Ad

சனி, 4 செப்டம்பர், 2021

இடியட் பாக்ஸ் - 73 | மாறா கொடுத்த பார்ட்டியில் மார்க்ஸைக் கட்டியணைத்த ஏஞ்சல்… என்ன நடந்தது?!

ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆரஞ்ச் டிவியின் ஆட்கள் மொத்தமும் கூடியிருந்தார்கள். மாறா ஆரஞ்சு டிவியின் ஆட்களுக்காக இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அனைவரது முகத்திலும் சாதித்த சந்தோஷமும் பெருமையும் நிரம்பி வழிந்தது.

கடற்கரையை ஒட்டியிருந்த லானில் பார்ட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீரியல் பல்புகளால் அந்த இடம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒருபுறம் உணவு கவுன்ட்டர்கள் மறுபுறம் டிரிங்ஸ் கவுன்ட்டர்கள் ஒரு புறம் சின்ன மேடை என ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடற்காற்று வீசிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். நெல்லையப்பன், மார்க்ஸ், பாண்டியன் என அனைவரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்.

அனைவரது கையிலும் கண்ணாடி கோப்பைகள்.

“எங்கப்பா உன் ஆளை இன்னும் காணோம்?” என கேட்டார் மார்க்ஸ்.

மார்க்ஸ் அவர் வேற யாரையோ கேட்கிறார் என்பதுபோல போனை பார்த்தபடி மெளனமாகயிருந்தான்.

“உன்னதான்பா கேக்குறேன்” என்றார் நெல்லையப்பன்.

“என்னையா?” என நிமிர்ந்தான் மார்க்ஸ்.

“இந்தக் கூட்டத்துல ஆள் இருக்கிறது உனக்கு மட்டும்தான்” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தார்கள்.

“தெரியலன்ணே” என்றான் மார்க்ஸ்.

“என்ன தல ஒரே வீட்ல ஒண்ணா இருக்கீங்க... கேட்டா தெரியலன்றீங்க ஏதாவது பிரச்னையா?” என்றான் பாண்டியன்

“லவ்வோட அழகே பிரச்னைதான்பா... சாப்பாட்டோட அருமை பசியிலதான் தெரியும் அதான் டிசைனே” என்றார் நெல்லையப்பன்.

“ரெண்டு ரவுண்ட் விட்டா தத்துவங்களை அள்ளி தெளிப்பியே” என்றான் பாண்டியன்.

அனைவரும் சிரித்தார்கள்.

“என்னப்பா ஏதாவது பிரச்னையா?” என நெல்லையப்பன் கேட்க,

மார்க்ஸ் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாயெடுக்க, மாறா நடந்து அவர்கள் அருகில் வரவும் சரியாகயிருந்தது.

“என்னன்ணே எல்லாம் ஓகே வா?” என்றார் மாறா.

“சிறப்பு” எனச் சிரித்தார் நெல்லையப்பன்.

“உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான அயிட்டம் குடுக்க சொல்லியிருக்கேன். நான் கியூபா போனப்ப வாங்கிட்டு வந்தது உங்களுக்கு மட்டும்தான் தர சொல்லியிருக்கேன்” என மாறா சிரிக்க...

“எங்களுக்கு ஸ்பெஷல் அயிட்டம் தர்றது எல்லாம் இருக்கட்டும் நீங்க குடிக்க மாட்றீங்களே!”

“அது அப்படியே பழகிடுச்சு” என்றார் மாறா.

“ஏன் குடிக்க மாட்றீங்க அத சொல்லுங்க முதல்ல” என விடாமல் கேட்டார் நெல்லையப்பன்.

“ஒரு போதைதான்”

“புரியலையே”

“நீங்க கையில வச்சிருக்கிறதை விட போதையான இன்னொரு விஷயம் இருக்கு...”

அனைவரும் எது என்பது போல பார்த்தனர். மாறா புன்னகையுடன் தொடர்ந்தார்.

“தம்பி ரொம்ப நல்லவரு. கிளாஸை கையால தொடக்கூட மாட்டாருன்ற நல்ல பேர் இருக்கு பாருங்க... அது மாதிரி போதை தரக்கூடிய விஷயம் வேற எதுவும் இல்ல” என்றார் மாறா.

அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

“அந்த போதைக்கு பழகிட்டீங்கன்னு வைங்க... அதுல இருந்து வெளிய வரவே முடியாது” என சிரித்தார் மாறா.

“சார் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” எனத் தயக்கமாக நெல்லையப்பன் கேட்க, மாறா சிரித்தார்.

“என்ன கேக்குறதுக்குள்ளயே சிரிக்கிறீங்க?” என்றார் நெல்லையப்பன்.

“தப்பா எடுத்துக்காதிங்கன்னு ஒருத்தர் பேச்ச ஆரம்பிச்சாலே ஏதோ தப்பா எடுத்துக்க போற மாதிரி ஒரு விஷயத்தை கேக்க போறாங்கன்னுதான் அர்த்தம்” என்றார் மாறா.

“அதில்ல சார்....” என நெல்லையப்பன் மீண்டும் ஆரம்பிக்க மாறா இடைமறித்தார்.

“சாரெல்லாம் தேவையில்ல... தம்பின்னு கூப்புடுங்க”

“தம்பி... நான் குடிச்சிட்டு பேசுறேன்னு நினைக்க மாட்டீங்களே?”

“அப்படி நினைச்சுக்கிட்டா நல்லதுதான... நீங்க பேசல நீங்க குடிச்ச சரக்குதான் பேசுதுன்னு உங்கள தப்பா நினைக்க மாட்டேன் இல்ல!”

“அவங்களைதான் கல்யாணம் போறீங்களா?” என நெல்லையப்பன் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியானார்கள்.

“யோவ் மாமா” எனக் கோபமாக மார்க்ஸ் ஏதோ சொல்ல வந்தான்.

“ஆமான்ணே... அவங்களைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்றார் மாறா.

“அருமையான பொண்ணு தம்பி... நீங்க ரெண்டு பேரும் பிரமாதமா இருப்பீங்க... நான் சொல்றேன் எழுதி வச்சுக்கோங்க” என்றார் நெல்லையப்பன்.

“நன்றின்ணே... நீங்க கன்டின்யூ பண்ணுங்க” என்றார் மாறா.

“இன்னும் கூட சில விஷயங்கள் கேட்கணும்” என்றார் நெல்லையப்பன்.

“இங்கயேதான் இருப்பேன். எப்ப வேணா என்ன வேணா கேட்கலாம்” எனச் சிரித்தபடி மாறா நகர்ந்தார்.

அவரைப் பார்த்து சிரித்துவிட்டு தற்செயலாக திரும்பிய மார்க்ஸ் முகம் மாறினான்.

பார்ட்டி நடக்கும் அந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கான படிக்கட்டுகளில் திவ்யா நின்று கொண்டிருந்தாள். இது போன்ற விருந்துகளில் அணிவதற்கான டிசைன் செய்யப்பட்ட சிவப்பு நிற சேலை ஒன்றை அணிந்திருந்தாள். மார்க்ஸ் அவளை பார்த்தபடி இருந்தான். ஏறக்குறைய அங்கிருந்த அனைவருமே அவளை பார்த்தபடி இருந்தார்கள். ஒட்டுமொத்த கூட்டத்தில் அவள் தனித்து தெரிந்தாள். மெதுவாக அவள் படியிறங்கத் தொடங்கினாள். காலை மறைந்திருந்த சேலை அவள் மிதந்து வருகிற தோற்றத்தை தந்தது.

இடியட் பாக்ஸ்

“மார்க்ஸ் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே” என கேட்டார் நெல்லையப்பன். அவன் பதிலுக்கு காத்திராமல் அவரே தொடர்ந்தார்.

“உன் ரேஞ்சுக்கு இந்தப் பொண்ணு கொஞ்சம் ஜாஸ்திதாம்ப்பா” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் புன்னகைத்தான்

“டைட்டானிக் சினிமால படிக்கட்டுல ரோஸ் இறங்கி வரும் பாரு அப்படியிருக்குதுப்பா இந்த சீன்” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் அவளை பார்த்தபடியிருந்தான். நெல்லையப்பன் சொன்னது உண்மை என்று மார்க்ஸுக்குத் தோன்றியது. அவன் அங்கு நிற்பதை தொலைவில் இருந்தே பார்த்த திவ்யா, மெதுவாக வேறு பக்கமாக நகர்ந்து மேனன் தாட்சாவுடன் சேர்ந்து கொண்டாள்.

கூந்தலை சரி செய்வது போல அவள் திரும்பி பார்த்தாள். மார்க்ஸ் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அதை கவனிக்காதவள் போல தலையை திருப்பிக் கொண்டாள். மார்க்ஸின் புன்னகை இன்னும் அதிகமானது.

மாறா மேடை ஏறினார். அனைவரும் கரவொலி எழுப்பினார்கள். மாறாவின் கையில் மைக் கொடுக்கப்பட்டது.

“குட் ஈவ்னிங்...போன வாரம் இதே சமயம் நாம எல்லாரும் வேறு ஒரு மனநிலையில இருந்தோம். நம்ம நிகழ்ச்சி சரியா போகல. அது தோத்து போச்சுன்னு உலகமே சொல்லிச்சு... தோல்வி வரும்போது சோர்ந்து போகாம அது எப்படி சரி பண்றதுன்னு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வேலை செஞ்சோம். இன்னைக்கு இந்த இடத்தில நாம நிக்குறோம்” என மாறா சொன்னதும் கரவொலி அடங்க வெகு நேரமானது.

“உடனே கொண்டாட வேண்டாம், இன்னும் இரண்டு மூணு வாரம் கழிச்சு கொண்டாடலாம். அவசரப்பட்டு ஆடுற மாதிரி தோணும்னு என் மேனேஜர் சொன்னாரு. கஷ்டம் வர்றப்ப காத்திருந்து அழுறது இல்லையே... பட்டுன்னு அழுதுடுறோம்ல... சந்தோஷம் வரும்போது மட்டும் ஏன் காத்திருந்து கொண்டாடணும். உடனே கொண்டாடலாம்னு சொல்லிட்டேன்!”

அனைவரும் சிரித்தார்கள்.

“இது ஒரு வெற்றி கொண்டாட்டம் எல்லாம் இல்ல... கஷ்டப்பட்டு வேலை செஞ்ச நம்ம கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறோம் அவ்வளவுதான். முதல் வார ரேட்டிங் வந்ததும் நான் எடுத்த முடிவு தப்புன்னு சொல்லாத ஆட்கள் கிடையாது. என் கரியரே காலின்ற மாதிரி எல்லாம் பத்திரிகைகள்லயும் சோஷியல் மீடியாலயும் என்ன போட்டு காலி பண்ணாங்க... அதுல இருந்து நான் வெளிய வர்றதுக்கு முக்கியமான காரணமா இருந்தது உங்க டீம்... உங்களுக்கு என்னோட தேங்ஸ். அதோட நானும் இந்த ஷோவும் ஜெயிக்கிறதுக்கு முக்கியமான காரணமா இருந்தது ஒரு ஐடியா. அந்த ஐடியாவை கொடுத்தது உங்க புரோகிராமிங் டீம்ல உள்ள ஒரு ஆள் தான். ஏஞ்சல் மேடைக்கு வாங்க” என்றார் மாறா.

அனைவரும் கரவொலி எழுப்பினார்கள். வெள்ளை நிற டிசைனர் புடவையில் ஏஞ்சல் மேடையேறினாள். அனைவரையும் பார்த்து அவள் கும்பிட்டாள்.

“மார்க்ஸ்... ஏஞ்சல் கூட அழகிதான்ப்பா” என்றார் நெல்லையப்பன்.

“ஆமா” என்றான் மார்க்ஸ்.

“அது எப்படிப்பா அழகான பொண்ணுகளுக்கெல்லாம் உன்ன பிடிக்குது?!”

மார்க்ஸ் பதிலேதும் சொல்லாமல் ஓரக் கண்ணால் தூரத்தில் நின்று கொண்டிருந்த திவ்யாவைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். ஒருவரை ஒருவர் சலனமின்றி பார்த்துக் கொண்டவர்கள் மேடையை பார்த்து திரும்பிக் கொண்டனர்.

“ஒரு சின்ன அன்பு பரிசு” என மாறா தங்கத்தில் செய்த பிரேஸ்லெட் ஒன்றை ஏஞ்சலின் கையில் அணிவித்தார். அதை எதிர்பாராத ஏஞ்சல் திக்குமுக்காடிப்போய் திரும்பி மேனனைப் பார்த்தாள்.

மேனன் பரவாயில்லை என்பது போல கண்களை காட்டினார்.

ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் உள்ள பரிசுகளை வேலை நிமித்தமாக தொடர்பில் இருக்கும் யாரிடமிருந்தும் வாங்கிக் கொள்ள கூடாது என்பது கார்ப்ரேட்டின் முக்கியமான விதிகளில் ஒன்று. ஏறக்குறைய அது லஞ்சம் வாங்குவதற்கு சமம்.

“மேனன் அது தங்க காப்புன்னு நினைக்கிறேன்... ஒகேதானா” என கேட்டாள் தாட்சா.

“ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிக்கலாம். அத வேணாம்னு மறுக்கிறது மாறாவுக்கு மரியாதை குறைச்சலாக இருக்கும்” என்றார் மேனன்.

Also Read: இடியட் பாக்ஸ் - 72 | மாறாவின் நேர்மை, மார்க்ஸின் உண்மை, திவ்யாவின் வெறுமை!

நிகழ்ச்சியின் லோகோ பொறித்த ஒரு ஷீல்ட் ஒன்றையும் மாறா அவளது கையில் கொடுத்தார்.

இது எதையும் எதிர்பாராத ஏஞ்சலின் கண்கள் கலங்கின.

“ஒரு சின்ன யோசனைதான் பல சமயத்தில பெரிய வெற்றிகளுக்குக் காரணமா அமையுதுன்னு நம்பக் கூடியவன் நான். கடின உழைப்பு முக்கியம். அதைவிட சரியான இலக்கு ரொம்ப முக்கியம். இது ரெண்டும் ஒண்ணா சேர்ந்தா...” என நிறுத்தினார் மாறா.

அனைவரும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது போல பார்த்தனர்.

“ஒன்பது டிஆர்பி” என சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“ஏஞ்சல் பேசுங்க” என மாறா மைக்கை ஏஞ்சலிடம் நீட்டினார்.

உணர்ச்சிக் குவியலாக இருந்த ஏஞ்சல் தடுமாற்றத்துடன் மைக்கை வாங்கிக் கொண்டாள். அவள் மைக்கை பிடிக்க வசதியாக அவளது கையில் இருந்த ஷீல்டை மாறா வாங்கிக் கொண்டார்.

ஏஞ்சலின் கண்கள் கலங்கியிருந்தன. அவள் அனைவரையும் சுற்றிப் பார்த்தாள்.

“இது... இதெல்லாம் தெரிஞ்சிருந்தா அம்மாவைக் கூட்டிட்டு வந்திருப்பேன். அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க” என்றாள் ஏஞ்சல்.

மார்க்ஸுக்குள் சட்டென ஏதோ ஒன்று சட்டென உடைந்தது.

“ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து இப்பவரைக்கும் மேடை ஏறி பரிசோ பாராட்டோ நான் வாங்குனதே இல்லை.. இதுதான் ஃபர்ஸ்ட் டைம்” எனக் குரல் தழுதழுக்க மாறாவை பார்த்து சொன்னாள் ஏஞ்சல்.

“இதுக்கப்புறம் நிறைய வாங்குவீங்க” என்றார் மாறா.

யோசித்துப் பார்த்தால் எல்லோருடைய வாழ்க்கையிலும் அப்படி ஒரு மாற்றம் தரும் தருணம் வரும். இது ஏஞ்சலின் தருணம் என தோன்றியது மார்க்ஸுக்கு.

“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல... ரொம்ப ஃபார்மலா இவங்களுக்கு நன்றி அவங்களுக்கு நன்றின்னு சொல்லக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, ஒரே ஒருத்தனுக்கு நான் இந்த இடத்துல நன்றி சொல்லியே ஆகணும்” என்றாள் ஏஞ்சல்.

“அது நீதான்ப்பா” என்றார் நெல்லையப்பன்.

“எனக்கெல்லாம் எதுக்கு அவ நன்றி சொல்லப் போறா?” என்றான் மார்க்ஸ்.

திவ்யா சின்ன படபடப்புடன் காத்திருந்தாள்.

இடியட் பாக்ஸ்

“மார்க்ஸ் கொஞ்சம் மேடைக்கு வாயேன்” என்றாள் ஏஞ்சல்.

மார்க்ஸ் ஏஞ்சல் தனது பேரை சொல்வாள் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“மார்க்ஸ் வா...” என ஏஞ்சல் மீண்டும் அழைக்க அனைவரது கரவொலிகளுக்கு நடுவில் மார்க்ஸ் தயக்கமாக மேடை ஏறினான்.

“என்னடா ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தோட கிளைமாக்ஸ் நடக்குது?” என்றார் நெல்லையப்பன். பாண்டியன் புன்னகைத்தான்.

“எல்லாரும் என்ன அழகான பொண்ணு, ஆங்கர் பண்ணுன்னு சொன்னப்ப நீ ரொம்ப அறிவான பொண்ணு புரோகிராமிங்ல சேருன்னு சொல்லி என் வாழ்க்கையை மாத்திவிட்டது இவன்தான். எனக்கு இதுல ஏபிசி கூட தெரியாது. எல்லாத்தையும் பொறுமையா கத்து குடுத்தது என்ன சப்போர்ட் பண்ணி, தோத்து போறப்ப என்கரேஜ் பண்ணி...” என மேற்கொண்டு பேச முடியாமல் ஏஞ்சல் குரல் உடைந்தது....

மொத்த அலுவலகமும் வித்தியாசமான ஏஞ்சலை பார்த்தது.

“என்னோட மென்ட்டார்... ரோல் மாடல், குரு, ஃபிரண்ட், எதிரி, என் லவ் எல்லாம் இவன்தான்” என ஏஞ்சல் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கினாள்.

“ஏய்... எதுக்கு அழற?” என மார்க்ஸ் ஏஞ்சலை ஒரு கையால் அணைத்துக் கொண்டான்.

“சாரி” என ஏஞ்சல் அவள் தோளில் சாய்ந்து அழுதாள்.

“அதிகம் நேசிப்பவர்களிடம்தான் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. எதிர்பார்ப்பு அதிகமாகும்போது ஏமாற்றங்கள் அதிகமாகின்றன. ஏமாற்றங்கள் கோபமாகவும் வெறுப்பாகவும் மாறுகின்றன. ஆனால், அது அனைத்துக்கும் தொடக்கப்புள்ளி அன்புதான். ஒருவர் மேல் வெறுப்பையும் கோபத்தையும் தூக்கிபோட முடியவில்லை என்றால் இன்னும் உங்கள் மனதில் அவர் மேல் அன்பு மிச்சமிருக்கிறது என்றுதான் அர்த்தம். நிஜமான வெறுப்பு என்பது சம்பந்தபட்டவர்கள் மேல் எந்தக் கோபமும் இல்லாமல் அவர்களின் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான்.

ஏஞ்சல் மார்க்ஸை எவ்வளவு வெறுத்தாள் என்பது அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். அந்த வெறுப்புக்கு பின்னால் இத்தனை அன்பு ஒளிந்திருந்தது என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.

தவறான முடிவுகள் எடுப்பதென்பது எல்லாரும் செய்வது. எடுத்த முடிவு தவறென தெரியும்போது சட்டென அதை ஒப்புக் கொள்வதுதான் அந்தத் தவற்றை சரி செய்து கொள்வதற்கான ஒரே வழி. மன்னிப்பு என்பது வெறும் வார்த்தையல்ல நிஜமான மனமாற்றம். மன்னித்தலை விட பல சமயங்களில் மன்னிப்பு கேட்பதே பெருந்தன்மை.

மாறாவுக்கு அவர்களது பின்கதை எதுவும் தெரியாமல் போனாலும் அவர்களது உணர்வுகளை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏஞ்சல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் மீண்டும் மைக்கை கையில் எடுத்தாள்.

“சாரி... இவ்வளவு சீனாகும்னு நான் நினைக்கல” என்றாள்

அனைவரும் புன்னகைத்தனர்.

“எல்லாருக்கும் வாழ்க்கையில ஒருத்தங்க இருப்பாங்க. அவங்கதான் இன்னைக்கு நாம இருக்கிற உசரத்துக்குக் காரணமா இருப்பாங்க. அப்படி எனக்கு பின்னால இருந்தது, இருக்கிறது மார்க்ஸ்தான். எவ்வளவோ பிரச்னைகள் எங்களுக்குள்ள இருந்திருக்கு. இன்னும்கூட இருக்கு. ஆனா சட்டுனு திரும்பி பார்த்தா இவன் ஒருத்தன்தான் நிஜமாவே என் பின்னால இருந்திருக்கான். அதை புரிஞ்சிக்கிற வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மாறா சாருக்கு நன்றி” என்றாள் ஏஞ்சல்.

மாறா புன்னகையுடன் தலையாட்டினார். ஒரு கையால் ஏஞ்சலை அணைத்தபடி மேடையிலிருந்து இறங்க மார்க்ஸ் முற்பட்டான்.

“மார்க்ஸ் நில்லுங்க... எங்க போறீங்க.. உங்கள பத்தி ஏஞ்சல் என்ன நினைக்கிறாங்கன்னு சொல்லிட்டாங்க... நீங்க அவங்களை பத்தி சொல்ல வேண்டாமா?” என்றார் மாறா.

“அப்படிப் போடுங்க சார்” என்றான் பாண்டியன்.

“ஏண்டா.. இந்த டிராமா நம்ம ஷோல கூட இல்லையடா... இப்படி ஒரு டிராமா, ஷோல சிக்குனா 20 ரேட்டிங் வருமே” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் தயங்க, அவனது கையில் மைக் திணிக்கப்பட்டது.

மேடை வெளிச்சமாகவும் எதிர்புறம் சற்று வெளிச்சம் குறைவாகவும் இருந்ததால் அவனால் திவ்யாவின் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. வேறு உணர்வுகள் அவனை ஆட்கொண்டிருந்ததால் அவன் அப்போது திவ்யாவை பற்றி யோசிக்கிற மனநிலையில் கூட இல்லை.

மார்க்ஸ் மைக்கைப் பிடித்தபடி சற்று நேரம் தயங்கினான்.

“டேய் பாண்டியா திவ்யாவுக்கு ஒரு குளோஸ் அப் கட் பண்ணு” என்றார் நெல்லையப்பன்.

பாண்டியன் திரும்பிப் பார்த்தான்.

“மாமா... திவ்யா ஹைடிங்ல இருக்கு... எமோஷன் என்னன்னு சரியா தெரியல.”

“ஏஞ்சல்தான் என்னோட அது... இதுன்னு எதையாச்சும் மார்க்ஸ் உளறிக் கொட்டப்போறான். அதோட திவ்யா சாப்டர் முடிய போகுது” என்றார் நெல்லையப்பன்.

“எனக்கும் அதுதான் மாமா தோணுது” என்றான் பாண்டியன்.

“மார்க்சு சொதப்பிடாதடா... ஏஞ்சல் என் தங்கச்சின்னு சொல்லி எஸ்கேப் ஆயிடுடா” என்றார் நெல்லையப்பன்.

அவருடன் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

“எனக்கு ஏஞ்சலை ரொம்ப பிடிக்கும்” என ஆரம்பித்தான் மார்க்ஸ்.

“சோலி முடிஞ்சுது” என்றார் நெல்லையப்பன்.

“நல்ல ஆங்கர்... ஸ்கிரிப்ட் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர். அவளோட ஷோவுக்கு அவதான் ரைட்டர். அவளோட ஷோவுக்கு டைரக்டரும் கிடையாது. அவளே அதை பார்த்துப்பா”

“போதும்பா” என்றார் நெல்லையப்பன்.

“இன்னொரு முக்கியமான விஷயம் எதுவா இருந்தாலும் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட கேக்குற பழக்கம் அவளுக்குக் கிடையாது. கூகுள்தான் அவளுக்கு குரு. எதையுமே தேடி தெரிஞ்சுகிறது அவளோட ஸ்டைல். புரோகிராமிங்ல வேலை செய்ய சொன்னப்ப ஆன்லைன்ல இரண்டு வருஷம் கோர்ஸ் பண்ணி கத்துக்க வேண்டிய விஷயங்களை அவளே கத்துகிட்டா. அவளோட வெற்றிகளுக்கு நான் காரணம் இல்ல. அவளோட அறிவும் உழைப்பும்தான் காரணம்” என்றான் மார்க்ஸ்.

“ஏன் மாமா தலை மீட்டர ஏத்திகிட்டே போகுது...” என்றான் பாண்டியன்

“ஏழரை சாட்டன் ஒருத்தனை நெருங்கும்போது இதெல்லாம் நடக்கும்டா” என்றார் நெல்லையப்பன்.

“ரொம்ப திறமையான ஒரு ஆள். சரியான வாய்ப்பு அமையல. ஏதோ ஒரு விதத்தில நானும் அதுக்கு காரணமோன்னு எனக்கு கில்ட்டியாதான் இருக்கு. அந்த வாய்ப்பு இப்பதான் வந்திருக்கு. இன்னும் பல உயரங்களைத் தொட ஏஞ்சலால முடியும். நான் ஏஞ்சலோட அட்வைஸை சப்போர்ட்டை நிறைய மிஸ் பண்ணியிருக்கேன். இத எல்லாத்தையும் விட எப்பவுமே உன்னை என்னால வெறுக்க முடிஞ்சதே இல்லை... ஐ ஆல்வேஸ் லவ் யூ ஏஞ்சல்” எனச் சொல்லும் போதே மார்க்ஸின் குரல் உடைந்து கண்கள் கலங்கியது.

அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்.

ஏஞ்சல் மார்க்ஸை அணைத்துக் கொண்டாள்.

மார்க்ஸ் ஆதரவாக ஏஞ்சலின் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

“இப்ப இந்த ஐ லவ் யூ தேவையா?” என்றார் நெல்லையப்பன்.

“தல அந்த அர்த்தத்தில சொல்லல” என்றான் பாண்டியன்

“எந்த அர்த்தத்தில சொன்னா என்ன? லவ்வுக்கு அர்த்தம் லவ் தானய்யா" என்றார் நெல்லையப்பன்.

அவர்கள் மேடையிலிருந்து இறங்கினார்கள். பார்ட்டி மீண்டும் களை கட்டியது.

மார்க்ஸ் கூட்டத்தில் திவ்யாவைத் தேடினான். பாண்டியன் அருகில் வந்தான்.

“தல... அந்தப் பக்கம்...”

மார்க்ஸ் திரும்பி பார்த்தான். பார்ட்டி நடக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி கடலுக்குச் சற்று அருகில் திவ்யா நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

Also Read: இடியட் பாக்ஸ் - 71 | மாறாவின் போன் அழைப்பும், ஆரஞ்சு டிவியின் பதற்றமும்!

இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் மெதுவாக திவ்யாவை நோக்கி நடந்தான்.

விளக்குகளின் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது. நிலவின் வெளிச்சத்துக்கு மார்க்ஸின் கண்கள் பழகத் தொடங்கின.

நிலவொளி கடலில் பிரதிபலிக்க கடலை பார்த்தபடி திவ்யா சிவப்பு நிற புடவையில் நின்று கொண்டிருந்தது ஒரு ஒவியமாக மார்க்ஸின் கண்களுக்குத் தெரிந்தது.

அவன் மெதுவாக அவள் அருகில் வந்து நின்றான்.

அவன் பின்னால் வந்து நின்றது திவ்யாவுக்கு தெரிந்தும் அவள் திரும்பாமல் மெளனமாக நின்றபடியிருந்தாள்.

“திவ்யா” என்றான் மார்க்ஸ்.

அவனது சத்தத்தை விட அலையின் சத்தமும் காற்றின் சத்தமும் அதிகமாயிருந்தது.

“திவ்யா” எனச் சற்று குரலை உயர்த்தி அழைத்தான் மார்க்ஸ்.

திவ்யா மெதுவாக திரும்பினாள்.

அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

மார்க்ஸைப் பார்த்ததும் அது அழுகையாக மாறியது!

- Stay Tuned...



source https://cinema.vikatan.com/literature/idiot-box-part-73-angel-and-marx-share-an-emotional-moment-in-front-of-maara

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக