Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

`நீதிபதி மகன் என்றால் மிரட்டலாமா?' - வால்பாறை வனச்சரகர் கைதால் கொந்தளிக்கும் வனத்துறை ஊழியர்கள்

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகராகப் பணியாற்றிவந்தவர் ஜெயச்சந்திரன். இவர் பணியில் இருந்தபோது, சில நாள்களுக்கு முன்பு இரவு வால்பாறை சிறுகுன்ற எஸ்டேட் அரசு விருந்தினர் மாளிகை முன்பு இளைஞர்கள் சிலர் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

வால்பாறை

Also Read: புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் - நீதித்துறை கையாண்டது எப்படி?

அப்போது ரோந்துப் பணியில் இருந்த ஜெயச்சந்திரன், ``இது யானை வரும் பாதை. உள்ளே போங்கள்” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஜெயச்சந்திரனிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்களில் ஒருவர் பெயர் நாராயணன். இவர் தந்தை டி.ராஜா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். இதற்கிடையே, நாராயணன் தான் நீதிபதியின் மகன் என்று கூறி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

வால்பாறை

வாக்குவாதம் முற்றியநிலையில், நாராயணன் உள்ளிட்ட இளைஞர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு ஜெயச்சந்திரன் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த இளைஞர்கள் மற்றொரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சென்னை வரை வெடித்திருக்கிறது.

இதையடுத்து,வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன், ஜெயச்சந்திரன் மீது வால்பாறை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் தகாத வார்தைகளில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனைக் கைதுசெய்துள்ளனர். ஜெயச்சந்திரன் கைது விவகாரம் வனத்துறையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயச்சந்திரன் கைது

``நீதித்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. நீதிபதி மகன் என்று மிரட்டல் விடுத்ததோடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வனச்சரகரைக் கைதுசெய்வதா?” என்று அட்டக்கட்டி பகுதியில் வனத்துறையினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

மேலும் வனச்சரகர் கைதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வனத்துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வனச்சரகர், அவர்களிடம் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார். வால்பாறை குறித்து எந்த விவரமும் தெரியாதவர்களை நள்ளிரவில் வெளியேற்றியிருக்கிறார்.

வனத்துறை போராட்டம்

வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் அவர்கள் நள்ளிரவு எங்கே செல்வார்கள்? இந்த தர்ம சங்கடமான சூழ்நிலைதான் பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டது” என்று கூறியுள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/valparai-forest-ranger-arrested-by-police-sparks-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக