Ad

சனி, 4 செப்டம்பர், 2021

`போக்சோ சட்டத்தை மீறினாரா ராகுல்காந்தி?' - வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

சிறார் வதைக்கு உள்ளாகி உயிரிழந்த டெல்லி சிறுமியின் பெற்றோருக்கு தான் ஆறுதல் சொன்ன புகைப்படத்தை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டார் ராகுல் காந்தி. போக்சோ சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவது குற்றம் என்பதால், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Sexual Harassment (Representational Image)

Also Read: டெல்லி: சிறார் வதை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட 9 வயது பட்டியலின சிறுமி; நாட்டை உலுக்கிய அதிர்ச்சி!

இந்த மனுவை தாக்கல் செய்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வியிடம் பேசினோம். ``டெல்லியில் சிறார் வதைக்கு உள்ளாக்கப்பட்டு பட்டியலின சிறுமி கொலை செய்யப்பட்டார். பின்னர் தாயின் கண் முன்னரே அவரது சடலம் அவசர அவசராக எரிக்கப்பட்டது. இந்தக் கொடுமையான சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுபோன்ற சிறார் வதை வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர், உறவினர்களின் பெயர், புகைப்படம், வீடியோ போன்றவற்றை வெளியிடக்கூடாது என்கிறது போக்சோ சட்டம். ஆனால், அதை மீறும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டுள்ளார்.

முகமது ரஸ்வி

நாட்டின் முக்கிய அரசியல் கட்சி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சட்டத்தை மீறியுள்ளார். அவரே தவறான முன்னுதாரணத்தை உருவாக்கினால் பலரும் இதை பின்பற்றும் நிலை ஏற்படும்.

ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தை 19.5 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள். அவர் வெளியிட்ட புகைப்படத்தை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அவரின் கட்சியை சேர்ந்த 5,000 பேர் அந்த புகைப்படத்தை மறு பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கே.சி.வேணுகோபால், தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் அடங்குவார்கள்.

இவர்கள் மீதும், மறு பதிவேற்றம் செய்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஆனால், புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்துதான் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். சிறார் உரிமைகளுக்காக அரசு இயற்றும் சட்டத்தை, தேசியக் கட்சியின் தலைவரே மதிக்காமல் செயல்படுவது எந்த வகையில் நியாயம்?

இந்நிலையில், இவ்வழக்கை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்றும், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் நீலமேகம், முத்துக்குமார் ஆஜரானார்கள்.

Court- Representational Image

வழக்கறிஞர் நீலமேகம், ``எதிர்ப்பு வந்ததும் ராகுல் காந்தி அந்தப் புகைப்படங்களை ட்விட்டர் பதிவிலிருந்து நீக்கிவிட்டாலும் பலரும் அதை பார்த்துள்ளனர், பகிர்ந்துள்ளனர். குழந்தைகள் நல உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார் அவர். இதன் மீது நீதிமன்றம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சிறார் வதை, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்காமல் போய்விடும். அந்த நோக்கில்தான் இளம் சிறார்கள் நீதி சட்டப் பிரிவு 74- ன் படியும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்ட பிரிவு 23(2)-ன் படியும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 228(ஏ)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றத்தில் மனு செய்திருந்தோம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழந்தைகளுக்கு எதிரான சிறார் வதை கொடுமைகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்தான் இம்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் ஆஜராகி இந்த வழக்குக்கு எதிராக ஆட்சேபம் தெரிவித்தார்கள். நாங்கள் எங்கள் வழக்கின் அடிப்படை பற்றி விளக்கி சொன்னோம். உச்ச நீதிமன்றத்தில் நிபுல் சக்சேனா வழக்கை குறிப்பிட்டு எடுத்துரைத்தோம். அந்த வழக்கில்தான் குழந்தைகளுக்கு எதிரான சிறார் வதை வழக்குகளில் மீடியா எப்படி செயல்படவேண்டும், செய்தி வெளியிட வேண்டும் என்று வரையறை கொடுக்கப்பட்டது.

ராகுல் காந்தி

Also Read: தலித் வன்கொடுமை சம்பவங்களில் சாதியைக் குறிப்பிடுவது ஏன் அவசியமாகிறது?

அந்த அடிப்படையில்தான் இந்த மனுவை தாக்கல் செய்தோம். இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-court-orders-petitioner-to-proceed-case-against-rahul-gandhi-in-special-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக