காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, வாக்காளர் இறுதிப் பட்டியல் கடந்த 31-ம் தேதி வெளியிடப்பட்டன. தொடர்ந்து, ஊரகப் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு விபரங்களும் வெளியாகின. இவற்றில், குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறது அதிமுக.
இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ``ஊரகப் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு வரைமுறையில் குழப்பமும், குளறுபடிகளும் இருக்கின்றன. திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தொகுதிக்குட்பட்ட காட்பாடி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 41 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் இருக்கின்றன.
இதில், அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவியை சம்பந்தமே இல்லாமல் பட்டியலின சமூக பெண்களுக்கு ஒதுக்கியுள்ளனர். அந்த ஊராட்சியில் முழுக்க முழுக்க பொதுப் பிரிவினரே வசிக்கிறார்கள். அப்படியிருக்க எதன் அடிப்படையில் பட்டியலின சமூக பெண்களுக்கு ஒதுக்கினார்கள் என்றே புரியவில்லை. இதேபோல்தான் பட்டியலின சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசியல் செய்கிறது’’ என்றார்.
அதிமுக-வின் புகார் தொடர்பாக காட்பாடி பி.டி.ஓ-விடம் கேட்டதற்கு, ‘‘இட ஒதுக்கீடு லிஸ்ட்டையே நான் இன்னும் பார்க்கவில்லை. இதனால், அம்முண்டி ஊராட்சி குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-complaint-on-rural-local-government-election-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக