Ad

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பது யார்?!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. இதுவரை 3.30 கோடி பேருக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 3.21 கோடி பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தற்போது நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

கொரோனா தொற்று ஒருபுறமிருக்கத் தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு விவசாயிகள் சங்க நிர்வாகிகளோடு இதுவரை 10-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையிலும், இதுவரை எந்த உடன்படும் ஏற்படவில்லை.

மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வருவதில் மிக உறுதியாக உள்ளது. விவசாயிகளும் சட்டத்தைத் திரும்பிப் பெறும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். தற்போது டெல்லி புறநகர்ப் பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள். தங்களின் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கிசான் மகா பஞ்சாயத்து

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் `சம்யுக்தா கிசான் மோர்சா சங்கம்' ஏற்பாடு செய்திருந்த `கிசான் மகா பஞ்சாயத்து' என்ற விவசாயிகள் மாநாட்டிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 300 விவசாய அமைப்பைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் கலந்துகொண்டனர். பாதுகாப்புப் பணியில் மட்டும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் பேசும்போது,``இந்திய சுதந்திரப் போராட்டம் 90 ஆண்டுகள் நடைபெற்றது. இந்த போராட்டம் என்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. நாடு விற்கப்படுவதை நாம் தடுக்க வேண்டும். எங்களின் உயிரே போனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களை நிறுத்தமாட்டோம். இன்னும் எவ்வளவு நாள்கள் ஆனாலும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் போராட்டக் களத்தை விட்டுச் செல்லமாட்டோம். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம். விவசாயம் மட்டுமல்லாது, தொழிலாளர்கள், இளைஞர்கள், வர்த்தகம் என்று அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும்" என்றார்.

கிசான் மகா பஞ்சாயத்து

இந்தக் கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி, வரும் 27-ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் 2024 மக்களவை தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்போவதாக விவசாயச் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த போராட்டத்தின் தாக்கம் அடுத்த வருடம் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம். ``மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. சட்டத்தைத் திரும்பப் பெற விவசாயிகள் கோரிக்கை வைத்தால் அதை ஏற்க மறுக்கிறது. விவசாயிகளின் போராட்டங்களைச் சீர்குலைக்க மறைமுகமாகச் சதி செய்து வருகிறது. விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் வெளிப்பாடாகத் தான் உத்தரப்பிரதேசத்தில் கிசான் மகா பஞ்சாயத்து நடைபெற்றது" என்றார்.

பி.ஆர்.பாண்டியன்

மேலும், ``இனியும் மத்திய அரசு சட்டத்தை திரும்பப்பெறமாட்டேன் என்று சொன்னால் வரும்காலங்களில் அதற்கான பலனை அரசு அனுபவிக்கும். இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது பாஜக அரசு. அமைச்சரவையிலேயே அவர்களுக்குள் ஒத்த கருத்துகள் இல்லை. அமைச்சரவையையே மாற்றி அமைக்கும் நெருக்கடி மோடிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நிலையிலிருந்துதான் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் யாரேனும் இருக்கிறார்களோ என்று அவர்கள் நினைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகள் ஒன்றுபட முடிவெடுத்துதான் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இது விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிரான சட்டம். ஒருமித்த கருத்துடன் விவசாயிகள் போராடி வருகிறோம்" என்று பேசினார்.

Also Read: வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்: விவசாயிகளிடம் 'ஸ்கோர்' செய்த கட்சிகள் எவை?

விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறக் காரணம். இடைத்தரகர்களை, அதிக நிலம் வைத்துள்ள மக்களை, அடிமைகளாக வைத்திருக்கும் அரசியல் பின்புலம் உள்ளவர்களும்தான். இந்த வேளாண் சட்டங்கள் சாதாரண விவசாயிகளுக்கு அதிக பலனைத் தரும். அதன் மூலமாக இந்தியா விவசாயத் துறையில் பெரும் எழுச்சியைப் பெறும். இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு தான் இடைத்தரகர்களும், அரசியல் பின்புலம் உள்ளவர்களும், இந்த சட்டத்திற்கு எதிராக ஆட்களை வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

நாராயணன் திருப்பதி

தொடர்ந்து பேசியவர், ``பேச்சுவார்த்தையில் அரசின் தரப்பில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான தெளிவான விளக்கம் தரப்படுகிறது. அவர்களுக்கு அரசு தரும் பதில்கள் புரிந்தாலும், புரியாத மாதிரி கடந்து சென்றுவிடுவதுதான் காரணம். சாதாரண விவசாயிகள் இந்த திட்டம் தங்களுக்குப் பலன் தரும் என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துவைத்துள்ளார்கள். சில அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நடைபெறும் தவறான போராட்டம். அவர்களின் போராட்டம் தேர்தலில் எந்த பிரதிபலிப்பையும் ஏற்படுத்தாது. பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிவாகையைச் சூடும்" என்று கூறினார்.



source https://www.vikatan.com/social-affairs/politics/who-is-behind-in-the-farmers-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக