Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

``இதுதான் தங்கத்தேரா?" - ராமேஸ்வரம் கோயிலில் அதிர்ந்த அமைச்சர் சேகர்பாபு!

ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் மீது பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில் அங்குள்ள தங்கத்தேர் கறுத்துப்போனது பற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விசாரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் கோயில்

நேற்று மதுரை வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளியைத் திறந்து வைத்தார். வீரவசந்தராயர் மன்படபம் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்பு அழகர்கோயில், சோலைமலை முருகன் கோயில்களில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், "வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணியை மேற்கொள்ளும் ஸ்தபதிகளுக்கான டெண்டர் விடுவதில் தாமதமாகி வருகிறது. அதிலுள்ள பிரச்சனைகளை சரி செய்து விரைவில் டெண்டர் விடப்படும். வீரவசந்தராயர் மண்டப பணி முடியாமல் கோயிலில் அடுத்தாண்டு குடமுழுக்க நடத்துவதில் ஆகம விதிகளில் தடை உள்ளதா என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

Also Read: நாமக்கல்: கோயில் திருப்பணிக்குத் தோண்டிய குழி... உள்ளே கிடைத்த பழைமையான நந்தி சிலை!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்

மக்கள் நன்கொடையாக கொடுத்த தங்க நகைகள் 9 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளன. இதில் கடவுளுக்கு பயன்படுத்துவதைத் தவிர மற்ற நகைகளை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றி அதை டெபாசிட் செய்து கிடைக்கும் பணம் கோயில் வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்" என்றார்.

அடுத்ததாக ராமேஸ்வரம் சென்றவர் ராமநாதஸ்வாமி கோயிலுக்குள் சென்று ஆய்வு நடத்தினார்.

ராமேஸ்வரம் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு

கோயிலின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தவர், தங்கத்தேர் இருக்கும் பகுதிக்கு வந்தார்.

' இதுதான் தங்கத்தேர்' என்று கோயில் அதிகாரிகள் காட்ட, கறுப்பாக காட்சியளித்த அந்த தேரை பார்த்து, 'இதுதான் தங்கத்தேரா?' என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்.

தங்கத்தேர் கறுத்துப்போனது பற்றி பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் இருப்பதை டெய்தியாளர்கள் சுட்டிக்காட்ட, ``தேருக்குப் பயன்படுத்திய தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு அதில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றவரிடம் ``தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்களா?" என்று கேட்டதற்கு, ``கொரோனா பரவல் முழுமையாக குறைந்ததும் தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

தங்கத்தேரை ஆய்வு செய்யும் அமைச்சர்
கறுப்பாக மாறிய தங்கத்தேர்

தங்கத்தேர் விவகராம் மட்டுமல்ல, ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என பலதரப்பிலும் முறைமுறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். கோயிலில் உள்ள அனைத்து தங்க நகைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்கள் பக்தர்கள்.

இதற்கிடையே, 'கோயில் தீர்த்தங்களில் தண்ணீர் இறைத்து ஊற்றும் யாத்திரப்பணியாளர்களான நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எங்கள் பிரச்சனையை தெரிவிக்க சென்றபோது அதை கேட்காமலயே அமைச்சர் சென்று விட்டார்' என்று ஆதங்கப்பட்டனர் பணியாளர்கள்.



source https://www.vikatan.com/news/policies/minister-sekarbabu-visited-madurai-and-rameswaram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக