Ad

சனி, 4 செப்டம்பர், 2021

மே 11, 1973: நெருப்பாய் கொதித்த களம்; அதிரடித்த எம்ஜிஆர்! -உலகம் சுற்றும் வாலிபனும் தமிழக அரசியலும்

திரைப்படங்களில் அரசியல் பன்ச் டயலாக்குகள், சீன்கள் வருவதெல்லாம் இப்போது சாதாரணம். இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த நடிகர்கள் கூட, தன் அடுத்தப் படத்தில் அரசியல் பன்ச் வைக்கச் சொல்லும் காலமிது. ஆனால், ஒரு படமே அரசியலாக மாறியது 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில்தான். எம்.ஜி.ஆர் இயக்கி, தயாரித்து, நடித்த இந்தத் திரைப்படம் வெளியாகுவதற்கு சந்தித்த தடைகளும் பிரச்னைகளும் ஏராளம். திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டு, அதிமுக என்கிற இயக்கத்தை எம்.ஜி.ஆர் தொடங்கியிருந்த சமயம் என்பதால், 'உலகம் சுற்றும் வாலிபன்' வெளியாகுவதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை அப்போதைய திமுக அரசு போட்டது. அத்தனையையும் அடித்து நொறுக்கி அறிவித்திருந்தபடி மே 11, 1973-ல் படத்தை ரிலீஸ் செய்தார் எம்.ஜி.ஆர். அவருக்கும் அதிமுக-வுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தப் படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முழுவதும் 89 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. சென்னையில் மட்டும் 32 தியேட்டர்களில் ரிலீஸ்!

உலகம் சுற்றும் வாலிபன்

'உலகம் சுற்றும் வாலிபன்' தயாரான தருணமே நெருப்பான காலக்கட்டம்தான். திமுக-வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கட்சியின் முன்னோடிகள் வருமானத்திற்கு மீறி சொத்துக் குவித்துவிட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். கட்சியின் செயற்குழுவில் அமைச்சர்களின் சொத்து விவரங்களைக் கேட்கப் போவதாகவும் குண்டை வீசியெறிந்தார். எம்.ஜி.ஆரின் இந்த அதிரடி, கட்சிக்குள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் அவசரமாகக் கூடிய கட்சியின் செயற்குழு, எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களும், திமுக-விலிருந்த எம்.ஜி.ஆர் விசுவாசிகளும் கொந்தளித்தனர். கொந்தளிப்பு அடங்குவதற்கு முன்னதாக, அக்டோபர் 14-ம் தேதி கூட்டப்பட்ட கட்சியின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதி இவ்வளவு ஆக்ரோஷமாக செயல்படுவார் என எம்.ஜி.ஆரே எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி.ஆர் மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றும்படி ஒவ்வொரு தி.மு.க கிளைச் செயலாளருக்கும் வாய்மொழி உத்தரவு வந்தது.

Also Read: 'எம்.ஜி.ஆர் பெயரில் கைவைத்தால், யாராக இருந்தாலும் அவ்வளவுதான்!' - எச்சரிக்கும் நயினார் நாகேந்திரன்

அப்போது நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளையெல்லாம், கவிஞர் கண்ணதான் தான் எழுதியிருந்த 'நான் பார்த்த அரசியல்' என்கிற நூலில் விரிவாக கூறியிருக்கிறார். "அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும், அதற்கு தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை. சினிமாவில் தன் ஆதிக்கம் போய்விடக் கூடாது, அரசியலில் தன் பிடி நழுவிவிடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே தவிர, முழு நேர அரசியல்வாதியாக செயல்பட அவர் விரும்பவில்லை. ஆனால், அவரை வலுக்கட்டாயமாக ஒரு தலைவராக்கியது கருணாநிதிதான். கருணாநிதி போட்டக் கணக்கு தப்பாகிப் போனது. மக்கள் பின்னணி எழுச்சி ஆகுமானால், அது ஒரு பெருங்கூட்டமாகத் திரளும். எம்.ஜி.ஆர் விஷயத்திலும் அதுதான் நடந்தது" என்கிறார் கண்ணதாசன். அவர் சொல்வது ஒருவகையில் உண்மைதான். கருணாநிதி நீக்கியது எம்.ஜி.ஆர் என்கிற நடிகரை அல்ல. 1957, 1962, 1967, 1971 என நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க-வுக்காக பிரசாரம் செய்து, கட்சிப் பணியாற்றி, இரண்டு முறை எம்.எல்.ஏ-வான பழுத்த அரசியல்வாதியை நீக்கினார் அவர்.

எம்.ஜி.ஆர் உடன் கண்ணதாசன்

எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பேருந்துகள், லாரிகளை நிறுத்தி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் வாசகங்களை எழுதினர். கல்லூரிகள், பள்ளிகளில் போராட்டம் வெடித்து அவை செயல்பட முடியாத சூழல் நிலவியது. படிப்படியாக தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, ஒருகட்டத்தில் சட்டம் ஒழுங்கே ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டது. இதை கருணாநிதி எதிர்பார்க்கவில்லை. "எம்.ஜி.ஆரை நீக்கிட்டா, அதைக் கண்டிச்சு பத்து பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்" என்று கண்ணதாசனிடம் அவர் சொல்லிய வார்த்தைகள் வலுவிழந்து போயின. ராமாவரம் தோட்டத்திற்குச் சென்ற ரசிகர்கள், "நீங்க தனிக்கட்சி ஆரம்பிச்சே ஆகணும். இல்லைனா ஊர்ல தி.மு.க காரங்க எங்களை இருக்க விட மாட்டாங்க" என்று எம்.ஜி.ஆரிடம் கொதித்தார்கள். தன்னை நம்பியிருந்தவர்களுக்காக தனிக்கட்சித் தொடங்க முடிவெடுத்தார் எம்.ஜி.ஆர். அக்டோபர் 17-ம் தேதி அதிமுக என்கிற இயக்கம் உதயமானது.

Also Read: `சார்பட்டா பரம்பரை’ எம்.ஜி.ஆர்-ஐ இருட்டடிப்பு செய்ததா? | The Imperfect Show

'உலகம் சுற்றும் வாலிபன்' அரசியலாக்கப்பட்ட வரலாறு குறித்து, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சிலரிடம் பேசினோம். "திமுக-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டக் காலக்கட்டத்தில்தான், அவர் நடித்த 'இதயவீணை' படம் ரிலீஸானது. எந்தச் சிக்கலும் இல்லாமல், 'காஷ்மீர்... ப்யூடிபுல் காஷ்மீர்' என்று பாடிக் கொண்டே படம் சர்ச்சையில்லாமல் ஓடியது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு எழுந்த ஆதரவும், கட்டுப்படுத்த முடியாமல் போன போராட்டங்களும் தி.மு.க-வின் கண்களை உறுத்தின. எம்.ஜி.ஆர் தான் இயக்கி, தயாரித்து, நடிக்கவிருந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு சிக்கல்கள் முளைத்தன. படத்திற்கு எம்.ஜி.ஆர் முதலில் வைத்திருந்த பெயர், 'மேலே ஆகாயம் கீழே பூமி' என்பதுதான். பிற்பாடுதான் 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று பெயர் மாறியது. தான் இருவேடங்களில் நடித்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து என்று பெரும்பகுதி வெளிநாட்டிலேயே முடித்தார் எம்.ஜி.ஆர். படத்தில் சந்திரகலா, லதா, மஞ்சுளா என மூன்று நடிகைகள் இருந்தும், நான்காவதாக தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத் என்றொரு நடிகையையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் அவர்.

அதிமுக தொடக்கம்

படத்தின் இசையமைப்பாளராக முதலில் புக் ஆனவர் குன்றக்குடி வைத்தியநாதன் தான். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளரானார். வெளிநாட்டு படபிடிப்புக்குக் கூட அதிகம் பேர் அனுமதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஆர்.எம்.வீரப்பன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, நாகேஷ், அசோகன், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குநர் பா.நீலகண்டன், வசனகர்த்தா சொர்ணம், நடன இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே வெளிநாடு ஷூட்டிங்கிற்குச் சென்றார்கள். தாய்லாந்தில் படத்தை ஷூட் செய்வதற்கு வெறும் பத்து நாள்களே அந்த நாட்டு அரசால் அனுமதியளிக்கப்பட்டது. ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அந்த இடத்திற்கு அருகில் விபத்து ஒன்றில் தாய்லாந்து நடிகர் ஒருவர் சிக்கிக் கொண்ட தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற எம்.ஜி.ஆர்., மீட்புப் பணிகளில் தானே களமிறங்கி நிலைமையை சமாளித்திருக்கிறார். இந்தத் தகவல் அடுத்தநாள் வெளிவந்த தாய்லாந்து பத்திரிக்கைகளில் செய்தியானவுடன், எம்.ஜி.ஆர் மீது ஏற்பட்ட நன்மதிப்பால் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை இரட்டிப்பாக்கியது தாய்லாந்து அரசு.

Also Read: ``எம்.ஜி.ஆர் நடித்த `மதுரை வீரன்’ படத்தை மறக்க முடியுமா?!’’ - மதுரை பரப்புரையில் மோடி உரை

ஜப்பானின் எக்ஸ்போ 70 அரங்கில், எட்டு லட்சம் மக்களுக்கு நடுவே, 'உலகம்... அழகுக் கலைகளின் சுரங்கம்' என்ற பாடலின் படப்பிடிப்பை நடத்தியது எல்லாம் அசாத்திய திறமை. படம் ரிலீஸுக்கு தயாராகிருந்த வேளையில்தான் தி.மு.க தரப்பிலிருந்து சிக்கல்கள் முளைத்தன. மதுரை மேயராக இருந்த மதுரை முத்து என்பவர், " 'உலகம் சுற்றும் வாலிபன்' ரிலீஸானால் புடவைக் கட்டிக் கொள்கிறேன்" என்று பகிரங்கமாகவே சவால்விடுத்தார். அந்தச் சூழலில்தான் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு 1973 மே 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அதை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் எம்.ஜி.ஆர் . அவரின் பிம்பத்தை உடைப்பதற்காக மொத்த அமைச்சரவையையும் இடைத்தேர்தல் களப்பணியில் இறக்கிவிட்டு, 'வெற்றியடைந்தே ஆக வேண்டும்' என்று தி.மு.க-வுக்கு கட்டளையிட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. தமிழக அரசியலே கொந்தளிப்பான நிலைக்குச் சென்ற தருணத்தில், 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியாவது திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் மானப் பிரச்னையானது.

எம்.ஜி.ஆர்

வத்தலகுண்டுவில் தேர்தல் பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர் வந்தபோது, அவரது வாகனத்தை மறித்த தொண்டர்கள், 'தலைவரே, உலகம் சுற்றும் வாலிபன் படம் எப்போ ரிலீஸாகும்? தேதியைச் சொல்லுங்க...' என்றனர். 'படம் விரைவில் ரிலீஸாகும். ரிலீஸ் தேதியை இப்பவே சொல்லிட்டா, எல்லோரும் படம் பார்க்குற நினைப்பிலேயே இருப்பீங்க. தேர்தல் வேலையை யார் பார்க்குறது?' என்று சிரித்தபடி அவர்களுக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர். கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவரை விடவில்லை. 'திமுக-காரங்க கேலி பண்றாங்க. எங்களுக்கு இது கெளரவப் பிரச்னை. நீங்க தேதியை சொல்லித்தான் ஆகணும்' என்று விடாப்பிடியாக இருந்தனர். சற்று நேரம் கூட்டத்தை அமைதியாகப் பார்த்த எம்.ஜி.ஆர்., 'மே 11-ம் தேதி உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸாகும்' என்றார். மொத்த கூட்டமும் எழுப்பிய கரவொலியில் வத்தலகுண்டு நகரே குலுங்கிவிட்டது. இடைத்தேர்தலுக்கு ஒன்பது நாள்கள் முன்பாக படத்தை ரிலீஸ் செய்வதாக எம்.ஜி.ஆர் அறிவித்ததால், திமுக வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

Also Read: எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை... நான் பார்த்த சட்டமன்றம்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில், உலகம் சுற்றும் வாலிபனுக்கு தியேட்டர் கிடைப்பதில் திடீர் சிக்கல்கள் முளைத்தன. தியேட்டர் அதிபர்களை நேரடியாகத் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., தியேட்டர் சொத்துக்கு எந்த சேதாரம் ஏற்பட்டாலும் அதற்கு தான் பொறுப்பேற்பதாக உறுதியளித்தார். சென்னை மாநகரில் போஸ்டருக்கான வரி திடீரென உயர்த்தப்பட்டது. உஷாரான எம்.ஜி.ஆர்., சிங்கப்பூரிலிருந்து ஸ்டிக்கர் விளம்பரங்களை வரவழைத்து நகரெங்கும் ஒட்ட வைத்தார். படப்பெட்டிகள் கொண்டு சேர்ப்பதற்கே 'ஜேம்ஸ் பான்ட்' வேலைகளை அவர் பார்க்க வேண்டியதிருந்தது. ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒன்பது போலீ ரீல் பெட்டிகளும், ஒரு ஒரிஜினல் படப்பெட்டியும் அனுப்பப்பட்டன. படப்பட்டி கொள்ளை போகாமலிருக்க இப்படியொரு ஏற்பாட்டை எம்.ஜி.ஆர் செய்திருந்தார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்

படம் ரிலீஸாகும் மே 11-ம் தேதியும் வந்தது. தமிழகமெங்கும் ஆங்காங்கே திடீர் மின்வெட்டு ஏற்பட்டன. ஜெனரேட்டர் உதவியுடன்தான் பல இடங்களில் தியேட்டர்கள் இயங்கின. காவல்துறை அதிகாரிகளுக்கு, 'என்ன நடந்தாலும் தியேட்டர் பக்கம் செல்லக் கூடாது' என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டதால், காவல்துறை பாதுகாப்பு ஏதும் தியேட்டருக்கு அளிக்கப்படவில்லை. தியேட்டர்களை திமுக-வினர் தாக்கிவிடாமல் இருக்க, அதிமுக-வினர்தான் பாதுகாப்பை அளித்தார்கள். இந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறித்தான் 'உலகம் சுற்றும் வாலிபனு’க்கு கூட்டம் கூடியது. படத்தின் ஓப்பனிங் காட்சியில் அ.தி.மு.க கொடி காட்டப்பட்டதும், தியேட்டரில் எழுந்த கரவொலிக்கு அளவே இல்லை. டைட்டில் கார்டில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில், 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியதுமே தியேட்டரில் விசில் பறந்தது.

Also Read: உலகம் சுற்றும் வாலிபன்

பாடலில் வரும், 'நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்... இருந்திடும் என்னும் கதை மாறும்' என்கிற வரிகள் தொண்டர்களை முறுக்கேற்றியது. நினைத்துப் பாருங்கள்... ஆளுங்கட்சியான தி.மு.க-வை எதிர்த்து பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்கும் தொண்டர்கள், இந்த வார்த்தைகளை திரையில் கேட்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? ஆவேச குரல்களும், கைத்தட்டல்களும், விசில்களும் பஞ்சமில்லாமல் ஒலித்தன. கடைசிக்கு இந்தப் படத்தில் அரசியல் பன்ச் வசனங்கள் பெரிதாக ஏதும் இருக்காது. ஆனால், படத்தின் வெற்றியை தன் வெற்றியாக ஒவ்வொரு தொண்டனும் பார்த்ததால், படம் நூறு நாள்களைக் கடந்து ஓடியது" என்றனர்.

உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆருக்குள் இருந்த ஒரு தலைவனை, ஒரு போராளியை வெளியே கொண்டுவந்த படம்தான் 'உலகம் சுற்றும் வாலிபன்'. இதை வெறும் படமாக மட்டும் கடந்துச் சென்றுவிட முடியாது. அதிமுக-வினரிடம் எழுந்த திமுக எதிர்ப்பு உணர்வுக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' சந்தித்த தடைகளும் முக்கியக் காரணம். படத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு காட்சி வரும். அதில், "என் பலம் என்னானு உனக்கு தெரிஞ்சிருக்கும்?" என்று சவால்விடுவார் நம்பியார். பதிலுக்கு, "உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம். ஒரே ஒரு சான்ஸ் கொடேன்" என்பார் எம்.ஜி.ஆர். அந்த சான்ஸை தேர்தல் ஆணையம் கொடுத்தது. 1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றிப் பெற்று சாதனைப் படைத்தார். 'உலகம் சுற்றும் வாலிபன்' படமும், திண்டுக்கல் இடைத்தேர்தலும் தந்த வெற்றியால், மனரீதியாக உற்சாகமடைந்த எம்.ஜி.ஆர்., பிற்பாடு ஆட்சியைப் பிடித்தது தனி வரலாறு.



source https://www.vikatan.com/news/politics/politics-behind-ulagam-suttrum-valiban-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக