கேரள மாநிலம், கோட்டயம் பாலா மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் லவ் ஜிகாத் மற்றும் நார்கோட்டிக் ஜிகாத் பற்றிப் பேசி பரபரப்பைக் கிளப்பினார். இது அரசியலில் விவாதமான நிலையில், ``லவ் ஜிகாத், நார்கோட்டிக் ஜிகாத் கேரளத்தில் இல்லை’’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ``பாலா பிஷப்பின் பிரசங்கம் அநாவசியமானது. காதலையும் போதை மருந்தையும் ஒரு மதத்துக்கானது எனக் கூறுவது சரியல்ல. இதன் பெயரில் விவாதத்தை ஏற்படுத்தி பிரச்னையை உருவாக்கலாம் என நினைத்தால் அது நடக்காது. கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மக்கள் மாற்றப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மதமாற்றம் செய்து ஐ.எஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சேர்ப்பதாக நடக்கும் பிரசாரங்களின் யதார்த்தம் குறித்து ஆராய்ந்தோம். இளைஞர்களிடையே தீவிரவாத எண்ணம் ஏற்படாமலிருக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. நார்கோட்டிக் ஜிகாத் குறித்து அடிப்படை ஆதாரமில்லை. பாலா பிஷப்பின் கருத்து துரதிர்ஷ்டமானது. சிலர் அதை விவாதமாக்க முயன்றனர். அவர்களது பிரசாரத்தில் உண்மைத்தன்மை இல்லை.
Also Read: `லவ் ஜிகாத் மட்டுமல்ல; போதை ஜிகாத்தும் உண்டு!’ - கேரள அரசியலில் விவாதத்தைக் கிளப்பிய பிஷப் கருத்து
கேரளத்தில் மத மாற்றம், போதை மருந்து கடத்தல் குறித்து ஆராய்ந்தபோது அதில் சிறுபான்மை மதங்களுக்கு பிரத்யேகப் பங்கு இல்லை என்பதை அறிய முடியும். கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. கட்டாய மதமாற்றம் குறித்துப் புகார்களோ, தெளிவான விவரங்களோ கிடைக்கப்பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த அகிலா, ஹாதியா என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறியது நிர்பந்தத்தின் பேரில் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஹை-கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அது தவறானது எனத் தெளிவுபடுத்தின.
கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றி அவர்களை ஐ.எஸ் உள்ளிட்டவற்றில் இணைப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசரித்தபோது மற்றொரு விஷயம் வெளியே வந்தது. 2019 வரை ஐ.எஸ்-ல் சேர்ந்த நூறு பேரில் 72 பேர் கேரளத்திலிருந்து வேலை, தொழில் சம்பந்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஐ.எஸ் சித்தாந்தத்தை ஏற்று அதில் இணைந்திருக்கிறார்கள். அதில் கோழிக்கோடு துருத்தியாடைச் சேர்ந்த தாமோதரனின் மகன் பிரஜூ தவிர மற்ற அனைவரும் பிறப்பாலேயே இஸ்லாமியர்கள். மற்ற 28 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு கேரளத்திலிருந்து சென்றவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 28 பேரில் ஐந்து பேர் மட்டுமே மற்ற மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்ட பிறகு ஐ.எஸ் அமைப்புக்குச் சென்றுள்ளனர்.
அதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிமிஷா என்ற இந்து மததைச் சேர்ந்த இளம்பெண், பாலக்காட்டைச் சேர்ந்த பெக்ஸன் என்ற கிறிஸ்தவ இளைஞரையும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மெரின் ஜேக்கப் என்ற கிறிஸ்தவ இளம்பெண், பெஸ்டின் என்ற கிறிஸ்தவ இளைஞரையும் திருமணம் செய்த பிறகுதான் இவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறியதும், ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததும் நடைபெற்றது. அதுபோல நார்கோட்டிக் ஜிகாத் என்பதும் அடிப்படை ஆதாரம் இல்லாதது. 2020-ல் பதிவுசெய்யப்பட்ட நார்கோட்டிக் வழக்குகளில் 49.8 சதவிகிதம் குற்றவாளிகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். 34.47 சதவிகிதத்தினர் இஸ்லாம் மதத்தையும், 15.77 சதவிகிதத்தினர் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்த குற்றவாளிகள். எனவே, கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க முயல்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/kerala-cm-pinarayi-vijayans-statement-on-bishops-controversy-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக