Ad

புதன், 22 செப்டம்பர், 2021

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `நூற்றாண்டின் முதல் படகு' |பகுதி 1

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்

``ஈழத்திலிருந்தும் ஆப்கன், இராக் போன்ற நாடுகளிலிருந்தும் பல்லாயிரணக்கான அகதிகள், ஆஸ்திரேலியாவை நோக்கி படகுகளில் படையெடுத்தனர். தத்தமது நாடுகளில் ஏற்பட்ட கொடிய போரிலிருந்து ராணுவ நெருக்கடியிலிருந்து தப்பித்து படகேறி ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் கரையொதுங்கினர். நான் மெல்போர்ன் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் மூன்று வருடங்களாக வேலை செய்திருக்கிறேன். வெவ்வேறு நாட்டு அகதிகளின் ஓலங்களை, முகாம் வாழ்வின் மனவலியை ஜீரணிக்க முடியாமல் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதற்கு மேற்கொண்ட காயங்களை, தனிமையின் சிதைவை பொறுக்க முடியாத தற்கொலை முயற்சிகளென பல துயரங்களைப் பார்த்திருக்கிறேன்."

தெய்வீகன், ஆசிரியர்
தெய்வீகன்

எழுத்தாளர் தெய்வீகன் ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறார். மெல்போர்னில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பொறியியலாளராகப் பணிபுரிகிறார். இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள முன்னணி இதழ்களிலும், புலம்பெயர் இதழ்களிலும் இவரது கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது 'அமீலா' என்ற சிறுகதைத் தொகுதியும், 'தாமரைக்குள ஞாபகங்கள்' என்ற புதினங்களின் தொகுப்பும் 2019-ல் தமிழினி பதிப்பகத்தில் வெளியாகியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ராணுவ நடவடிக்கையொன்றை தாலிபன் தீவிரவாதிகளின் மீது தொடுக்கப்போவதாக வாஷிங்டன் (Washington) அரச மாநாட்டு மையத்தில் நன்கு உயரமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் கம்பீரமாக நின்று அறிவித்தார் ஒபாமா. அதிகாரமும் அமெரிக்கத் திமிரும் அவர் பேச்சின் ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஒலித்தன. ``முப்பதினாயிரம் மேலதிக நேட்டோ படைகளை ஆப்கனில் கொண்டுபோய் இறக்கி தாலிபன்களைத் துடைத்து எறியப்போகிறோம்” - என்று அவர் சொல்லி முடிக்கும்போது, அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக ஆப்கன் மாறிவிட்டதைப்போன்ற களிப்பில் முன்னுக்கு இருந்தவர்கள் குதூகலித்தார்கள். உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அத்தனை வாஷிங்டன் அதிகாரிகளும் கரகோஷித்து அவரை ஆசீர்வதித்தார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி, சரியாக பதினாறு மாதங்களில் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கரையோரம் முதலாவது ஆப்கன் அகதிப் படகு 26 பேரோடு வந்து பாறைகளில் முட்டி நின்றது. மூன்று நாள்களில் இன்னொரு படகும் ஆப்கன் அகதிகளோடு வந்திருப்பதாக மெல்போர்ன் 'த ஏஜ்' பத்திரிகையில் முன்பக்கச் செய்தி வெளியாகியிருந்தது. அடுத்தடுத்த வாரங்களில் படகில் வரத் தொடங்கிய ஆப்கன் அகதிகளால் கிறிஸ்மஸ் தீவு முகாம் திணறியது. ஆப்கனை ஆயுதங்களால் ஆடைகட்ட ஆசைப்பட்ட அமெரிக்காவின் கனவு, ஆயிரம் ஆயிரமாக அந்நாட்டு மக்களை எல்லைகளைத் தாண்டித் துரத்தியது. சிதறிய உடல்களையும் கனவுகளையும் எந்த மலைகளுக்குள்ளும் ஒளித்து வாழ முடியாத அப்பாவிகள், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் வழியாக இந்தோனேசியாவுக்குப் பறந்தார்கள்.

Also Read: ஆப்கன்: `மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்துள்ளேன்!' -தாலிபன் பிடியிலிருந்து இந்தியா வந்த இளைஞர்

புலம்பெயரும் மக்கள்

முல்லைத்தீவு – கேரளா - இந்தோனேசியா பக்கங்களிலிருந்து சுமத்ரா கடலை வெட்டியோடி வந்த தமிழ் அகதிப் படகுகளால், ஏற்கெனவே மிரண்டு போயிருந்த ஆஸ்திரேலிய கடற்படையினருக்கு, ஆப்கன்களின் படகுப் படையெடுப்பு புதுவிதமான பீதியைக் கிளப்பியது. ஏகப்பட்ட குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வந்திறங்கிய ஆப்கன் மக்களின், கிறிஸ்மஸ் தீவு அவலக் காட்சிகளை ஆஸ்திரேலியத் தொலைக்காட்சிகள் ஒரே இரவில் தங்களது தலைப்புச் செய்திகளுக்கு நகர்த்த ஆரம்பித்தன. ஓலம் கேட்ட இடமெங்கும் ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியோடு போய் நின்றார்கள்.

கிறிஸ்மஸ் தீவிலிருந்து அத்தனை ஆப்கன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு மாநிலத்தின் டார்வின் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அங்குவைத்து தரம் பிரிக்கப்பட்டவர்களில் பெரும் தொகுதியினர் விமானம் மூலம் மெல்போர்னுக்குக் கொண்டுவரப்பட்டனர். ஆப்கனில் ஆரம்பித்த அவர்களது ஓட்டம் மலைகள், நகரங்கள், விமானங்கள், படகுகள் என்று நீண்டு ஆஸ்திரேலியாவுக்குள்ளேயும் தொடர்ந்துகொண்டேயிருந்தது.

ஆறு மணிக்கே இரவுக்குள் பதுங்கத் தொடங்கிவிடும் மெல்போர்னின் குளிர்கால இரவொன்றில் அன்று அவர்கள் போலீஸ் பாதுகாப்போடு அகதிகள் முகாம் வாசலில் வந்து இறங்கியபோது மழையும் சாதுவாகப் பெய்து ஓய்ந்திருந்தது. நிலவை மறைத்துக்கொண்டு முகில்கள் தலைவிரிகோலமாக படுத்துக்கிடந்தது. முட்கம்பி வேலிகளில் நின்ற ஒற்றைக்கம்பத்து ஒளிவிளக்குகள், புதியவர்களைப் புதினத்தோடு திரும்பிப் பார்த்தது.

அகதிகள்
அரைத் தூக்கத்துடன் பர்தாவுக்குள் சோர்ந்திருந்த பெண்கள், நீள் பயணத்தால் ஆழ் துயிலில் கரைந்த குழந்தைகள், இன்னமும் பயணம் தீரவில்லை என்ற உச்ச வெறுப்போடு சில வயோதிகர்கள், குடும்பஸ்தர்கள் என்று ஒரு பெருங்கூட்டம் ஏழு பேருந்துகளிலிருந்தும் இறக்கப்பட்டனர். வரிசையாக முகாமுக்குள் அழைத்துவரப்பட்டனர்.

இருட்டென்றாலும் புதிய அகதிகளைப் பார்ப்பதற்கென்று காத்திருந்த முகாம்வாசிகள் பேருந்துகளின் சத்தம் கேட்ட மாத்திரத்திலேயே வேலிகளின் பக்கமாக ஓடிவந்தனர். ஏற்கெனவே முகாமிலிருந்த சில ஆப்கன் அகதிக் குடும்பங்கள், வந்தவர்களை நோக்கி பஸ்டோ மொழியில் வணக்கத்தைக் கூவினார்கள். புதிய குரலொன்று தமது மொழியை உச்சரிப்பது கேட்டு, வந்தவர்களுக்கு சோம்பல் முறிந்தது. உதடுகள் உற்சாகத்தோடு பதில் வணக்கம் சொன்னது.

இது மெல்போர்ன் பெருநகரிலிருந்து வடக்கே பதினாறு கிலோமீட்டர் தொலைவில், குற்றங்கள் மலிந்த பிரதேசம் என்று பலரும் அஞ்சுகின்ற இடத்தில், அமைந்துள்ள அகதிகள் முகாம். சுற்றிவர உயரமாக இழுத்துக்கட்டிய கம்பிவேலிகளுக்கு நடுவில் பழி நிலமாகப் பல காலமாகக் குந்திக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சு அதிகாரத்தின் கீழ், இந்த முகாமையும், முகாமிலுள்ளவர்களின் பாதுகாப்பையும் குடிவரவு அமைச்சினால் பொறுப்பளிக்கப்பட்ட 'ரூடோ' என்ற பிரித்தானிய தனியார் நிறுவனம் நிர்வகித்துவருகிறது. இந்தத் தனியார் நிறுவனத்தின் பொறுப்பு என்ன என்று கேட்டால், பச்சையாகச் சொல்லக்கூடிய பதில், எந்த அகதியும் சாகாமல் பார்த்துக்கொள்வது. மேலதிகமாக, இங்குள்ள உயரமான கம்பிவேலிகளின் மீது தாவி எவரும் தப்பிவிடாமல் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.

மாதிரி படம்

Also Read: கடவுள்... பிசாசு.. நிலம்!

மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, முகாமுக்கு நடுவே பெரிய மைதானம். முகாமின் கிழக்கு மூலையில் பொதுச் சாப்பாட்டு மண்டபம். அதற்கு அருகிலேயே பகலில் மாத்திரம் இயங்கும் வைத்திய நிலையம். ஒவ்வொரு முகாம் தொகுதிக்குள்ளேயும் கூட்டமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய கூடுகள் இங்கு `அறைகள்’ என்று அழைக்கப்பட்டன. அழுதால் அடுத்த அறைக்கும் கேட்கக்கூடிய மெல்லிய மரச்சுவர்கள். `சார்ளி காம்பவுண்ட்' குடும்பங்களுக்கும் தனிப்பெண்களும் உரியது. 'அல்பா', 'பிராவோ' காம்பவுண்டுகள் தனி ஆண்களுக்கானவை.

முன்பு யாராவதொரு அகதி தங்கிப்போன வெற்று அறைகளை திறந்து பார்த்தால்கூட, அங்கு இன்னமும் புகைந்துகொண்டிருக்கும் விசித்திர அமைதியொன்று, எஞ்சிய ஓலத்தின் அசரீரியாக அடிமனதில் அறைந்தது. இந்த முகாமுக்கு வருபவர்கள் அனைவரும் நாளையோ, நாளை மறுதினமோ விசாவோடு வெளியில் போய்விடலாம் என்ற எதிர்பார்ப்போடுதான், போட்ட உடுப்போடு அலைகிறார்கள். ஆனால், இந்தப் பழி நிலத்தின் யதார்த்தம் அகதிகளின் தடித்த தோலில் உறைப்பதற்கு இரண்டொரு வாரங்கள் தேவைப்படுகின்றன. தாங்கள் அகதிகள் என்பதை நிரூபிப்பதற்கு எத்தனையோ மாதங்களாக, பற்பல வருடங்களாக, இந்த அகதிகள் தங்கள் உயிரைப் பிளந்து காண்பிக்கவேண்டியிருக்கிறது. பட்ட ரணங்களைப் படம் கீறிக் காட்டவேண்டியிருக்கிறது. நிர்வாணமாக நின்று தங்கள் காயங்களை காட்சிப்படுத்தவேண்டியிருக்கிறது. சிலர் இல்லாத காயங்களைப் புதிதாக உருவாக்கியும் காண்பிக்கவேண்டியிருக்கிறது. அழுகையைக்கூட மொழிபெயர்த்துச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒவ்வொருவர் விதியையும் எழுதும் குடிவரவு அதிகாரிகளின் பேனைகளுக்குள் தங்கள் உயிர்வலியைத் திணிப்பதற்கு என்னவெல்லாமோ செய்யவேண்டியிருக்கிறது.

Also Read: ஆப்கன்: வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்... `முழுச் சுதந்திரம்' என தாலிபன்கள் அறிவிப்பு!

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

சாப்பாட்டு மண்டபத்துக்கு அழைத்துப்போன எல்லோரும் மின்வெளிச்சத்தில் கண்வெடித்து ஆளையாள் புன்னகைத்துக்கொண்டார்கள். தங்கள் கைகளிலிருந்த குழந்தைகளைவிடவும், மழலைகளாக ஒரு கணம் உணர்ந்தார்கள். சமையல்காரர் ஏற்கெனவே தயார் செய்துவைத்திருந்த வதக்கிய ஆப்கன் ரொட்டிகளை, வறுத்த கோழிக்கால்களோடு பரிமாறத் தொடங்கினார். பிளாஸ்டிக் தாம்பாளங்கள் நிறைய தாராளமாக ஆப்பிள்களும், ஆரஞ்சு, கீவி பழங்களையும் ஒவ்வொரு மேசைக்கும் கொண்டுபோய் வைத்தார்கள். நிறைந்திருந்த சாப்பாட்டு மண்டபத்தின் மூன்று வாசல்களிலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வந்தவர்களுக்குரிய படுக்கை விரிப்புகள், ஆடைப்பொதிகள், அத்தியாவசியப் பொருள்கள் போன்றவை சாப்பாட்டு மண்டபத்துக்கு வெளியே வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. சாப்பாடு முடிந்த பிறகு, அவரவர் அறைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு அதிகாரிகள் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தனர்.

முகாம்

கொலை நிலத்திலிருந்து பிழைத்து வந்தவர்களின் வயிற்றுக்கு ஒரு சில ரொட்டித்துண்டுகளே அன்றிரவுக்கு போதுமாகயிருந்தன. ஒவ்வொரு மூச்சும் அவர்களுக்கே புதினமாயிருக்கிறது. என்னோடு பணிபுரிகினற ஆப்கன் நண்பன் சாப்பாட்டு மண்டபத்திலேயே வைத்து புதியவர்களுக்குரிய முகாம் நடைமுறைகளை விளங்கச் சொன்னான். அவனது உரையை கவனமாகக் கேட்டுக்கொண்டாலோ அல்லது கேட்பதுபோல காண்பித்துக்கொண்டாலோ தமக்கு விரைவாக விசா தந்து விடுதலை செய்துவிடுவார்கள் என்ற அப்பாவித்தனம் அவர்கள் எல்லோரது அமைதியிலும் உறைந்துகிடந்தது. நான் முகாமின் பாதுகாப்பு அதிகாரிகள் தலைமை அலுவலகத்தை நோக்கி நடந்தேன். புதியவர்களின் பெயர் விவரங்களை கணினியில் பதிவேற்றுவதற்கு முன்னர், மின்னஞ்சலைத் திறந்தேன். பொறுப்பதிகாரிகளுக்கு குடிவரவு அமைச்சின் மெல்போர்ன் காரியாலயம் அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் விடயங்கள் முக்கியமானவையாகக் சிவப்பெழுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

(தொடரும்...)



source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-difficulties-of-afghanistan-refugees-in-australia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக