Ad

சனி, 4 செப்டம்பர், 2021

பேச்சிப்பாறை அணையை கட்டியது ஆங்கிலேயர்களா?! - சபாநாயகர் பேச்சால் வருத்தத்தில் குமரி மக்கள்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின்போது திருநெல்வேலிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரத்துக்கே தண்ணீர் கொடுக்க எதிர்ப்பு உள்ளதாக விவாதத்தில் கூறப்பட்டது. இந்த விவாதத்தின் நிறைவாக பேசிய சபாநாயகர் அப்பாவு, `பேச்சிப்பாறை அணை ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டியது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், பேச்சிப்பாறை அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் இராமவர்ம ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது எனவும் அந்த அணையின் பொறியாளர்களாக ஆங்கிலேயர்கள் பணிபுரிந்தார்கள் என்றும், இந்த வரலாறு தவறாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டதாக குமரி மக்கள் வருத்தத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது அவையில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்களில் யாரும் இந்த தவற்றை சரிசெய்ய முன்வரவில்லையே என்ற வருத்தமும் குமரி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையில் உள்ள கல்வெட்டு

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த சமயத்தில் பேச்சிப்பாறை அணைக்கு ஸ்ரீமூலம் திருநாள் இராமவர்மா மகராஜா 1897-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். 1906-ல் ஸ்ரீமூலம் ராமவர்மா மகாராஜா பேச்சிப்பாறை அணையை மக்களுக்கு அர்பணித்தார். மதுரையில் பணி செய்துவந்த ஆங்கிலேய இன்ஜினியர்களை இங்கு அழைத்து வந்து பணி செய்தார் மகாராஜா. அதில் ஒரு பொறியாளரான அலெக்ஸாண்டர் மிஞ்சின் என்பவர் இறந்த பிறகு அவரது உடலை பேச்சிப்பாறை அணைப்பகுதியில் அடக்கம் செய்யவும் மன்னர் அனுமதித்தார்.

பேச்சிப்பாறை அணையில் உள்ள கல்வெட்டில் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா அணையை கட்டியதற்கான சான்று உள்ளது. மேலும் அலெக்ஸாண்டர் மிஞ்சின் உள்ளிட்ட பொறியாளர்கள் பெயர்களும் கல்வெட்டில் உள்ளன. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க போராட்டம் நடத்திய தெற்கு எல்லை போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா நம்மிடம் கூறுகையில், "பேச்சிப்பாறை அணை திருவிதாங்கூர் மூலம் திருநாள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

ஆங்கிலேயே இன்ஜினியரான அலெக்ஸாண்டர் மிஞ்சின் அதில் பொறியாளராக இருந்தார். அவர் இறந்த பிறகு அவரது சமாதி பேச்சிப்பாறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் குழப்பத்திற்கு எந்த இடமும் இல்லை. ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா ஆட்சிகாலத்தில், பிரிட்டீஷ் இன்ஜினியரால் கட்டப்பட்டதாக சொன்னால் சந்தேகம் தீர்ந்துபோகும். வேலைக்காரர்கள் யார் வேண்டுமானாலும் பணி செய்வார்கள்.

Also Read: `அரசுப் பதவியுடன் திமுக-வுக்கு தாவும் குமரி அதிமுக நிர்வாகிகள்!’ - கொதிக்கும் தளவாய் சுந்தரம்

மூலம் திருநாள் மகாராஜா ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது எனச் சொன்னால் இந்த பிரச்னை அடிப்பட்டுபோகும்" என்றார்.

இதுபற்றி குமரி பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட புள்ளிவிபரங்கள் தெரியாமல் பேச்சிப்பாறை அணைப் பற்றி கூறியிருக்கக்கூடாது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மன்னர் காலத்தில்தான் அதிகமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

வின்ஸ் ஆன்றோ

பேச்சிப்பாறை அணையை கட்டியது ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா. அதில் இன்ஜினியரிங் பணியை மட்டும்தான் ஆங்கிலேயே பொறியாளர்கள் செய்தார்கள். இந்த விபரத்தை தவறுதலாக கூறியிருப்பதை திருத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாயத்துக்காக திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் இராமவர்மா மகாராஜ கட்டிய பேச்சிப்பாறை அணையை, ஆங்கிலேயர்கள் கட்டியதாக கூறிய பிழையை சரி செய்ய வேண்டும் என்பதே குமரி மக்களின் கோரிக்கையாக உள்ளது!

Also Read: குமரி: கேரளாவுக்குக் கனிமவளம் கடத்திய 11 லாரிகள் பறிமுதல்! - இரு மடங்கு பாரம்; அதிகாரிகள் அதிர்ச்சி



source https://www.vikatan.com/news/tamilnadu/under-whose-ruling-pechiparai-dam-constructed-kumani-peoples-upset-after-assembly-chair-person-comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக