Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

`உங்களின் வெற்றி உலக மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது!' - கமலா ஹாரிஸுடனான சந்திப்பில் மோடி

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இன்று நடைபெறவிருக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்றைய தினம் அமெரிக்கா சென்றடைந்தார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடி முதன்முறையாக அவரைச் சந்திப்பதால், மோடியின் அமெரிக்கா விஜயம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலுள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்தில் இறங்கிய நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல், ஆண்ட்ரூஸ் தளத்தில் நரேந்திர மோடிக்கு அமெரிக்கவாழ் இந்தியர்களும் அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவில் மோடி

அதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்ட மேம்பாடு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு துறைரீதியான ஆராய்ச்சிகள் குறித்து பல்வேறு நிறுவனத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு 7 மணி முதல் குவால்காம், அடோப், பிளாக்ஸ்டோன் மற்றும் பிற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து முதலீடுகள் குறித்துப் பல மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தினார்.

குவால்காம் நிறுவனத் தலைவர் கிறிஸ்டியானோ ஆர்.அமோனுடனான பிரதமர் மோடியின் சந்திப்பின்போது, இந்தியாவில் 5-ஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பாக குவால்காம் தலைவர் விருப்பம் தெரிவித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மோடியுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் விட்மார், ``தொழில்துறை கொள்கைக்கும் வர்த்தகக் கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான சமநிலையை உருவாக்க, பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது இந்தியாவில் ஃபர்ஸ்ட் சோலார் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் விட்மார்

அதேபோல், ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் லால், ``இது ஒரு சிறந்த சந்திப்பு. தொழில்நுட்பம், இந்தியாவில் வரும் கொள்கைச் சீர்திருத்தங்கள் மீதான நம்பிக்கை, முதலீட்டுக் கண்ணோட்டத்தில் இந்தியாவிடம் உள்ள சிறந்த சாத்தியக்கூறுகள் பற்றிக் கலந்தாலோசித்தோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் லால்

அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர், நரேந்திர மோடி இந்திய வம்சாவளியான அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவும் அமெரிக்காவும் எப்போதுமே பங்காளிகள்தான். இரு நாடுகளுக்கும் பல்வேறு விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் மிகப்பெரிய, மிகப் பழைமையான ஜனநாயக நாடுகள். இரு நாடுகளும் மதிப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றன. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கமலா ஹாரிஸைத் தற்போதுதான் முதன்முதலில் நேரில் சந்தித்துப் பேசுகிறேன்.

நரேந்திர மோடி - கமலா ஹாரிஸ்

இதற்கு முன்னர், ஒருமுறை மட்டும் தொலைபேசியில் வாழ்த்தியிருக்கிறேன். அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலாவின் தலைமையில் அமெரிக்கா, இந்தியாவின் இருதரப்பு உறவு இன்னும் பல உச்சங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். முதல் கறுப்பினப் பெண்ணாக அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் கமலா ஹாரிஸ் உலக மக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருக்கிறார். அவரை இந்த நேரத்தில் நான் இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன். இரு நாட்டு மக்களின் ஒற்றுமைதான் இரு நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்குச் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. தொடர்ந்து, இரு நாட்டு உறவு மேம்படப் பாடுபடுவோம்" என்றார்.

Also Read: அமெரிக்காவில் மோடி | குவாட் கூட்டணி உருவானது ஏன்... சீனாவின் கோபமும், ஆபத்துகளும்!

அவரைத் தொடர்ந்து பேசிய அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ``அமெரிக்காவுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கப்படும் என்ற இந்தியாவின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். இந்தியா இந்த இக்கட்டான சூழலில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் மிகுதியாக இருந்த நேரத்தில் அதன் தேவையை உணர்ந்து நாங்கள் செயல்பட்டது எங்களுக்குப் பெருமிதமாக இருக்கிறது. இந்தியா, இந்தத் தடுப்பூசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மற்ற உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. நோய்த்தொற்றின் ஆரம்பகட்டத்தில் இந்தியா பல்வேறு உலக நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கி உதவியது. இந்தியா பருவநிலை நெருக்கடியைத் தீவிரமாக கவனத்தில் கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்த நெருக்கடிகளிலிருந்து நம் நாட்டு மக்களைக் காப்பது மட்டுமின்றி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

நரேந்திர மோடி - கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸுடனான சந்திப்பைத் தொடர்ந்து நரேந்திர மோடி, குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா வந்திருந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவைச் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்துத் தகவல் வெளியிட்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜப்பான் பிரதமருடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின்போது, இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, விநியோகச் சங்கிலி பின்னடைவு, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவுடன் மோடி

Also Read: அமெரிக்காவில் மோடி | குவாட் கூட்டணி உருவானது ஏன்... சீனாவின் கோபமும், ஆபத்துகளும்!

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி இன்று இரவு 11:30-க்கு குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். அதற்கு முன்னதாக, இன்றிரவு 8:30 மணிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசவிருக்கிறார். இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பில் பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து தாலிபன்கள் மற்றும் பாகிஸ்தான் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/international/pm-narendra-modis-america-visit-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக