வேலூர் மாவட்டத்திலிருக்கும் வார்டு எண் ஒன்பதுக்கான குடியாத்தம் பகுதி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, பாண்டியம்மாள் என்ற திருநங்கை, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கியிருக்கிறார். அந்த வார்டு, பட்டியல் சமூகப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் தேர்தல் அதிகாரிகளின் ஒப்புதலுடன் திருநங்கை பாண்டியம்மாளின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், உற்சாகமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் திருநங்கை பாண்டியம்மாள்.
பாண்டியம்மாளிடம் பேசினோம். ``சின்ன வயசுலேயே என்னை வீட்டுல வெளிய அனுப்பிட்டாங்க. எங்கே போறதுனு தெரியாமல் இருந்த என்னை அரவணைத்து அடைக்கலம் கொடுத்தவங்க திருநங்கை சமூகத்துல இருக்குற பெரியவங்கதான்.
நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம். வேலைத் தேடிப் போனாலும் அலட்சியமா துரத்தி அனுப்புறாங்க. நாங்களும் மனுஷங்கதான். சின்ன வயசுல நான்பட்ட கஷ்டம் மாதிரி இனிமேல் வேறு எந்தத் திருநங்கையும் படக் கூடாதுனு நினைக்கிறேன். எங்க சமுதாயத்துக்காக ஏதாவது செய்யணுங்கிற ஆசையோடுதான் தேர்தல் களத்துக்கு வந்துருக்கேன். வெற்றிபெற்றால் அனைத்துத் தரப்பினருக்குமான கவுன்சிலராக மக்கள் பணியாற்றுவேன்.
பெண்களுக்கான அடையாளத்துடன் போட்டியிடுகிறேன். அதிகாரிகளும் என்னுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொண்டனர். பரிசீலனையிலும் என் மனு நிராகரிக்கப்படக் கூடாது என வேண்டுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், வேலூர் மாவட்டத் தலைவர் தலித்குமார் ஆகிய இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/transgender-contest-in-local-body-election-in-vellore-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக