டவர் ஓ.பி.எஸ். அதாவது, ஜெ. மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் முதல்வராவதற்கு முகமாக இருந்த சசிகலாவை எதிர்த்து 'தர்ம யுத்தம்' நடத்தியது முதலாவது தற்கொலை. ஏற்கெனவே மூன்று முறை முதலமைச்சராக இருந்த அவர், துணை முதலமைச்சராவதற்கு ஒப்புக்கொண்டது இரண்டாவது தற்கொலை. அடுத்து, கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பி.எஸ்-தான் 'எதிர்க்கட்சித் தலைவர்' ஆகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த வாய்ப்பையும்கூட எடப்பாடி பழனிசாமிக்குத் தாரைவார்த்துவிட்டு, 'துணை எதிர்க்கட்சித் தலைவர்' பொறுப்பை ஓ.பி.எஸ் வாங்கிக்கொண்டது மூன்றாவது தற்கொலை!''
'' `சசிகலாவுடன் ஓ.பி.எஸ் சேர்ந்துவிடுவார்’ எனத் தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தீர்கள். அப்படி எதுவும் நடக்கவில்லையே?''
''இப்போதும் அதையேதான் சொல்கிறேன். சசிகலாவோடு ஓ.பி.எஸ் சேர்ந்துவிடுவார் என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை. அண்மையில், சசிகலா ஆடியோக்கள் பரபரப்பாக வெளிவந்துகொண்டிருந்தபோது எடப்பாடி, சசிகலாவை விமர்சித்தார். ஆனால், இதுபற்றி ஓ.பி.எஸ் வாய் திறக்கவேயில்லை. 'சசிகலாவை நோக்கி மக்கள் திரும்புகிறார்கள்' எனச் செய்திகள் வெளியானபோதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை ஓ.பி.எஸ்! அவருடைய மகன் ஜெயபிரதீப், சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டபோதும்கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
அண்மையில், `சசிகலாவைக் கண்டித்து, மாவட்ட அளவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என அ.தி.மு.க-வில் முடிவு செய்தனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 70 மாவட்டங்களில், வெறும் 19 மாவட்டங்களில் மட்டுமே இந்தக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உச்ச பதவியிலுள்ள ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டமான தேனியில் இன்னமும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆக, ஓ.பி.எஸ்-ஸின் இந்தத் தொடர் மௌனம், 'சசிகலாவிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை' என்பதை இன்னும் உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறது!''
Also Read: `கலைஞர் நினைவு நூலகம் கமிஷன் சர்ச்சை முதல் மோடியைத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ வரை' கழுகார் அப்டேட்ஸ்
''ம.தி.மு.க-விலிருந்து விலகி நீங்கள் அ.தி.மு.க-வுக்குச் சென்றபோது உங்களைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனவே?''
''உண்மைதான். பணம் பெற்றுக்கொண்டுதான் நான் அ.தி.மு.க-வுக்குப் போனேன் என்றெல்லாம்கூடத்தான் செய்தி எழுதினார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. ஏனெனில், இவற்றுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!''
''சம்ஸ்கிருதம் அறிவை வளர்க்கும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே உண்மையா?''
''சம்ஸ்கிருதத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இலக்கிய வளமும் செழுமையும்கொண்ட மொழி. ஆனால், அது அறிவை வளர்க்கும் மொழி அல்ல; ஆன்மிகத்தை வளர்க்கும் மொழி!
லலிதா சகஸ்ரநாமம், பஜகோவிந்தம், பாகவதம், பாரதம் போன்ற இந்தியாவின் இதிகாசங்களையும், காளிதாசன் போன்ற மகத்தான கவிஞர்களையும் தந்த மொழி. ஆனால், இந்தப் பெருமைமிகு மொழியை ஓர் ஆதிக்கத்தின் சின்னமாகக் கையாண்டுவருகிறது மத்திய பா.ஜ.க அரசு. இதைத்தான் நாம் கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.''
''அப்படியென்றால், 'உண்மையிலேயே அறிவை வளர்க்கிற மொழி' எதுவென்று பிரதமர் மோடியிடம் நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்?''
''அறிவை வளர்க்கிற மொழி நம் தமிழ் மொழிதான்! ஆனால், மத்திய பா.ஜ.க ஆட்சியாளர்கள், தங்களுடைய ஈனத்தனமான அரசியலுக்காக சம்ஸ்கிருத மொழியைக் கையிலெடுத்துக்கொண்ட குற்றவாளிகள்! சம்ஸ்கிருத மொழியை ஆதிக்கத்தின் சின்னமாகத் தூக்கிப்பிடித்து இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்!
இன்றைய உலகம் பேசிக்கொண்டிருக்கிற அறிவியலை, 'ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி' என்று ஔவையார் அன்றே பாடிவிட்டாள். 'வலவன் ஏவா வான ஊர்தி' என்று சங்க காலத்திலேயே புறநானூறு சொல்லிற்று. ஆக, அறிவை வளர்க்கும் மொழி என்று தமிழ் மொழியைத்தான் சொல்ல வேண்டும்.
அதனால்தான், கரிகாற் பெருவளத்தான், 12,000 சிங்களவர்களைக் கொண்டுவந்து காலத்தால் அழிக்க முடியாத வகையில் கல்லணையைக் கட்டி முடித்தான். அது போன்றதொரு உறுதியான ஓர் அணையை இன்றைய அறிவியல் உலகில்கூட உங்களால் கட்ட முடியுமா... இல்லை, ராஜராஜ சோழன் கட்டி வைத்திருக்கிற தஞ்சை பிரகதீஸ்வரர் கோபுரத்தைத்தான் உங்களால் கட்ட முடியுமா... திருநெல்வேலி, காந்திமதி அம்பாள் கோவிலிலுள்ள தூண்களைத் தட்டினால் எட்டு வகையான நாதம் கேட்கிறது. அப்படியொரு கலை நுணுக்கத்துடன்கூடிய தூணைச் செதுக்க முடியுமா? கட்டட அறிவியலில் மட்டுமல்ல... வானசாஸ்திரத்திலும்கூட தமிழர்கள்தான் சிறந்து விளங்கினார்கள். இதுதான் வரலாற்று உண்மை!''
source https://www.vikatan.com/government-and-politics/politics/nanjil-sampath-interview-on-current-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக