சுதந்திரப் போராட்டத்தின் போது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த மகாத்மா காந்தி, இப்பகுதி விவசாயிகளின் வறிய கோலத்தை பார்த்து, அன்று முதல் தானும் மேல்சட்டையை துறந்து அரையாடைக்கு மாறினார்.
Also Read: மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டிய காந்தி மார்க்கெட்! திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்சி!
மதுரையில் நடந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியின் நூற்றாண்டு விழா காந்திய இயக்கங்களால் இன்று மதுரையில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா மதுரை வந்துள்ளார்.
காந்தி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த தாரா காந்தி பட்டாச்சார்யாவை அங்குள்ள நிர்வாகிகள், ஊழியர்கள் வரவேற்றார்கள். அங்கு காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார் தாரா காந்தி. காந்தியின் கொள்ளுப் பேரனான வித்தூர் பரதனும் வந்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாரா காந்தி பட்டாச்சார்யா, ``மதுரை எனது தாய் நிலம். இங்கு வந்ததில் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன். என் குடும்பத்துடன் இருப்பது போல இருக்கிறேன். இந்த மகத்தான நிலத்திற்கு எனது மரியாதையை காணிக்கை ஆக்குகிறேன்.
இங்கிருந்த விவசாயிகளின் தோற்றம் காந்தியின் ஆடை மாற்றத்திற்கு ஒரு காரணமாகியது. காந்தி, ஆடையை மாற்றிக்கொண்டு இமய மலைக்கு சந்நியாசம் போகவில்லை. இங்கேயே, இந்த ஏழை மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். மேலும், அதே உடையுடன்தான் டெல்லி போன்ற குளிர் நிறைந்த நகரங்களிலும் வாழ்ந்தார்.
எளிமையின் உதாரணமாக வாழ்ந்தவர் காந்தி. காந்தி ஆன்மிகத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால், அவரது வாழ்க்கையே ஆன்மிக நெறியைக் கொண்டிருந்தது.
Also Read: நிதிப்பற்றாக்குறையால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட மகாத்மா காந்தி தொடங்கிய பள்ளி!
காந்தியின் பேத்தியாகிய நீங்கள் அவரைப் போன்ற ஆடைக் கொள்கை கொள்வதில்லையே எனப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் காந்தியைப் போல அல்ல, அவரிடம் இருந்து மாறுபட்டவள். ஆனால், காந்தி அணிந்திருந்த வெண்மை நிறத்தில் இருந்த பல நிறங்களைக் கண்டிருக்கிறேன். அவர் உடுத்தியிருந்த வெண்மை நிறம், உண்மை, தத்துவங்கள், வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல வண்ணங்களை உணர்த்தி இருக்கிறது. அவரது உடை மாற்றத்திற்கு காரணமாக இருந்த மதுரை மக்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்" என்றார்.
காந்தி அரையாடை அணிந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மதுரையில் இன்று நடைபெறுகின்றன.
source https://www.vikatan.com/news/tamilnadu/mahatma-gandhi-s-grand-daughter-tara-came-to-centenary-function-at-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக